The side that is not spoken about, generally.

என் வாதங்கள் தவறு என்று நிரூபணமானாலோ அல்லாது போனாலோ அது பற்றீக் கவலை இல்லை. ஆனால் உண்மை என்று நான் அறிந்தவற்றை, எனக்குள் உணர்ந்தவற்றை நான் என் மொழி அறிவின் வழியாக எடுத்துரைத்த விதம் தவறு என்று வேண்டுமானால் நிரூபணமாகலாமே ஒழிய நான் அறிந்த உண்மை தவறு என்று நிரூபணமாவது முடியாது என்பது என் நம்பிக்கை.

எனக்காக என் சிஷ்யர்கள் செய்துள்ள தியாகங்கள் எத்தனை ? அவர்கள் இல்லை என்றால் இன்று நான் இல்லை என்னும் அளவிற்கு சிஷ்யர்கள் என்னிடம் ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள். இத்தனைக்கும் நான் அவர்களுக்கு என்ன செய்து விட்டேன் ? என்னால் அவர்களுக்கு ஒரு பவுன் காசு கொடுக்க முடிந்ததா ? ஒரு கால் பணம் உபயோகம் இல்லாத என்னிடம் இவ்வளவு விசுவாசம் ஏன் ? அப்படி என்ன செய்தேன் நான் ?

ஒரே காரணம் தான்.

நான் மனதில் பட்டதை வாக்கில் தெரிவித்தேன். வாக்கில் தெரிவித்தபடி வாழ்ந்தேன். அவ்வளவே. பிற்காலத்தில், சில நூறு வருஷங்கள் கழித்து ஒரு சைவ மத ஸ்வாமி தோன்றுவார். ‘உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்’ என்று தன் தெய்வத்திடம் வேண்டுவார். அவர் பின்னாளில் கேட்டுக்கொண்ட படியே நான் இந்நாள் வரை வாழ்ந்துள்ளேன். அவ்வளவு தான்.

ஆழ்ந்த வியாக்கியானங்களுக்குள் போவதற்குள் ஒன்றைத் தெளிவு படுத்த விரும்புகிறேன். என் வாயால் கூறப்பட்ட அல்லது என் வழியாக உங்களுக்குச் சொல்லப்பட்ட உண்மையின் சாராம்சம் இது தான் – நானும் உறங்காவில்லியும் ஒன்று; அவனும் அவனது மனைவி பொன்னாச்சியும் ஒன்று; அவளும் அவள் வளர்க்கும் நாயும் ஒன்று; அந்த நாயிம் அது வைத்து விளையாடும் தேங்காயும் ஒன்று தான்.

படித்தவர்கள், பண்டிதர்கள் முதலானவர்கள் என் தத்துவத்தை உங்களுக்கு எப்படிக் கூறியுள்ளார்களோ தெரியவில்லை.

நான் உணர்ந்தது இது தான். இதைத் தான் நான் பல வகைகளாகச் சொல்லியிருக்கிறேன்; அல்லது இதுவே மக்களின் அறிவு நிலைக்கு ஏற்ப என் வழியாகச் சொல்லப்பட்டது. நீங்களும் இதையே படித்திருந்தீர்களேயானால் நான் சொன்னதைத்தான் நீங்கள் படித்துள்ளீர்கள் என்று அர்த்தம்.

இது எனக்கு மட்டுமே ஏற்பட்ட தரிசனமா ? எனக்கு முன்னமேயே யாருக்கும் ஏற்படவில்லையா ? என்று நீங்கள் கேட்கலாம்.

இது பிரபஞ்ச உண்மை. பிரபஞ்ச உண்மைகளை மனிதனால் உணரவே முடியும். ஒரு போதும் மாற்ற முடியாது. இந்தப் பிரபஞ்சமும் அண்ட சராசரங்களும் இருக்கும் வரை இந்த உண்மை இருக்கும். எனக்கு முன்னமேயும் இந்த உண்மை இருந்தது. ஆனால் அதனைக் கண்டவர்கள் சரியாக உணரவில்லை அல்லது உணர்ந்ததை சரியாக உரைக்கவில்லை. இதுவே என் நம்பிக்கை.

