The side that is not spoken about, generally.

‘விடுதலைப் புலிகள்’ என்னும் மாபெரும் மனித சக்தியால் என்னவெல்லாம் செய்திருக்க முடியும், ஆனால் என்னவெல்லாம் செய்தார்கள், எப்படி நாசமாய்ப் போனார்கள், எப்படித் தங்களுடன் சேர்த்து தங்களைச் சேர்ந்த சாதாரண மக்கள் கூட்டத்தையும் அழித்தொழித்தார்கள் அல்லது அதற்கு உதவினார்கள் என்று நினைக்கும் போது பெரும் பரிதாபமே ஏற்படுகிறது.

ஒரு தலைவனின் ஆணையை உயிரைக்கொடுத்தாவது முடிக்க வேண்டி, ஒரு மனிதக் கூட்டம் ( சிறார்கள் உட்பட) என்னவெல்லாம் செய்தது, ஒரு நிமிடம் கூட நின்று யோசிக்காமல், ‘தலைவன் சொல்லிவிட்டான்’ என்பதால் சிரமேற்கொண்டு செய்துமுடித்த கூட்டத்தைக் கொண்டு என்னவெல்லாம் செய்திருக்க முடியும்?

வன்னி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் முதலிய இடங்களில் ஒரு சிறிய அரசாங்கமே செய்துவந்த ஒரு குழு, அதுவும் முன்னேறிய சமூகங்கள் போல சாதி, மதம் பாராமல் செயல்பட்ட ஒரு ‘கிட்டத்தட்ட-அரசு’, கொஞ்சம் விட்டுக்கொடுத்து, உலக நடைமுறைகளை அனுசரித்துச் சென்றிருந்தால் இன்று தமிழ்கம் வெட்கித் தலைகுனிகிற சாதி அமைப்புக்கள் இல்லாத ஒரு அரசை வன்னியில் நாம் கண்டிருப்போம்.

41fak7a4k6l-_sy344_bo1204203200_பெண் உரிமை, பெண்களின் பங்கை சமூகத்துக்குப் பயனளிக்கும் வகையில் கொண்டுசெல்வது முதலான முற்போக்கான நோக்குடன் செயல்பட்ட ஒரு அமைப்பு, பல பிற்போக்கு அம்சங்களையும், சாதி அடுக்குகளையும் கொண்ட தமிழ்ச் சமுதாயத்திற்கு உதாரணமாக இருந்திருக்கவேண்டிய ஒரு இயக்கம், தனி மனிதத் தொலை நோக்கின்மையால் பாழாய்ப் போன வரலாறு நம் முன்னே இருந்திருக்காது.

விடுதலைப்ப்புலிகளின் இறுதிக் காலத்தில் அவர்களுக்கு வந்த ஞானம், தங்களைக் காப்பாற்ற இனி ஒரு அமைப்பும் முயலப்போவதில்லை என்று தெரிந்தவுடன் அவர்கள் கட்டுப்பாடுகளற்ற சரணாகதியை நோக்கி நகர்ந்தது சில வருடங்கள் முன்னர் நடந்திருந்தால் இன்று ஒரு முன்னேற்றப் பாதையில் சென்றிருந்த சமுதாயத்தை நாம் கண்டுகொண்டிருந்திருப்போம்.

புலிகளையும், மற்ற போராளிகளையும் வைத்துத் தமிழக அரசியல்வாதிகள் அடித்த கூத்து, புலிகளைத் தனி ஈழம் நோக்கியே நகர்த்திய வெளி நாடு வாழ் இலங்கைத் தமிழர்கள், ஆயுத வியாபாரிகள்- இவர்கள் ஒருவருக்கும் நல்ல கதியே கிடையாது.

