The side that is not spoken about, generally.

ஆ.. பக்கங்கள் வாசகரே,

ஒரு சில மாதங்களுக்கு ஒரு முறை உங்களுடன் ஒரு உரையாடல் நடத்தலாம் என்று எண்ணம்.

சமீபத்திய சில பதிவுகளின் எதிர்வினைகள் பலவகையாக அமைந்துள்ளன.

‘நான் இராமானுசன்’ தொடர் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இணைய , முகநூல் அரட்டைகளைப் புறந்தள்ளிவிட்டு தத்துவம் குறித்த உரையாடல் நடைபெறுவதும், அதற்கு வாசகர்கள் பங்களிப்பதும் ஒரு சந்தோஷமே. ஆனால் வாசிப்பு சற்று கடினமாக இருப்பதாக சிலரும், சில இடங்களில் இன்னமும் விளக்கங்கள் தரலாம் என்று சில பெரியவர்களும் சொல்லியுள்ளனர். எப்படிச் செய்வது என்று பார்க்கிறேன்.

இது அத்வைத்ம், ஸார்வாகம், விஸிஷ்டாத்வைதம் குறித்த சர்ச்சைகளை எற்படுத்தும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. சமீபத்தில் நான் அமெரிக்கா சென்றிருந்த போது ஒரு நீண்ட நாள் நண்பர் சுமார் ஒன்றரை மணி நேரம் இந்தத் தத்துவங்கள் குறித்துப் பேசினார். சுவையான விவாதமாக இருந்தது அது. ஒரு வாரப் பத்திரிக்கையில் வெளியிட முடிய்மா என்று பார்ப்பதாகவும் சொல்லியுள்ளார். பார்க்கலாம்.

சிலர் வைதீக மதங்களே தேவை இல்லை என்னும் போது இந்தத் தத்துவ விளக்கங்கள் தேவையா ? இக்காலத்தில் இந்த முயற்சி அவசியமானதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். அவர்களுக்கு என் பதில் : இந்தத் தத்துவங்கள் நம்முடையவை. பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முளைத்து, காய்த்து, கனிந்து முற்றியவை இவை. இவை நமது பொக்கிஷங்கள். இவற்றில் பெரிய ஆளுமை எல்லாம் இல்லை என்றாலும் நம்மிடன் என்ன இருந்தது என்று தெரிந்துகொள்வது நல்லது தானே ?

‘நான் இராமானுசன்’ தொடர் சில மாதங்களில் புத்தகமாக வெளிவர இருக்கிறது.இறைவன் அருள் இருப்பின் நடக்கட்டும்.

‘தரிசனம்’ என்ற கட்டுரை பலரிடம் பவிதமான உணர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. பழைய நெய்வேலிக்காரர்கள் உருக்கமான மின்-அஞ்சல்கள் அனுப்பியுள்ளனர். சி.எஸ். மாமா போன்று இன்னும் பலரை நான் அறிந்துள்ளேன். அவர்கள் பறியும் அவ்வப்போது எழுத எண்ணம்.

காஞ்சி மடம் பற்றியும், ஆசார விஷயங்கள் பற்றியும் வன்மையாகக் கண்டித்து இரண்டு மின் அஞ்சல்கள் வந்துள்ளன. என்னைப் பொறுத்தவரை, நான் பார்த்தவற்றை, நான் அனுபவத்தால் உணர்ந்தவற்றை மட்டுமே எழுதுகிறேன். காஞ்சி மடம் இந்திய சமுதாயத்தில் எற்படுத்தியுள்ள தாக்கம் மிகப் பெரியது. அதற்கு மூல காரணம் பரமாச்சாரியார் அவர்கள். அவரது பல செயல்பாடுகள் பழமையானதாக இருக்கலாம். ஆனாலும் இந்திய ஞான மரபில் அவரது பணி அருந்தொண்டு என்பது என் கருத்து.

அதைத்தொடர்ந்து ஜெயேந்திரர் அவர்களது பணி சமூகம் சார்ந்தது. அதற்கு எதிர்ப்பு இருக்கக் கூடாது. ஆனாலும் அவரையும் அவரது சமூகப் பணிகளையும் சிறுமைப் படுத்த பல சக்திகள் முயன்று வெற்றி பெற்றன என்பது வருத்தமே. இவை குறித்து ‘காஞ்சி வழக்கு – ஒரு பார்வை’ என்று இரண்டு பதிவுகள் செய்திருந்தேன்.

ஒவ்வொரு வாசகருக்கும் நன்றி. மேலும் தொடர உங்கள் ஆசிகள் கோருகிறேன்.

ஆமருவி

 

Leave a comment