உலகில் என்றும் பழைய கணக்காகப் பார்க்கப்படும் மானுடம் என்ற பண்பிற்குப் பின்னால் பயணிக்கிற புத்தகம்தான் “பழைய கணக்கு“.
மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு, நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே இருப்பது படைப்பாளியின் கடமை. அதை மிகவும் நேர்த்தியாக செய்துள்ளார். படிபவர்களை சம்பவங்களோடு ஒன்றிவிடச் செய்துவிடுகிறார்.
இவை வெறும் கற்பனைக் கதாபாத்திரங்களைக் கொண்டு வேயப்பட்ட கதையோ அல்லது நினைவுகூறலோ அல்ல. தான் கண்டு , கேட்டு , உணர்ந்த ஆளுமைகளின் வாழ்வியல் அனுபவங்களை, சாதனைகளை, சிந்தனைகளை எழுத்துமுலமாக ஆவணங்களாகத் தந்துள்ளார் ஆசிரியர். நிஜத்திலும் , நினைவிலும் வாழும் எதார்த்த மனிதர்கள் ஒவ்வொருவரும் நம் கண்முன்னே வந்து போகிறார்கள்; ஆவணப்படம் காண்பது போல அவர்களின் வாழ்வும் செயல்பாடுகளும் காட்சிகளாக விரிகின்றன. வாய்ப்பு கிடைத்த இடங்களில் எல்லாம் நூலாசிரியர் தன் கருத்துகளை ஆங்காங்கே விதைக்கவும் தவறவில்லை.
அறம் , சமுதாயக் கோபம் , வாழ்க்கையின் ஓட்டத்தில் நாம் அவதானிக்க மறந்த , மறுத்த விடயங்கள் மூலம் நம்மை நகர்த்திச் செல்லும் இந்நூல் படிக்கக் களைப்பு தராமல் இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் நடைதான். சமூக சிந்தனையோடு தனக்கே உரிய எள்ளல் பாணியில் அவர் காட்டும் இடங்கள் நகைச்சுவையே என்று தோன்றினாலும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியவை.
உபகாரம் என்ற கதையில் நூலாசிரியரின் சமுகப் பார்வை மூலம் சமூக முரண்களை அழகாகப் படம்பிடித்துக் கட்டியுள்ளர். //வாப்பா இருந்திருந்தால் இதே வயது தான் இருக்கும் அவருக்கும் // என்று தன் தந்தையை ஒப்பிட்டு பார்க்கும் போது , அங்கே மேலோங்கி நிற்ப்பது மனித நேயம் மட்டுமே . இராமனைப் பார்க்கக் கானகத்திற்கு பரதன் வந்தான், முனிவர்கள் வந்தார்கள் ஆனால் யாரும் இராமன் காட்டில் உணவிற்கு என்ன செய்வான் என்று நினைத்து அவனுக்கு உணவு கொண்டு வரவில்லை. குகன் ஒருவன் தான், இராமனுக்குத் தேவைப்படுமே என்று உணவு கொண்டு வந்தான். ஆகையால்தான் கம்பர் – ” உள்ளம் தூயவன்; தாயின் நல்லான்” என்று குறிப்பிடுகிறார். உபகாரம் கதையில் இதைப் போன்ற நிகழ்வைப் பார்க்கலாம் .
பெரிய தாக்கத்தை உண்டுபண்ணிய கதைகள் ‘மாயவரம்’ , ‘சார் விட்டுக்குப் போகணும்’. இந்த கதையின் பாதிப்பு , அடுத்த முறை என் வயது ஒத்த மாயவரம் ஊர் மனிதரைப் பார்த்தால் என்னுடைய அடுத்தகேள்வி, ‘உங்களுக்கு சாரைத் தெரியுமா?’ என்பதே. குருபக்திக்கு ஒருநல்ல உதாரணம் . நாம் ஒவ்வொருவரும் கண்டிப்பாக இதுபோன்ற ஆசிரியரைக் கடந்து சென்றுதான் இருப்போம் , மனிதனின் கையாலாகாத தன்மை கன்னத்தில் அறைவது போல் இருந்தது என்று குறிப்பிடும்போது, இயற்கைக்கு முன் மனிதனின் ஆளுமை எவ்வளவு குறைவு என்பதை உறுதிப்படுத்துகிறது. இதயம் கனத்தது.
ஒரு தேரின் கதை – காரணப்பெயரான தேர்-அழுந்தூர் (செலுத்திய தேர் செல்லாமல் அழுந்திய காரணத்தினால் தேர்-அழுந்தூர் ) அதன் காரணத்தை இழந்து, பின்பு மீண்ட கதை. ஒற்றுமை மற்றும் விடமுயற்ச்சியின் பலன் பற்றி விளக்குகிறது. புறத்தில் சில நேரங்கள்மட்டும் எரிந்த தீ , அகத்தில் அணைவதற்க்கு ஐம்பது ஆண்டுகாலம் தேவைப்பட்டு இருக்கிறது.
‘கொஞ்சம் வரலாறு , கொஞ்சம் சுவாசம்’ கதை – நூலாசிரியரின் தார்மீக கோபத்தின் வெளிப்பாடாகத் தெரிகிறது . வரலாறு படைத்த தமிழினம் அதை ஆவணப் படுத்தியது குறைவு அல்லது ஆவணப் படுத்தி இழந்தது அதிகம். //இந்த தளத்தின் மேல் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு சுந்தர சோழனோ, பராந்தகனோ நின்றிருக்கலாம்//. அந்த தார்மீக கோபத்தின் நியாயங்களைப் பங்குபோட்டு கொஞ்சம் மன உறுத்தலோடு தான் இந்தக் கதையைக் கடக்க முடிந்தது. அமரர் சுஜாதா சொன்ன செய்திதான் நினைவில் நின்றது . கோயில் தூண்கள் சிலவற்றைத் தொட்டுக்கொண்டு, நம் முன்னோர்கள் கால்வைத்து ஏறியபடிகள் மீது நடந்துகொண்டு நாங்கள் இருவரும் இந்தக் கருத்தைப் பரிமாறிக்கொண்டோம். அப்போது எங்கள் முன்னோர்கள் தங்களின் குழந்தைகளைப் பார்ப்பது மாதிரி உணர்ந்தோம். அது ஒரு உன்னத அனுபவம்.
ஒளிரும் மகத்தான ஆளுமைகளைத் தனது எழுத்தில் ஆவணப்படுத்திய ஆமருவி தேவநாதன் பாராட்டிற்குரியவர். அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.
மனித நேயம் தேவைப்படும் வரை இதுபோன்ற கணக்குகளும் தேவைப்பட்டுக்கொண்டுதான் இருக்கும் .
வாழ்த்துக்கள் , தொடரட்டும் உங்கள் கணக்குப் பயணம்.
Leave a comment