‘எலேய்’, ‘எலே’ – இப்படி யாராவது உங்களை அழைத்தால் கோபம் வரும் தானே? இழிச்சொல், வசை என்று நினைப்போம் தானே?
இனி அப்படி நினைக்க வேண்டியதில்லை. ‘எலுவை’ என்பது பெண்ணை அழைக்கும் சொல்லாம். ‘எலுவன்’ என்பது ‘தோழன்’ என்னும் பொருளில் வருகிறது என்று தமிழ் அகராதி கூறுகிறது. ஆக, எலுவன் என்பது மருவி தற்போது ‘எலேய்’ என்றும், ‘எலுவை’ என்பது ‘எல்லே’ என்றும் வருகிறது என்று சமீபத்தில் படித்தேன்.
ஆக, உங்களை ‘எலேய்’ என்று அழைப்பவர்கள் சில ஆயிரம் ஆண்டுகள் மட்டுமே பழமையான சங்க காலச் சொல்லால் அழைக்கிறார்கள் என்று பெருமைப்படுங்கள். இத்தகைய பழைய சொற்கள் இன்னமும் வழக்கில் உள்ள மொழிகள் உலகில் வெகு சிலவே. நம் தாய் மொழி அவற்றில் ஒன்று.
குறைந்தது 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையுடன், வரி வடிவத்தில் மட்டும் சில மாறுதல்களுடன் இன்றும் வாழும் மொழி என்பதில் நமக்குக் கொஞ்சம் கர்வம் தான், இல்லையா?
அது சரி. இந்த இடத்தில் ஆண்டாளின் ‘எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ?’ நினைவிற்கு வர வேண்டுமே, வருகிறதா? இல்லையென்றால் ‘திருப்பாவை’ 15-வது பாடலைப் பாருங்கள். சரி தானே?
#பாசுரச்சுவை