3 டயர் ஏஸி பாபா ராம்தேவுக்காக மட்டும் உள்ளது. அவரால் மட்டுமே அப்படி கூனி, குறுகி, வளைந்து, நெளிந்து, எம்பி, குதித்து மேலெழும்பி அந்த மூன்றாவது கூண்டுக்குள் சென்று படுக்க முடியும்.
வசதியாக இருக்குமே என்று ரயிலுக்கு வேஷ்டி கட்டிக்கொண்டு வந்தேன். ராசி. 3 டயர் ஏஸியில் மேலுள்ள மூன்றாம் அடுக்கு கிடைத்தது.
ஒரு துள்ளலில் முதல் நிலை மேல் கால் வைத்துவிட்டேன். வெற்றி. இன்னொரு கால் இன்னும் தரையில்.ஒரு எம்பு எம்பி 3வது அடுக்கை ஒரு கையால் பிடித்துவிட்டேன். கால்களில் ஒன்று தரையில், இன்னொன்று முதல் அடுக்கில்.
பெரும் முயற்சியால் முதல் அடுக்குக் காலை வைத்து ஒரு எம்பு எம்பி மூன்றாவது அடுக்கில் அமரவும் இல்லாமல் ஒட்டிக்கொள்ளவும் இல்லாமல் போன்ற நிலையினை அடைந்தேன். தரையில் இருந்த கால் என்னுடன் மூன்றாவது அடுக்கில்.
இப்போது 3வது அடுக்கினுள் நுழைய வேண்டும். கொஞ்சம் வளைந்தேன். முடியவில்லை. இன்நும் கொஞ்சம் வளைந்து ஆங்கில எழுத்து ”சி” போல் ஆனவுடன் அடுக்கினுள் நுழைய முடிந்தது. நத்தை போல் ஊர்ந்து ஒரு அடி முன்னேறினேன். வயிறு பிடித்துக் கொண்டது. அதே நேரம் காலும் குறக்களி இழுப்பு. நகரவும் முடியாமல், அமரவு முடியாமல், நிமிரவும் முடியாமல் அப்படி ஒரு பரமானந்த நிலை. வானத்தின் தேவதைகள் கால் கொலுசு சப்தம் கேட்டது போல் உணர்ந்தேன். கதை முடிந்து ஸ்வர்க்கலோகம் போகும் வழியில் இதெல்லாம் கேட்குமாம்.
நிமிர்ந்தால் வயிற்றுப் பிடிப்பு நீங்கும். நிமிர முற்பட்டேன். ரயிலின் கூரை தனது இருப்பை உணர்த்தியது. தலையைத் தடவிக்கொண்டே ஒரு வழியாக என்னை முழுவதுமாக உள்வாங்கி முழுமையனுபவத்தை அனுபவித்தேன்.
சில மணி நேரங்கள் கழித்து ஐஸ் பெட்டியில் வைத்து விட்டார்களோ என்னும் அளவுக்கு குளிர். போர்த்திக்கொண்டு தூங்கினால் ரயில் எங்கோ நின்றது போல் பட்டது. ”என்ன ஸ்டேஷன்?” என்று பொதுவாகக் கேட்க, யாரோ ஒருவர் ‘தாம்பரம்’ சொல்ல உடனே இறங்க வேண்டிய சூழ்நிலை.
தடாலென்று எழுந்து, ரயில் மேற்கூரை இருப்பை மீண்டும் என் தலை உணர்ந்த அந்த மோனத் தருணத்தில் வேகமாக இறங்க முற்பட்டு, ஒரு கால் தரையிலும், இன்னொரு கால் மூன்றாவது அடுக்கிலும், ஒரு கை மேற்கூரையில் உள்ள கொக்கியிலும், இன்னொரு கை அபய ஹஸ்தம் போல் அமைய, நான் திருவிக்ரமாவதாரம் உலகளந்த பெருமாள் போன்று சேவை சாதித்தபடி அந்தரத்தில் நின்ற போது ”கண்ராவி” என்னும் சொல்லை யாரோ ஒருவர் உதிர்த்ததற்கும் என் வேஷ்டி காணாமல் போயிருந்தது காரணமாக இருக்கலாம் என்று என் இருத்தியால் அறிவு எனக்கு உரைக்கும் முன் ரயில் கிளம்பிவிட்டது.
ஆகவே, மாம்பலத்தில் 3:30 மணிக்கு இறங்கி, மீண்டும் தாம்பரம் வந்த பயணத்தில் காரண-காரிய சம்பந்தம் இருந்ததால் சஹதர்மிணி மூஞ்சியை தூக்கி வைத்துக்கொண்டிருந்ததில் தவறில்லை என்று பட்டது.
ஆகவே நண்பர்களே , மீண்டும் வரி 1ஐப் படியுங்கள்.
Leave a comment