41jqymo3psl-_sx319_bo1204203200_எப்படியாவது பிரபாகரனை சமாதானத்துக்கு ஒப்புக்கொள்ள வைக்க. பாலசிங்கம் பலமுறை முயன்றுள்ளார். அவருக்குத் தெரியாமல் வன்முறைத் தாக்குதல்களை நிகழ்த்திவிட்டு அவரை விட்டு அதற்குக் காரணம் சொல்லவைத்து உலகத்தை எவ்வளவுதான் ஏமாற்ற முடியும்? இத்தனைமுறை வன்முறைத்தாக்குதல்கள் செய்ததற்குப் பிரபாகரன் மட்டுமே காரணமா? பின்னால் இருந்து இயக்கிய சக்திகள் யார் என்று ஆராயத் தோன்றுகிறது. மற்ற போராளி இயக்கங்களைப் பூண்டோடு ஒழித்துக்கட்ட அவர் முயன்று அழித்தது ஏன்? தான் மட்டுமே பிரதிநிதி என்று அமைய வேண்டும் என்கிற எண்ணமா? முராரியின் நூலைப் படிக்கும் போது அப்படித் தோன்றுகிறது.

30 வருடங்கள் போராட்டம். அமைதி ஏற்பட வாய்ப்புள்ளது என்கிற நிலை தோன்றுவது போல் தெரிந்தாலும் உடனேயே ஏதாவது ஒரு கொலை பாதகத்தைச் செய்வது, அத்துடன் அமைதிக்கான முயற்சிகள் முறிந்து போவது. பின்னர் மீண்டும் போர். மீண்டும் அமைதி முயற்சி. மறுபடியும் கொலைபாதகம். நிகழ்வுகளில் பங்குகொண்டவர்கள், இறந்தவர்கள், தோன்றிச்சென்ற அரசியலாளர்கள் – யார் பெயரும் நினைவில் நிற்க முடியாத அளவிற்கு மீண்டும் மீண்டும் போர் மற்றும் அமைதி முயற்சி. ஒரு நேரத்தில் யார் யாரைக் கொன்றார்கள் என்றே மனதில் பதிய மறுக்கிறது. கொன்றது இலங்கை ராணுவமா அல்லது போராளிகளா என்றே தெரியாத நிலை தோன்றுகிறது.

1987ல் சென்னையில் இருந்து டில்லி செல்லும் போது பிரபாகரன் பேசியவை, டில்லியில் இருந்து இலங்கை சென்ற போது, இந்திய அரசுப் படைகளின் வாகனத்தில் பயணித்தபடி வந்து இந்தியாவிற்கு எதிராகவும் ஒப்பந்தத்திற்கு எதிராகவும் பேசியது – பால சிங்கமே அதிர்ச்சி அடையும்படி மாற்றி மாற்றிப் பேசியது – அது என்ன ஒரு மன நிலையா? அல்லது போராட்டம் தொடர்ந்து நடந்தே ஆக வேண்டிய கட்டாயம் உள்ள, அவரை இயக்கிய பெயர் தெரியாத சக்திகளின் உத்தரவா? என்று பலவிதங்களில் யோசிக்க வைக்கிறது.

புலிகள் கொலைதான் செய்தார்கள். பெரியவர் அமிர்தலிங்கம் என்ன பாவம் செய்தார்? கதிர்காமர் என்ன செய்தார்? இக்கொலைகள் எல்லாம் பிரபாகரனின் தன்னிச்சையான உத்தரவில் நிகழ்ந்தவையா? அல்லது அவரது பெயரைக்கொண்டு வேறு ஏதேனும் சக்திகள் செய்தனவா? ஏனெனில் 2002-2006 வரையிலான சண்டை நிறுத்த காலத்தில் வன்னிப் பகுதியில் நடைபெற்ற புலிகள் ஆட்சி பற்றிய செய்திகளும் ஆவணங்களும் பிரபாகரனை முற்போக்கு எண்ணங்கள் கொண்ட. சம நிலை மனதுடையவராகவே காட்டுகின்றன. படிப்பகங்கள், ஆவணக் காப்பகங்கள், பெண்கள், சிறுமிகள் நல இயக்கங்கள், மூத்த சமூகத்தினர் ஓய்வு இல்லங்கள் என்று பல நிலைகளிலும் புலிகள் இயக்கம் செயல்பட்டுள்ளது. ஒருவரே எப்படி மனித மனத்தின் இரு வேறு நிலைகளில் இருந்து செயலாற்ற முடியும் ?

