ஸார்வாகர் தலைவர் மேலும் பேசவில்லை. அவர் அத்துடன் நிறுத்திக்கொண்டார் என்று தெரிந்தது.
ஆனால் ஸார்வாகர் கேள்விகள் தொடரத்தான் போகின்றன. அவற்றில் நியாயமும் இருக்கும்.
‘ஸ்ரௌதிகளே, ஸார்வாகர்கள் கட்சி என்ன ? ஜடப் பொருட்கள் மட்டுமே இந்த உலகமும், பிரபஞ்சமும் என்பது தானே ? ஜடப் பொருட்கள் மட்டுமே உண்மை. ஜடப்பொருட்களின் சேர்க்கையினால் தான் இந்த உலகம் செயல்படுகிறது. பஞ்ச பூத சேர்க்கையினால் விளையும் ஜடப்பொருட்கள் அழியும் போது பஞ்ச பூதங்களிடமே சென்று சேர்கின்றன. இதில் ஆத்மா முதலியன எங்கிருந்து வந்தது? ‘ என்பது அவர்கள் வாதம்.
ஸார்வாகர்கள் புன்முறுவல் பூத்தனர்.
‘ஸ்வாமி, நீங்கள் வைதீக மதஸ்தரானாலும் எங்கள் பக்க நியாயம் பேசுவது எங்களுக்கு மகிழ்ச்சியே’, என்று பேசினார் ஸார்வாகத் தலைவர்.
ஜைனத் துறவிகளும், யஞ்ய மூர்த்தி ஸ்ரௌதிகளும் வியப்புடன் பார்த்தனர். ஒருவேளை குழப்பம் அடைந்தனரோ என்று கூடதோன்றியது.
மேலும் தொடர்ந்தேன்.
‘ஸ்ரௌதிகளே, ஸார்வாகர் பக்கம் நான் சாயவில்லை. ஆனால் அவர்கள் கேள்வியின் காரணம் என்ன என்று ஆராய வேண்டும்.
அவர்கள் நமது வேதத்தை ஒப்புக்கொள்ளவில்லை. ஏன் என்று நீங்கள் யோசித்ததுண்டா ?
வேதத்தில் சொல்லப்பட்டுள்ள வேள்விகள் எல்லாவற்றையும் அவர்கள் கேள்விக்குள்ளாக்குகிறார்கள். ஏன் என்று யோசித்ததுண்டா ?
ஸார்வாகர்களை தூஷிப்பதன்* மூலம் அவர்களது கேள்விகளின் நியாயத்தை மறைக்க முடியாது என்று உணர்ந்துகொள்ள வேண்டுகிறேன்.
ஸார்வாகர்கள் எதிர்ப்பது என்ன ? பிம்ப வழிபாடும் அதன் தொடர்பான சடங்குகளும். இவற்றை அவர்கள் கேள்விக்கு உட்படுத்துகிறார்கள். ஆனால் வேதங்கள் உபதேசிப்பது உருவ வழிபாடு இல்லையே ! அதனால் அவர்கள் கேள்வி கேட்கிறார்கள்.
பிம்பங்கள் வைத்து வழிபட்டு, அதற்குப் பல ஏற்பாடுகளையும் ஆராதனைகளையும் ஏற்படுத்தி அதன் வழியேயும் செல்கிறீர்கள். ஆனால் அந்த நேரத்திலேயே, பிம்பங்கள் எல்லாம் மாயை, நாமும் மாயை, பரமாத்மா மட்டுமே உண்மை எனவே நாம் நம்மை உணர்வதே உண்மை ஞானம் என்றும் சொல்கிறீர்கள். இப்படி ஞான மார்க்கம் பேசும் அதே சமயத்தில் உருவ வழிபாடும் செய்ய வற்புறுத்தினால் அது என்ன நியாயம் ? பீரும்மம் என்பதும் ஜடப் பொருளா ? என்றெல்லாம் ஸார்வாகர்கள் கேட்கிறார்கள்.
சித்தாந்த ரீதியாகப் பார்த்தால் அத்வைத சித்தாந்தத்தில் விக்ரஹ ஆராதனை இருப்பது கூடாது. ஆனால் நடைமுறையில் இருக்கிறதே என்பதும் அவர்களது கேள்வியின் காரணம்’, என்றேன்.
‘காடுகளில் வாழ்ந்து, கபால ஓடுகளில் பிக்ஷை எடுத்து, எரிந்த பிணங்களின் சாம்பலைப் பூசிக்கொண்டிருக்கும் ஒரு நாலாம் வர்ண ஸார்வாகன் கேட்டது உங்களுக்கு முக்கியமாகிவிட்டதா ? தேவரீர் அதற்காக அவன் பக்க நியாயம் பற்றிப் பேசுகிறீரா ? அவனது சித்தாந்தத்தை உதாசீனப் படுத்த வேண்டாமா ? அவன் நாஸ்தீகன் இல்லையா ?’, என்று கேட்டார் ஸ்ரௌதிகள்.
ஸார்வாகர்கள் நிதானம் இழந்தது போல் பட்டது. மக்கள் திரளில் ஒரு சல சலப்பு ஏற்பட்டது. ஜைனத் துறவிகள் கலவரம் அடைந்தது போல் பார்த்தனர்.
கூரத்தாழ்வார் அர்த்தத்துடன் பார்த்தார். பராஸர பட்டன் வேகமாக எழுதிக்கொண்டிருந்தான்.
