The side that is not spoken about, generally.

எங்கோ தொடங்கிய பயணம் இது.

கம்பனைப் பற்றி ஆராய்ச்சி செய்ய அங் மோ கியோ நூலகம் செல்ல வேண்டி இருந்தது.

பயணம் சாமி.சிதம்பரனாரிலிருந்து தொடங்கியது. பல பெரியவர்களின் நூல்களையும் ஆராய்ச்சிகளையும் வாசிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்படி ஒரு நாள் அங் மோ கியோ நூலகத்தில் எனக்கு அறிமுகமானவர் தான் பேரா.தோத்தாத்ரி. ‘மார்க்ஸீயப் பாதையில் வைணவம்’ என்ற அவரது நூல் கண்ணில் பட்டது.

‘அட, மார்க்ஸுக்கும் வைணவத்துக்கும் என்ன தொடர்பு?’ என்ற வியப்பு எழுந்தது உண்மையே.

அந்த ஆசிரியரின் மார்க்ஸீயப் பயணத்தில் ஒரு வகையான இராமானுசரைத் தெரிந்துகொண்டேன்.

அந்த நூல் பேரா.வானமாமலையிடம் இட்டுச் சென்றது.

அவர் பேரா.தேவி ப்ரஸாத் சட்டோபாத்யாயாவிடம் கொண்டு சென்றார்.

அவர் எழுப்பிய பல வினாக்களுக்கு விடை காண முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணன் துணை நின்றார். அவர் மூலம் சில உபநிஷத்துக்களின் அறிமுகம் கிடைத்தது.

மேலும் உட்புகையில் ஒரு வழியில் பாரதியார் குறுக்கிட்டார். அவர் மூலம் வஜ்ர சூசிகா உபநிஷதம் தட்டுப்பட்டது.

பின்னர் மீண்டும் பேரா.வானமாமலை. அதன் பின்னர் நிறைய ஆழ்வார்கள். முனைவர்.இராமபத்திரன் வழியில் நடந்து கொண்டிருந்த போது பேரா.தெ.ஞானசுந்தரம் குறுக்கிட்டார். அதன் பின்னர் பிள்ளை லோகாச் சாரியார், வேதாந்த தேசிகர், கருட வாகன பண்டிதர்  என்று பயணம் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

பயணத்தின் மூலம் இன்னும் பலர் தென் பட்டனர். வையாபுரிப் பிள்ளை, தொ.ப.மீ, ஜெயமோகன் என்று பலரும் இந்தப் பயணத்தில் துணை புரிகின்றனர்.

சிங்கை வந்திருந்த போது ஜெயமோகன் ‘சுவிரா ஜெய்ஸ்வாலையும்’, சு.வெங்கிடராமனையும் அறிமுகம் செய்து வைத்தார்.

இவர்களின் ஆற்றுப்படுத்தலால் ‘நான் இராமானுசன்’ தொடர் மேலும் விரிவடைகிறது.

சென்ற மாதம் இந்தியா சென்றிருந்த போது ஒரு அத்வைத ஸம்பிரதாயப் பெரியவர் சில ஆதாரமான கேள்விகள் கேட்டிருந்தார். அதற்கு விடை தேட முனைந்ததில் மேலும் பல தகவல்கள் பெற்றேன்.

தவிரவும் தொடர் பற்றிப் பல பெரியவர்கள் ஆசிகள் அனுப்பியுள்ளனர். அனேகம் பேர் முகம் தெரியாதவர்கள்.

தொடர் பற்றி வசவுகள் இல்லையா என்றால் அவையும் உள்ளன. ஆனால் கண்டுகொள்வதில்லை.

அனைவருக்கும் என் தெண்டன் ஸமர்ப்பித்த வணக்கங்கள். ‘இராமானுச தரிசனத்’தில் மேலும் பயணிப்போம்.

Leave a comment