ஏனெனில் இந்த உண்மைகள் எனக்கு மட்டுமே புரிந்தன என்று நான் கூறினால் அது உண்மை இல்லை. எனக்கு முன்னமேயே இருந்த பெரியவர்கள் என்னை விடவும் இன்னும் பலரை விடவும் அறிவில் பெரியவர்கள். ஆத்ம விசாரத்தில் பெரிய அளவு அனுபவம் கொண்டவர்கள். அவர்களுக்கு இது புரியவில்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை.

உதாரணமா ஆதி சங்கரரை எடுத்துக்கொள்கிறேன். எனக்கு 400 ஆண்டுகள் முன்னர் வாழ்ந்தார். ‘அத்வைத’ சம்ப்ரதாயம் என்று வகுத்தார். அவரும் என்னைப்போல வைதீக மதஸ்தரே. ஆனால் அவரது ‘அத்வைதம்’ என்ன சொன்னது ? பரப்பிரும்மம் ஒன்று. வேறு ஒன்றுமே இல்லை. வேறு ஒரு வஸ்துவும் உண்மையில் இல்லை. மற்ற எல்லா உயிர்களும் அந்தப் பரப்பிரும்மத்தின் ‘சாயை’ கள், ‘பிம்பங்கள்’ என்று கூறினார்.

அதாவது, நான், நீங்கள், இந்த விசிறி, ஓலைச்சுடவடி முதலியன உண்மை இல்லை. இவை அனைத்தும் மாயை என்றார்.

நான் கேட்கிறேன்: வீதியில் பெருமாள் ஏழுந்தருள்கிறார். உற்சவம் நடக்கிறது. ஒரே கூட்டமாக உள்ளது. அப்போது கூட்டத்தில் ஒரு பாம்பு போன்று ஒன்று தெரிகிறது. அப்போது என்ன செய்வார்கள் மக்கள் ? பாம்பைக்கண்டு ஓடுவார்களா இல்லையா ? அல்லது பாம்பு என்பது மாயை, அப்படி ஒன்றும் இல்லை; நான் என்பதும் மாயை; அப்படியும் ஒன்றும் இல்லை. பாம்பாகிய மாயை நானாகிய மாயையை ஒன்றும் செய்யாது. எனவே இந்தப் பாம்பாகிய மாயை அப்படியே இருக்கட்டும் என்று நாம் செல்வோம் என்று செல்வார்களா ?

இப்படி அடிப்படை சற்று ஆட்டம் காணும் சித்தாந்தமாக சங்கர அத்வைதம் இருந்தது. ஆனால் சங்கரரது சேவை அளப்பரியது.

பரப்பிரும்மம் என்பதே ஒன்று இல்லை என்று பௌத்தம் ரொம்பவும் ஆணித்தரமாக முழங்கி வந்த காலம் அது. வேதம் பொய்; பரம் பொருள் என்று ஒன்று கிடையாது என்று ஆணி அடித்தாற்போல் சொன்னான் பௌத்தன். அதனால் சனாதன தர்மம் அழிந்தது. தற்போது ஸ்ரீரங்கத்தில்  ஒரு பெரும் புயல் அடித்து ஓய்ந்ததே, அதைப் போல் தோன்றினார் ஆதி சங்கரர். அந்தப் புயலில் அவைதீகமான பௌத்தமும் அதை ஒத்த ஜைனமும் அடித்துச் செல்லப் பட்டன. நமது சனாதன தர்மம் காக்கப்பட்டது.

இப்படி இருந்தாலும், ஆதி சங்கர பகவத்பாதர் தான் கண்ட தரிசனத்தை சரியாக உணர்ந்து உரைக்கவில்லை என்று தோன்றுகிறது.

