அருண் முழித்தான்.
‘என்ன மச்சி, ஒண்ணும் புரியல. நீ என்ன எழுதிக்கற?’ என்று என் நோட்டைப் பார்த்தான். பி.ஈ. முதலாண்டு, சேலம் பொறியியல் கல்லூரியில் நுழைவுத் தேர்வின் மூலம் சேர்ந்த நான், அருகில் அம்ர்ந்து, மேற்சொன்ன வார்த்தைகளைச் சொன்ன அருணை நம்ப முடியாமல் பார்த்தேன்.
‘ஆமாண்டா. புரொபசர் பேசறது ஒண்ணும் புரியல. முழுக்கவே இங்கிலீஷ்ல பேசுவாங்களாடா?’ என்றவனைக் கண்டு பரிதாபமே ஏற்பட்டது. ‘ஒண்ணு பண்ணு. நீ எழுதிக்கோ, ரூமுக்கு வந்து எனக்கு விளக்கிச் சொல்லு’ என்ற அருணை நினைத்து எனக்குக் கவலை பிறந்தது.
‘எங்கூர்ல வாத்யாருக்கே இங்கிலீஷ் தெரியாது. எனக்கு மட்டும் எப்பிடித் தெரியும்? முழுக்க தமிழ் மீடியம் தான்,’ என்று தலையணை போல் இருந்த இஞ்சினியரிங் பிசிக்ஸ் புத்தகத்தைப் பிரித்தான் அருண். ‘நாலு வருஷத்துக்குள்ள இந்த புக்க படிச்சுடலாமாடா?’ என்றவனிடம், அது முதலாண்டுக்கான ஒரு நூல் மட்டுமே என்று சொல்ல மனம் வரவில்லை.
இஞ்சினியரிங் பிசிக்ஸ் தலையணையை அவன் வாய் விட்டுப் படித்த அந்த நாள் ‘இவன் என்னிக்கிப் படிச்சு என்னிக்கி முடிக்கறது?’ என்று தோன்றினாலும், ‘நீ படிடா. புரியல்லேன்னா சொல்லு, நாம் சேர்ந்து படிக்கலாம்’ என்று சொன்ன என்னை நன்றியுடன் பார்த்தான்.
சேலத்தை அடுத்த சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்த அருணின் பெற்றோர் ஒருமுறை ஹாஸ்டல் ரூமிற்கு வந்தனர். கண்டாங்கி சேலை கட்டிய அந்த அம்மையார் அருணின் தாய் என்றும், நான்கு முழம் வேட்டியும் அழுக்கேறிய சட்டையும் தோளில் துண்டும் போட்டிருந்த அந்த மனிதர் அவனது தந்தை என்று சத்தியம் செய்தாலும் நான் நம்பத் தயாராக இல்லை.
இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நெய்வேலி நூலகத்தில் இருந்து நான் எடுத்து வரும் போர்ஸித், வோட்ஹவுஸ் நாவல்களை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தவன், ‘இதெல்லாம் எனக்குப் புரியுமாடா?’ என்று கேட்ட போது நான் உள்ளுக்குள் அழுதேன் என்பது உண்மை. ‘சும்மா படிச்சுப் பாரு மச்சி’ என்று நான் அவனுக்குக் கொடுத்து, அவன் சில நாட்கள் போராடிப் பின்னர் திருப்பித் தந்து, மீண்டும் எடுத்துப் படிக்கத் துவங்கினான். ‘முழுசா புரியல. டிரை பண்றேன்,’ என்றவனை நினைத்துப் பரிதாபப்படுவதா, பாராட்டுவதா என்று தெரியாமல் நின்றிருந்தேன்.
ஹாஸ்டலில் ஹிந்து பேப்பர் வாங்குவது என்ற வழக்கத்தை ஏற்படுத்தினேன். நானும் இன்னொருவனும் (அசோக் என்று நினைவு) சேர்ந்து வாங்குவோம். பள்ளி நாட்களின் பழக்கம். ‘அருண், ஹிந்து படி. ரொம்ப இன்றஸ்டிங்கா இருக்கும்,’ என்ற என் பேச்சை நம்பாமல் பின்னர் தினமும் படிக்கத் துவங்கினான்.சில நாட்களில் ‘இன்னும் ஹிந்து வரலியாடா?’என்று பிடுங்கத் துவங்கினான்.
ELA – English Literary Association – என்கிற அமைப்பில் இணைந்தான் என்று நினைவு.அதற்கு என்னையும் சேர்த்து ஆறு பேர் வருவார்கள்.அங்கு ஆங்கில நூல்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்போம்.
நான்கு வருட முடிவில் மெக்கானிக்கல் பிரிவில் கல்லூரியில் இரண்டாவது இடத்தைப் பிடித்து, இன்று ஆஸ்திரேலியாவில் பெரிய பதவியில் இருக்கும் அருண் தற்போது எழுதும் ஆங்கிலம் பிரமிக்க வைக்கிறது.
அருண் இன்று தனது ஊருக்கும், சமூகத்துக்கும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறான்.
அருணின் வெற்றி, விடாமுயற்சியின் வெற்றி,தோல்வியைத் தோற்கடித்த வெற்றி, கருணை மனம் கொண்ட பாரத தேவியின் வெற்றி.
#NEET
Leave a comment