சூடு தணிந்த தமிழனின் சுரணையில் இது உறைக்குமா என்ற கேள்வியே இல்லை; எருமைகளுக்கு மழை பெரும் திடுக்கிடலை நிகழ்த்தாது.
3000 பேர் கலந்துகொண்ட நடிகர்கள் தேர்தலில் தன் இரண்டு மாத நேரத்தைத் தொலைத்த சென்மங்களுக்கு, ஆயிரம் ஆண்டுகாலக் கல்வெட்டு எக்கேடு கெட்டால் என்ன என்கிற எண்ணம் தானே இருக்க முடியும் ? ஆனால் நூலாசிரியர் பிரதீப் சக்கரவர்த்தி மாறிப் பிறந்துவிட்டார். அவர் அமெரிக்கராயிருந்தால் இந்நேரம் ஒபாமா அவரை ‘கலைகளுக்கான அமைச்ச’ராக்கியிருப்பார். பிரதீப்பின் கெட்ட காலம் அவர் தமிழ் நாட்டில் பிறந்து விட்டது; தமிழகத்தில் பேணப்படாத கோவில்கள் மீது அக்கறை கொள்ள வைத்து விட்டது. அதனால் தான் அவர் நமது கலை அழிவைப் பற்றிய நூலை ஆங்கிலத்தில் எழுதி, அதைக் ‘கிண்டில்’ பதிப்பாக, மின்-நூலாக வெளியிட்டுள்ளார் என்று நினைக்கிறேன். இதன் தமிழ்ப் பதிப்பு இங்குள்ளது.
பிரதீப் செய்வது என்ன ? விடுமுறை நாட்களில், பெரிதாக அறியப்படாத, பழமை வாய்ந்த கோவில்களுக்குச் செல்கிறார்; அக்கோவில்கள் பற்றியும், அவற்றின் தற்போதைய நிலை, ஊரின் நிலை, ஊரும் கோவிலும் முந்தைய காலத்தில் எப்படி இருந்தன என்பது பற்றிய நாயன்மார்கள், ஆழ்வார்களின் பாசுரங்கள், கல்வெட்டுச் சான்றுகள், என்று கண்களில் நீர் வரவழைக்கும்படியாக ஒரு ‘ஒப்பு நோக்கல்’ செய்கிறார். கோவிலில் உள்ள சிலைகளின் நிலை, கல்வெட்டுக்களின் காலங்கள், அவற்றை நிறுவிய மன்னர்கள் பற்றிய செய்திகள், கோவில், குளம் முதலியவற்றின் பராமரிப்பிற்கான அக்கால நிவந்தனங்கள் – இவை அனைத்தையும் பெரு முயற்சி செய்து, வரிசைப்படுத்தி எழுதுகிறார்.
பண்டைத் தமிழகக் கோவில்கள் மீதுள்ள தணியாத காதல், நம் பண்பாட்டின் அடி நாதங்களான இறை உறைச் சின்னங்கள் மீது கொண்ட தணியாத மோகம், புனரமைப்பு என்னும் பெயரில் பழைய சுவரோவியங்கள் மீது செய்யப்படும் அறிவற்ற தாக்குதல் மீது கொண்ட கோபம் – அனைத்தையும் வெளிப்படுத்தும் எழுத்து அவருடையது.
பாசுரங்களின் நேரடி ஆங்கிலப் படுத்தல்களாகட்டும், செய்யுள் பொழிப்புரைகளாகட்டும் நமக்கு வேண்டிய அளவு கொடுத்து, அந்த இறை வாழ் சாலைகளின் அன்றைய நிலையைக் குறிப்பிடுகிறார். பாசுரங்களிலும், கல்வெட்டுக்களிலும் அவரது ஈடுபாடு பெரும் வியப்பை ஏற்படுத்துகிறது. தனக்குத் தெரியாததைத் தெரிந்துகொள்வதற்காகத் தொல்லியல் துறை, கல்வெட்டாளர்கள் என்று பலரது துணை கொண்டு காடு, மேடு, மலைகள் பல கடந்து சென்று, பார்த்து, வியந்து, அழுது, பொருமி எழுதும் அவரது உழைப்பு – அதிரவைக்கும் கடமையுணர்ச்சியை வெளிக்காட்டுகிறது.
கோவில்களின் இன்றைய ஏழ்மை நிலை, ஊழியர்களின் ( அர்ச்சகர்களின் ) இன்றைய துயரமான நிலை என்று பலதையும் சுட்டிக்கட்ட அவர் தவறவில்லை.
சில கோவில்களின் இன்றைய நிலையை அவர் வர்ணிக்கும் போது ‘நாம் உயிர் வாழ்வதால் என்ன பயன்?’ என்று தோன்றுகிறது.
சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபமும், குஷ்புவிற்குக் கோவிலும் கட்ட முனையும் ஒரு சமூகம் என்கிற இழிவிலிருந்தும், நமீதாவின் நாபிக்கமல தரிசனத்திற்கு ஏங்கும் ஒரு கூட்டம் என்னும் கேட்டிலிருந்து நாம் பிழைக்க வேண்டுமானால், இந்நூலைப் பெருமளவில் வாங்கி, நமது இல்ல விழாக்களில் பரிசாக அளிப்போம்.
தேரழுந்தூர் ஆமருவியப்பன் அவருக்கு நீண்ட ஆயுளையும் தளராத மனத்தையும் அளிப்பானாக.
நூல் இங்கு கிடைக்கிறது.