ஒரு ப்ரும்மம் இருக்கிறது என்பது வரை சரி. ஆனால் மற்றவை எல்லாம் மாயை என்பது சரி இல்லை என்பதே என் கருத்து. பரமாத்மாவாகிய ப்ரும்மத்துடன் ஜீவாத்மாக்களாகிய நம்மைப் போன்றவர்கள் கலந்துவிவர் என்று சொல்கிறார் அவர். ஆனால் நாம் தான் இல்லையே  என்றால், ‘அதுவும் சரி தான். நாம் இல்லை. நாம் ப்ரும்மத்தின் கண்ணாடித் தோன்றல்கள் போன்றவர்கள். சூரியன் ஒருவன் ஒளி தருகிறான். அவனது ஒளி கண்ணாடியில் பட்டு நம் கண்களுக்குத் தெரிகிறது. ஆக சூரிய ஒளி என்பது கண்ணாடி ஒளி அல்ல. ஆனால் கண்ணாடி ஒளி என்பது சூரியனின் பிம்ப ஒளி. எனவே, இந்தக் கண்ணாடி ஒளி ஒரு நாள் சூரியனிடம் சேர்ந்துவிடும். அதுவே அத்வைத சைத்தாந்தம் என்று சங்கர பாஷ்யம் கூறுவதாக ஒரு பண்டிதர் கூறினார்.

நான் கேட்டேன்,’ அப்படி என்றால் அந்தக் கண்ணாடி என்பது என்ன?’ என்று கேட்டேன். ஒரு வேளை ஆச்சாரியனாக இருக்கலாம் என்கிறார் அவர்.

பிறகு நான் சொன்னேன்,’ ஸ்வாமி,  சங்கரரிடம் எனக்கு ஏகப்பட்ட மரியாதை உண்டு. நமது வைதீக சம்பிரதாயத்தையே மீண்டும் ஸ்தாபித்தவர் அவர். ஷண்-மதங்களான ( 6 மதங்கள்) கௌமாரம், சைவம், வைஷ்ணவம்,  சாக்தம், காணாபத்யம் என்று ஆறு தரிசனங்களைக் காட்டினார் அந்த மஹான். ஆனால் சித்தாந்தத்தில் குழப்பி விட்டார். தேவரீர் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது’, என்று கூறி நமது சித்தாந்தம் என்னவென்று விளக்கினேன்.

சங்கரரது அத்வைத சித்தாந்தம் பற்றி மட்டும் பேசிப் பின்னர் நமது விஸிஷ்டாத்வைதம் போகலாமா என்று கூரத்தாழ்வானிடம் விசாரித்தேன். அவர் சொன்னார், ‘ஸ்வாமி, தேவரீர் பௌத்தம், ஜைனம், சைவம், சார்வாகஹம் என்று பல சித்தாந்தங்களையும் பற்றி உபன்யாஸித்துப் பின்னர் விஸிஷ்டாத்வைதம் புகலாமே. எங்களுக்கும் ஒரு பாடமாக இருக்கும்’, என்று பதில் சொன்னார்.

கூரத்தாழ்வான் சாத்தித்தால் நாம் அப்படியே கேட்டுவிடுவது வழக்கம். அவர் பரம பாகவதர். என் உயிரைக் காத்தவர்; எனக்காகத் தன் கண்களை இழந்தவர். காஞ்சி வரதனிடம் பெரும் பக்தி கொண்டவர். ஸ்ரீபாஷ்யம் எழுதும் போது நான் உபன்யாசத்தில் சொல்லச் சொல்ல அதை அவர் எழுதிக்கொண்டு வந்தார். இன்றளவும் ஸ்ரீபாஷ்யம் உங்கள் கைகளில் இருக்கிறதென்றால் அதற்கு கூரத்தாழ்வானே காரணம்.

எதற்குச் சொல்கிறேன் என்றால் கூரத்தாழ்வான் சொல்லை என்னால் மீற முடியாது. அப்படி பக்தியாலும் கைங்கர்யத்தாலும் என்னைக் கட்டிப் போட்டவர் அவர். அவரது மடியில் தலை வைத்தபடி அப்படியே பரமபதிக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். ஆனால் அரங்கன் அவரை முன்னமேயே தன்னடி சேர்த்துக்கொண்டுவிட்டான்.

சரி, சங்கர மத பண்டிதருக்கு நான் என்ன பதில் சொன்னேன் என்று பார்ப்போம்.

நான் இராமானுசன் – பகுதி 1

நான் இராமானுசன் – பகுதி 2

நான் இராமானுசன் – ஒரு துவக்கம்

Go back

Your message has been sent

Warning
Warning
Warning
Warning

Warning.

Leave a comment