நீலன் திருச்செல்வன் இறக்கவேண்டிய காரணம் கடைசிவரை பிடிபடவில்லை. அரசுடன் பேசியது அவர் குற்றம் எனில் புலிகளும் பலமுறை அரசுடன் பேசியுள்ளனரே? ‘பேசலாமா கூடாதா என்பதை நாங்கள் தான் தீர்மானிப்போம். நாங்கள் பேசினால் மதிச்செயல், நீ பேசினால் சதிச்செயல்’ என்கிற நடைமுறை பாசிசம் அல்லாது வேறு என்ன? முராரியின் நூலைப் படிக்கும் போது எற்பட்ட இந்த உணர்வை என் மனதில் இருந்து நீக்க விரும்பினாலும் முடியவில்லை.

வன்னிப் பகுதியைச் சார்ந்த 16,17 வயதுடைய இளம் பெண்கள் தாங்களாகவே விரும்பிச் சென்று புலிகள் அமைப்பில் சேருவதையும் காண்கிறோம். வீடுகளில் அடக்குமுறை இருப்பதால் விடுதலை வேண்டி மட்டுமே அப்படிச் சென்றார்கள் என்று கொள்ளவியலாது. புலிகள் அமைப்பில் பெண்களுக்கு அளிக்கப்பட்ட சம உரிமைகள், சமூக அந்தஸ்து முதலியன அப்படிச் சேரத் தூண்டியிருக்கலாம் என்றே எண்ணத் தோன்றுகிறது மாலதியின் நூலைப் படிக்கும் போது. அப்படிப் பயிற்றுவிக்கப்பட்ட பெண்கள் கூட்டம் அமைதிச் சூழலில் நாட்டுக்கு என்னவெல்லாம் நல்லது செய்திருக்க முடியும்! பிரபாகரன் மட்டும் சற்று விட்டுக்கொடுத்து இலங்கை அரசமைப்பில் தன்னாட்சி பெற்ற ஒரு மாகாணம் என்னும் ஒரு ஏற்பாட்டை நிறுவியிருந்தால் இந்நேரம் வடக்குப் பகுதி நாம் பார்த்து வியக்கும் வண்ணம் இருந்திருக்கும். ஆனால் நடந்ததோ பேரழிவு. காரணம் அவர் ஒருவர். அல்லது அவரை இயக்கிய பெயர் தெரியாத கூட்டம்.

2003, 2004 ஆண்டுகளில் பிரபாகரன், பாலசிங்கம் இருவரும் இந்தியாவை மீண்டும் தலையிட அழைக்கிறனர். ‘பழையன மறப்போம்’ என்று பேசுகின்றனர் ( ராஜீவ் கொலை). ஆனால் இந்தியா தலையிடுவதில்லை என்று முடிவெடுக்கிறது. திரிகோணமலையில் இந்தியன் ஆயில் நிறுவனம் ஏற்படுகிறது. தேசீய அனல் மின் நிறுவனம் இன்னொரு மின் திட்டத்தை உருவாக்குகிறது. புலிகள் சிறிது நிதானத்துடன் நடந்திருந்தால், சமயோசிதமாகச் சிந்தித்திருந்தால் இன்று அந்த நிறுவனங்கள் வடக்குப் பிராந்தியத்திலும் இருந்திருக்கும். மக்கள் நலம் பெற்றிருப்பர்.

