The side that is not spoken about, generally.

எமது சித்தாந்தம் இது தான்.

சித்து, அசித்து, ஈசன் – இவை மூன்றுமே உண்மை. சித்து ஜீவாத்மாக்களைக் குறிக்கிறது. அசித்து ஜடப்பொருட்கள். ஈசன் – ப்ரும்மம். இந்த மூன்றுமே உண்மை தான்.

அனைவருமே மோட்சம் அடைய முடியும். அதனால் மேல் உலகிலும் இவர்களுக்குள் வேறுபாடு இல்லை. இது மட்டும் இல்லை.  உயிரற்ற ஜடப் பொருட்கள் உள்ளனவே , அவற்றுக்கும் ஆத்மா உண்டு என்று நான் சொன்னேன். ஏன் எனில் இந்த உலகம் ஜீவாத்மா, பரமாத்மா மற்றும் ஜடப்பொருட்களால் ஆனது என்பது எமது சித்தாந்தம்.

ஜீவாத்மாக்கள் அனைத்தும் பரமாத்மாவை அடைய முடியும். ஜீவாத்மாவும் உண்மை. பரமாத்மா மட்டுமே உண்மை என்பது தவறு. ஜடப்பொருட்களும் உண்மை. ஏனெனில் ஜடப்பொருட்கள் உண்மை என்றால் தான் ஜீவாத்மாக்கள் அவற்றைக்கொண்டு சிறந்த உபவாசங்கள், ஆராதனங்கள் செய்து பரமாத்மாவை அடைய முடியும்.

ஜீவாத்மாக்கள் பரமாத்மாவை அடைய பல உபாயங்கள் உள்ளன. அவற்றில் மிக சுலபமானதும், எல்லாராலும் அனுஷ்டிக்கப்படுவதும் பிரபத்தி என்னும் சரணாகதி. இதனைச் செய்பவன் பிரபன்னன்.

ஜீவாத்மா பஞ்ச சம்ஸ்காரம் என்னும் முறைப்படி தன் குருவினால் ஆற்றுப்படுத்தப் படுகிறான். பஞ்ச சம்ஸ்காரம் என்பது என்ன ?

பெருமாளின் சங்கு சக்கர முத்திரைகளைத் தம் தோளில் தரித்துக்கொள்ளுதல், பெருமாளின் பாதங்களைத் தம் நெறியில் சாற்றிக் கொள்ளுதல், பகவானுடைய தாசன் என்று தன் பெயரை மாற்றிக் கொள்ளுதல், குரு முகமாக அஷ்டாட்ஷர மந்திரம் ( ஓம் நமோ நாராயணாய ), த்வயம் , சரமசுலோகம் என்று அறிந்து கொள்ளுதல், குருவிடமிருந்து ஆராதனைக்கு சாளக்கிராமம் பெற்றுக்கொள்ளுதல் – இவையே பஞ்ச சம்ஸ்காரம் என்பது.

இவை போதுமா ஜீவாத்மா மோக்ஷம் பெற ? இல்லை. இவை இருந்தாலும் இவற்றுக்கு மேல் அவனது பூர்வ கர்ம பலன்கள் இருப்பதால் அவன் இன்னமும் மோக்ஷம் அடைய முடியாமல் தவிக்கிறான். எனவே அதனையும் போக்க குருவினிடம் சென்று தன் பூர்வ ஜென்ம கர்ம பலன்களை சமர்ப்பிக்கிறான். அதாவது தனது பாரத்தை குருவின் மேல் சுமத்துகிறான். இதற்கு ‘பார நியாஸம்’ என்று பெயர். பார நியாஸம் நடந்த பின் அவன் மோக்ஷத்திற்குத் தயாராகிறான்.

இதில் குல வித்யாசங்கள் இல்லை. யாரும் பார நியாஸம் செய்துகொள்ளலாம்.

பஞ்ச சம்ஸ்காரம் முடிந்த யாரும், பார நியாஸம் முடிந்த பின் ஒருவரே. ஜீவாத்ம நிலையில் ஒன்றே.