இத்தனை விளக்கங்களுக்குப் பிறகும் ஸ்ரௌதிகள் இப்படிக் கேட்டது எனக்கு வியப்பளித்தது.
என் நீண்ட வியாக்யானத்தைத் தொடங்கினேன்.
‘ஸ்ரௌதிகள் க்ஷமிக்க* வேண்டும். தங்களது அடிப்படையே தவறு.
வர்ணம் பற்றிப் பேசியுள்ளீர். அது பற்றி விளக்குகிறேன். அதன் மூலம் தங்களது சித்தாந்த ரீதியிலான தவறை உணர்த்துகிறேன்.
தேவரீர் பிரும்மம் பற்றிப் பேசினீர். நானே பிரும்மத்தின் துளி, பிரதி பிம்பம் என்றால், ஒரு பிரதி பிம்பத்திற்கும் இன்னொன்றுக்கும் வேறுபாடு ஏது ? ஒரெ மாதிரியான பல பிம்பங்களுக்குள் வேற்றுமை ஏது ?
ஆக, வர்ண பேதங்கள் எங்கிருந்து வந்தன இங்கே ? ஸார்வாகரும் அந்தப் பிரும்மத்தின் ஒரு பிரதிபலிப்பு என்கிறீர்கள். நீங்களும் அதே பிரும்மத்தின் பிரதிபலிப்பு என்கிறீர்கள். அப்படி இருக்க உங்களுக்குள் வித்யாஸம் எப்படி வந்தது ? பிரும்மத்திற்குள் வேறுபாடு உண்டா என்ன ?
உயர்ந்த பிரும்மம் தாழ்ந்த பிரும்மம் என்று உண்டா என்ன ?
ஆக, ஒன்று உங்கள் வாதம் தவறு. அல்லது அனைவரும் ஒன்று’, என்று சொல்லி நிறுத்தினேன்.
ஸ்ரௌதிகள் சற்று வியப்புடன் பார்த்தார்.
‘அப்படியென்றால் பெருச்சாளியின் தோலை ஆடையாகக் கட்டிக்கொண்டு சுடுகாட்டில் வாழும் இந்த ஸார்வாகனும், நீங்களும் ஒன்றா ?’, என்று கேட்டார்.
‘ஸந்தேகம் என்ன ? அவரது ஆத்மாவும், எனது ஆத்மாவும் ஒன்றே’, என்றேன்.
‘ஆனால் தேவரீர் பிராம்மணர் அல்லவா? நீங்களும் அத்வைத சம்பிரதாயத்தில் வந்தவர் என்பதை மறக்கவேண்டாம் ‘, என்று சற்று வேகமாகச் சொன்னார் ஸ்ரௌதிகள்.
‘ஸ்ரௌதிகளே, நான் யார் என்பது இருக்கட்டும். நீங்கள் பிராம்மணரா ?’, என்று கேட்டேன்.
‘நான் பிராம்மணன் தான். முறையாக உப-நயனம்* ஆகி, வேதக் கல்வி பயின்றவன். அது சரி. ஸார்வாகன் விஷயத்திற்கு வாருங்கள். அவன் எப்படி நமக்குச் சமமானவன்?’, என்று சற்று முன்பை விட வேகமாகவே கேட்டார் ஸ்ரௌதிகள்.
‘ஸ்ரௌதிகளே, உப-நயனம் ஆகி, வேதக் கல்வி பயின்ற ஒரே காரணத்தால் நீங்கள் பிராம்மணர் அல்ல. யார் பிராம்மணன் என்ற கேள்விக்குப் பிறகு வருகிறேன்.
யார் பிராம்மணன் என்னும் கேள்வி பல காலமாகவே கேட்கப்பட்டு வருகிறது. இன்னும் பல காலம் கேட்கப்படும். பலவிதமான விளக்கங்கள் அளிக்கப்படும். அது போலவே யார் க்ஷத்ரியன் என்பதும், யார் வைஸ்யன் என்றெல்லாம் கேள்விகள் கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கும்.
‘ஸார்வாகரும் சரி, யாராக இருந்தாலும் சரி, ப்ரபத்தி என்ற சரணாகதி செய்துகொண்டால் அனைவரும் ஒன்றே. அவருக்கும் மோக்ஷம் உண்டு. அத்துடன் அதற்கு முன்னரே ஆத்ம அளவில் அளவில் அனைவரும் ஒன்றே. இதுவே விஸிஷ்டாத்வைத தத்துவம்’, என்றேன்.
‘வேதத்தின் முக்கிய பாகங்களான பூர்வ மீமாம்ஸை, உத்தர மீமாம்ஸை முதலியனவற்றில் உள்ள வேள்விகள் முக்கியம் இல்லையா ? வெறும் பிரபத்தி, சரணாகதி முதலியன மட்டுமே போதுமா மோக்ஷம் பெறுவதற்கு ? யாகங்களும் வேள்விகளும் தேவை இல்லையா ? நீங்கள் வேதத்தின் அடிப்படையையே அசைப்பதாக உள்ளதே?’, என்று கேள்வி எழுப்பினார் ஸ்ரௌதிகள்.
வாதம் வேறு திசையில் செல்வது போல் பட்டது. ஆனால் மிக அவசியமான விஷயங்களை நோக்கிச் செல்வதாக உணர்ந்தேன்.
—————————————————————————————
தூஷிப்பது – இழிவு படுத்துவது.
உப-நயனம் – பூணூல் அணிவிக்கும் சடங்கு.
க்ஷமிக்க – மன்னிக்க.
Leave a comment