மஹிந்த ராஜபக்ஷ ஒரு சாதாரண அரசியல்வாதி. 2005 வரை அவரை யாரென்றே தெரியவில்லை. ரனில், சந்திரிகா, சிரிமாவோ, பிரேமதாசா, ஜயவர்தன, விஜயதுங்க, அனுரா பண்டாரனாயகா என்று பல நட்சத்திரங்கள் தோன்றி ஒளிர்ந்து, சில பெயர்ந்து விழுந்து, சில மீண்டும் துளிர்ந்து எழும் நீண்ட 30 ஆண்டு கால அரசியல் வானில் மஹிந்த ராஜபக்ஷ ஒருமுறை கூட எட்டிப் பார்க்கவில்லை. 2005ல் புலிகள் மக்களை வாக்களிக்கக் கூடாது என்று தடுப்பதால் ரனில் விக்கிரமசிங்க 48.5%மும், மஹிந்த 50.5%மும் பெறுகின்றனர். அதனால் மஹிந்த அரசமைக்கிறார். பின்னரும் அவரும் புலிகளிடம் பேசவே விழைகிறார். சிங்கள ஆதிக்கவாத ஜெ.வி.பி.ன் கொட்டத்தை அடக்கப் புலிகளுடன் சமரச முயற்சி செய்கிறார். ஒரு கட்டத்தில் ஜெ.வி.பி. அடங்குகிறது. ஆனாலும் புலிகள் அந்த வாய்ப்பையும் பயன் படுத்தவில்லை.

51ubjxt0z7l-_sx330_bo1204203200_2002ல் ஏற்பட்ட போர் நிறுத்தம் மெல்ல செயலைழக்கத் துவங்குகிறது. 2001ல் அமெரிக்காவில் ஏற்பட்ட இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின் வெளி நாடுகளில் இருந்து பண வரவு கணிசமாகக் குறைகிறது. பண வரவு இல்லாததால் ஆயுதங்கள் வாங்குவதில் பிரச்சினை. உலகளவில் தீவிரவாதம் பெரியதாக உருவெடுக்கத் துவங்கிய நேரத்தில் உலக நாடுகளும் தீவிரவாத இயக்கங்களை அடக்குவதில் மனித உரிமை மீறல்கள் குறித்துக் கண்டும் காணாததுமாகவே இருக்கத் துவங்கின. மெல்ல போர் நிறுத்த ஒப்பந்தம் செயல் இழக்கத் துவங்கியது. ராணுவத் தாக்குதல் துவங்கப் புலிகள் தங்கள் கொலை முயற்சிகளால் தீபம் போட்டனர்.

2006-ல் புலிகளின் பலம் குறையத்துவங்கியது அவர்களைத் தவிர அனைவருக்கும் தெரிந்தது. இருந்தும் மனித வெடிகுண்டுத் தாக்குதல், இலங்கை விமான நிலையம் மீதான தாக்குதல், வான் வழித் தாக்குதல் என்று புலிகள் தங்கள் கடைசிகட்ட ஆட்டத்தைத் துவங்கினார்கள். வான் வழியாக இரண்டுமுறை தாக்குதல் நிகழ்த்திய போது இந்தியா உஷாரானது. கூடங்குளம், கல்பாக்கம் என்று இரு அணு உலைகளை இலங்கைக்கு அருகில் கொண்டுள்ள இந்தியா இனி வேறு வழி இல்லை என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இலங்கைக்குத் தனது சாட்டிலைட்கள் மூலமான உளவு சொல்வதை இந்தியா துவங்கியது.

இந்த நிலையில் புலிகளின் பல ஆயுதக் கப்பல்கள் இலங்கைக்குள் வர முடியாமல் தனது சாட்டிலைட் உளவு மூலம் இந்தியா தடுத்தது. இது புலிகளுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. எந்த சமரச முயற்சிக்கும் உடன்படாத ஒரு கொலைவெறிக் கூட்டம் என்னும் தன் மீதான பிம்பத்தைத் துடைக்க புலிகள் எள்ளளவும் முயலவில்லை. 2001ற்குப் பின்னான உல மாற்றங்களைப் பிரபாகரன் உணர்ந்துகொண்டதாகவே தெரியவில்லை.