‘இதில் தேவரீருக்கு  ஆக்ஷேபம் என்ன ?’ என்று கேட்டேன்.

‘இருந்தாலும் அனைவரும் ஒன்று என்பது எப்படி ஸாத்யம் ஆகும்? நானும் நீங்களும் ஒன்றா?  அதோ அந்த மூலையில் அமர்ந்திருக்கும் வயோதிக விதவைப் பெண்மணியும்  நானும் ஒன்றா ?’ என்று தொடர்ந்தார் அவர்.

பிறகு சடந்த சம்பாஷணை இது தான்.

‘இப்போது எனது புஸ்தகம் என்கிறோம். அப்போது ‘எனது’ என்பது என்ன ?’, என்று கேட்டேன்.

‘எனது என்பது இந்த உடம்பு’, அவர் சொன்னார்.

‘அதாவது இந்த புஸ்தகம் உங்கள் உடம்பிற்குச் சொந்தம். அது தானே ?’ என்றேன்.

‘ஆமாம், என்னிடம் இருக்கும் வரை இந்தப் புஸ்தகம் இந்த உடம்பிற்குச் சொந்தம்’.

‘எனது கை என்றால் என்ன? கை யாருடையது?’ என்று கேட்டேன்.

‘கையும் இந்த உடம்பிற்குச் சொந்தம்’, என்றார் அவர்.

‘அப்படியென்றால் சரி. ‘எனக்கு உடம்பு சரி இல்லை’ என்றால் என்ன அர்த்தம்?’ என்றேன் நான்.

‘அப்படியென்றால் என்னுடைய உடம்புக்கு ஏதோ கோளாறு என்று பொருள்’, என்றார்.

‘ஆக, என்னுடைய உடம்பு என்னும் போது ‘என்னுடைய’ என்பதும் ‘உடம்பு’ என்பதும் வேறு என்று ஆகிறதா ? அப்படியென்றால் ‘என்னுடைய’ என்பது என்ன ?’, என்று கேட்டேன்.

ஸ்ரௌதிகள் சற்று மௌனமானார்.

சாராம்ஸம் இது தான். என்னுடைய உடம்பு என்பதில் என்னுடைய என்பது உடம்பைத் தவிர வேறு எதையோ குறிக்கிறது. ஆக உடம்பு என்பது வேறு; அதனுள் இருப்பது என்பது வேறு. ஆகவே, உடல் அளவில் வேறுபாடு உண்டு. ஆனால் உள்ளே இருக்கும் ஆத்மா அளவில் வேற்றுமை இல்லை. எல்லா ஆன்மாவும் ஒன்றே. எனது ஆன்மா, உங்களது ஆன்மா, அந்த வயோதிகப் பெண்ணின் ஆன்மா, எல்லாம் ஒன்றே. உடல் அளவில் மட்டுமே வேறுபாடு. ஏனெனில் உடல் நாம் அணியும் ஆடை போன்றது. ஆண் உடல் என்றோரு ஆடை, பெண் உடல் என்றொரு ஆடை, பசு மாட்டின் உடை என்றோரு ஆடை. அவ்வளவே. உடல் அளவில் மட்டுமே வேற்றுமை உண்டு; ஆன்மா அளவில் இல்லை. அத்துடன் அனைத்து ஆன்மாக்களும் இறைவனை அடைய முடியும் என்பதால் இவ்வுலகிலும் மேல் உலகிலும் வேறுபாடு இல்லை. இது தான் நமது சித்தாந்தம்.

‘சங்கரரும் ஆத்மாவை ஒப்புக்கொள்கிறாரே?’, என்றார் ஸ்ரௌதிகள்.