புலிகள் தங்கள் பழைய தொழிலில் இறங்கினர். பிள்ளைக் கடத்தல் மூலம் ஆட்சேர்ப்பு அதிகரித்தது. கொஞ்ச நஞ்சம் வன்னி, யாழ்ப்பாண மக்களிடையேயிருந்த மதிப்பும் போனது. குடும்பத்துக்கு ஒரு புலி என்பது போக, தேவைக்கேற்ப ஆட்சேர்ப்பு என்னும் முயற்சியில் இறங்கினர். மக்களின் எதிர்ப்பையும் கண்டுகொள்ளவில்லை. இதனால் சாதாரண மக்களின் வெறுப்பும் அதிகரித்தது.

41whsbfuycl-_bo1204203200_2007ல் தோல்வி ஓரளவு உறுதியாகிவிட்ட போதும் அவர்கள் சரணடைவது பற்றி நினைக்கவில்லை. பி.பி.சி.யின் செய்தியாளர் பிரான்செஸ்கா ஹாரிசனின் ‘Still Counting the Dead’ என்னும் நூலில் இவை அனைத்தும் பதிவு செய்யப்படுகின்றன. ஹாரிசன் பலமுறை புலிகளின் முக்கியத் தலைவர் புலித்தேவனிடம் சொல்கிறார். ஸ்கைப் மூலம் இது நடக்கிறது. புலித்தேவன் கழுவும் மீனில் நழுவும் மீனாகத் தெரிகிறார். நார்வேயின் சமாதான முயற்சிகளும், ஓஸ்லோவில் பேச்சு வார்த்தைகளும் பயன் அளிக்கமுடியாமல் புலிகள் விடாப்பிடியாக ‘தனி ஈழம்’ என்று நிற்கின்றனர். மாவீரர் தின உரையில் கடைசியாக 2008 நவம்பரில் பிரபாகரன் இலங்கையின் இறையாண்மைக்குள் அடங்கிய அதிக அதிகாரங்கள் உள்ள ஒரு தமிழர் அரசுக்கு ஒப்புக்கொள்ள மறுக்கிறார். இந்தியா தலையிடும் என்று எதிர்பார்க்கிறார்.

அவருக்குத் தூபம் போட்டு தமிழக அரசியலாதிகள் தவறான வழிகாட்டுகின்றனர். அவர் தொடர்ந்து ஏமாறுகிறார்.

இராணுவத் தாக்குதல்கள் அதிகரிக்கின்றன. புலிகள் மக்களை வெளியேற விடாமல் தடுக்கின்றனர். மக்களின் ஊடே புகுந்துகொண்டு சாதாரண உடையில் போரிடுகின்றனர். இதனாலும் மக்கள் மீது இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்துகிறது.

ஐக்கிய நாடுகள் சபை, உலக சேவை நிறவனங்கள் என்று அனைத்தும் வெளியேற்றப்படுகின்றன. மக்களுக்கு உணவு கிடைக்கவில்லை. தினமும் இடம் பெயர்வு நிகழ்கிறது. இடையில் புலிகள் ஆள் பிடிக்கும் வேலை. சாதாரண மக்கள் கொத்துக் கொத்தாகச் சாகிறார்கள். யுத்த பூமியை விட்டு வெளியேறும் மக்களைப் புலிகளே கொல்வது கொடூரம்.

இலங்கை ராணுவம் நிதானமிழக்கிறது. புலிகளையும் மக்களையும் வேறுபடுத்தவில்லை. ‘பாதுகாப்புப் பகுதி’ என்று அறிவிக்கப்பட்ட 3 பகுதிகளில் மக்கள் அடைக்கலம் தேடுகின்றனர். ஆனாலும் இராணுவம் அங்கும் தாக்குகிறது. கிறித்தவ தேவாலயங்கள், கோவில்கள் என்று எல்லாவற்றின் மீதும் தாக்குதல்.

கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கப்பட்டு, கடைசியில் முள்ளிவாய்க்கால் என்னும் சிறு பகுதியில் புலிகளும் 2 லட்சம் மக்களும் நெருக்கப்படுகின்றனர். கடைசி இரு நாட்களில் புலிகளின் தலைவர்கள் புலித்தேவன், நடேசன், சூசை முதலானோர் சரணடைய முயற்சி செய்கின்றனர். அவர்கள் பாதுகாப்பிற்கு நார்வே உதவியுடன் ராஜபக்ஷ உறுதியளிக்கிறார். ஆனால் அவர்கள் சரண் அடையும் போது கொல்லப்படுகின்றனர்.

இறுதி நாளில் பிரபாகரன் உடல் கிடைக்கிறது. போர் முடிகிறது. ஆனால் இன அழிப்பு தொடர்கிறது. மாணிக் பண்ணை என்னுமிடத்தில் அடைக்கலம் புகுந்த மக்கள் கூட்டத்தின் மீது நடந்துள்ள வெறியாட்டம் பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. அதிலிருந்து கையூட்டு அளித்துத் தப்பித்தவர்களை ப்ரான்செஸ்கா ஹாரிசன் பேட்டி காண்கிறார். ஒவ்வொரு பேட்டியும் மனப்பிறழ்வை ஏற்படுத்தும் அளவு கொடுமையான நிகழ்வுகள் கொண்டது.

ஒரு தனி மனிதனின் வெறி, வெளி நாடு வாழ் இலங்கைத் தமிழர்களின் பெரும் பண உதவி, உலக நாடுகளின் பாரபட்சம், ஐக்கிய நாடுகளின் ஆண்மையின்மை, கத்தோலிக்க திருச்சபையின் அலட்சியம் மற்றும் பாரபட்சம், புலிகள் இந்தியாவை அன்னியப்படுத்தியதால் இந்தியா மறுபடியும் தலையிட விரும்பாதது, 2001 அமெரிக்க தாக்குதலுக்குப் பின் தீவிரவாதம் குறித்த உலகப்பார்வையில் மாற்றம் என்று பல காரணங்கள் கூறலாம். ஆனால் செத்தது என்னவோ இரண்டு வேளை கஞ்சி வேண்டிய சாதாரண தமிழ்ச் சகோதரனும், சகோதரியும் தான்.

இந்தச் சாவுகள் மன்னிக்கப்படப் போவதில்லை.

இந்தப் பதிவிற்கு நான் படித்த நூல்களும் அவற்றின் விமர்சனங்களும்:

  1. Still Counting the Dead – a review
  2. Rise and fall of Prabhakaran – a review
  3. A fleeting moment in my country – a review
  4. This divided island – a review

4 responses

  1. A.P.Raman. Avatar
    A.P.Raman.

    அருமையான தகவல் தொகுப்பு. புலிகளின் வளர்ச்சியை இந்திய மத்திய அரசு அறவே விரும்பியதில்லை. தமிழ் நாடும் கூட அதையே தான் செய்தது. ஆனால், தமிழக மக்களின் அனுதாபத்திற்கு எதிராகப் போகாமல் இருப்பதை உணர்த்த மட்டும், தமிழக அரசியல்வாதிகள் அவ்வப்போது புலிகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டி கடைசிவரை வேஷம் போட்டனர். . புலிகளும் அதை நன்கு புரிந்த நிலையிலேயே ஏற்றுக் கொண்டு தமிழ் மண்ணில் உலவினர். ராஜீவ் கொலைக்குப் பின் , சர்வதேச பச்சாதாபத்தை புலிகள் இழந்தனர். இலங்கை அரசுக்கு உட்பட்ட ஆட்சி முறை ஒன்றை அன்றே பிரபாகரன் ஏற்றிருந்தால், இன்று தனி ஈழம், மாநில அளவில் சிறப்பாக செயல்பட்டிருக்க முடியும்.

    Like

    1. Amaruvi Devanathan Avatar

      Well said Sir. Thank you.

      Like

  2. Thayalan Avatar
    Thayalan

    மிகவும் துல்லியமான கருத்துக்கள், நடந்தது இதுதான், முற்றிலும் உண்மை, இலங்கை தமிழ் ஊடகங்கள் கூட இறுதிப் போரின்போது புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தவறுகளை இருட்டடிப்பு செய்துவிட்டன.

    Like

Leave a comment