உண்மை தான். ஆனால் ஜீவாத்மா என்பது உண்மை இல்லை என்கிறார் அவர். ஜீவாத்மா என்பது பரமாத்மாவின் பிம்பம் என்கிறார். இந்த உலகம் மாயை என்கிறார். உலகமும் அதனுள் இயங்கும் உயிர்களும் கானல் நீர் போன்றவை என்கிறார். அது தவறு என்கிறேன் நான். ஏனெனில் இந்த உலகில் வாழும் ஆத்மாக்கள், எந்த ரூபத்தில் இருந்தாலும், அவை ஜடப் பொருட்களின் உதவியுடன், அவற்றைக்கொண்டு பரமாத்மாவை அடைகின்றன. உதாரணமாக இதோ ஒரு தாமரை புஷ்பம் இருக்கிறதே. இதனைக்கொண்டு அர்ச்சனை செய்ய முடியும். அதன் மூலம் பிரபத்தி செய்ய முடியும். ஆனால் இந்தப் புஷ்பம் மாயை என்றால் அது எப்படி சாத்தியமாகும் ? எனவே தான் நான் ஜீவாத்மா, பரமாத்மா மற்றும் ஜடப்பொருட்கள் எல்லாமே உண்மை என்கிறேன்.

வைஷ்ணவ சன்யாசிகள் மூன்று மூங்கில் கழிகள் கொண்ட ‘த்ரி தண்டம்’ எப்போதும் கையில் வைத்திருப்பார்கள், பார்த்திருக்கிறீர்களா ? ‘உண்மைகள் மூன்று’ என்பதை உணர்த்துவதே இதன் பொருள். ஆனால் சங்கர மத சன்யாசிகள் ‘ஏக தண்டம்’ என்று ஒரு மூங்கில் கழியையே கொண்டுள்ளார்கள். ‘பிரும்மம் ஒன்று. மற்ற அனைத்தும் மாயை’ என்பதை விளக்கவே இந்த முத்திரைகள்.

என் சித்தாந்தத்தின்படி பொருள் முதல் வாதமும், கருத்து முதல் வாதமும் ஒரு சேர இயங்குவது சாத்தியமே. அதுவே விஸிஷ்டாத்வைதம்.

இதில் குலம், பிறப்பு, ஜாதி முதலிய வித்யாசங்கள் இல்லை. எல்லா ஆத்மாக்களும் ஒன்றே என்பதால் இந்த வைஷ்ணவ சித்தாந்தத்தில் பானைக்குக் கூட முக்தி உண்டு. ‘ததி பாண்ட உபாக்கியானம்’ என்று ஸ்ரீமத் பாகவதத்தில் வருகிறதே. அதில் ஒரு தயிர்ப் பானை செய்பவன் முக்தி அடையும் நிலையில் இருக்கிறான். பெருமாளிடம் தன் பாண்டத்துக்கும் முக்தி வேண்டும் என்று கேட்கிறான். பெருமாள் கொடுக்கிறார். பானை என்னும் ஜடப் பொருளுக்கே முக்தி உண்டென்றால், மற்ற உயிர்களுக்கும், மற்ற குலத்தில் பிறந்த மக்களுக்கும் முக்தி கிடையாது என்ற சங்கர மத சித்தாந்தம் தவறில்லையா ?

அது மட்டும் அல்ல. கஜேந்திர மோக்ஷம்  நினைவிருக்கிறதா ? ஒரு யானைக்கு உதவிக்கு வந்தான் பெருமாள் என்று இருக்கிறதில்லையா ?

‘எல்லாரும் ஒன்றே, குலத் தாழ்ச்சி உயர்ச்சி என்பதெல்லாம் இல்லை என்பது எப்போது துவங்கியது வைஷ்ணவத்தில்?’, என்று கேள்வி எழுப்பினார் ஸ்ரௌதிகள்.

உபன்யாசம் வாதம் போல் ஆனதை உணர்ந்தேன். கூட்டத்தில் இரண்டு ஜைன சன்யாசிகளும் அமர்ந்திருந்ததைப் பார்த்தேன்.

‘வைஷ்ணவ சம்பிரதாயம் எப்போதும் இப்படி இல்லை ஸ்ரௌதிகளே. ஆழ்வார்கள் வரலாறு தாங்கள் அறிந்ததில்லையா ?’, என்றபடி மேலே தொடர்ந்தேன்.

Go back

Your message has been sent

Warning
Warning
Warning
Warning

Warning.

Leave a comment