குரு

புரொபசர்  சனாவுல்லா பொறுமைசாலி தான். ஆனால் அன்று தீப்பிழம்பாய் நின்றார்.

‘வேர் ஈஸ் ஹி?’ என்று கர்ஜித்தார். அந்த ‘ஹி’ = சக்தி.

பி.ஈ. இரண்டாமாண்டு நான்காம் செமஸ்டரின் இரண்டாவது மாதம். சக்தி ஒரு மாதமாகக் கல்லூரிக்கு வரவில்லை..

விஷயம் இதுதான்.

சக்திக்குப் படிப்பு வரவில்லை. கட்டை, குட்டையாய், தரையை மட்டுமே பார்த்து ஒற்றைச் சொற்களில் பதில் சொல்பவனிடம் டிரான்ஸ்பார்மர்கள் பற்றி செமினார் எடுக்கச் சொன்னால் என்ன செய்வான்? எலக்றிக் சர்க்யூட்ஸ் பாடத்தை ஒரு நாள் மட்டுமே கேட்டுக் காணாமல் போனான் சக்தி.

ஹாஸ்டலிலும் காணவில்லை என்றவுடன் புரொபசர் பயந்தார். எங்கள் வகுப்பின் சுப்புவை சக்தியின் ஊருக்கு அனுப்பிப் பார்த்து வரச் சொன்னார். திருப்பத்தூர் தாண்டி ஏதோ ஒரு கிராமம். மொத்தமாய் இருபது குடிசைகள் இருந்ததாம். எல்லாரும் பனையேறித் தொழிலாளர்கள். சக்தி என்ற பெயருடன் யாரும் இல்லை என்று சொன்னார்களாம்.

புரொபசர் விடவில்லை. போலீசுக்குப் போகலாம் என்றார். எதற்கும் இன்னும் கொஞ்ச நாட்கள் பார்க்கலாம் என்று சமாதானம் ஆனார்.

அடுத்த வாரம் சக்தி வந்திருந்தான். சனாவுல்லா அழைத்துப் பேசினார். கல்லுளிமங்கன் மாதிரி அழுத்தமாய் அமர்ந்திருந்தானெ தவிர ஒரு வார்த்தையும் பேசவில்லை. எங்களிடமும் ஒரே ஒற்றை பதில் தான். எதற்கும் நேரடியான பதில் இல்லை. நாங்களும் அதிகம் தொந்தரவு செய்யவில்லை.

அடுத்த நாள் வகுப்புக்கு வந்தவனிடம் ‘மொத்தம் 12 அரியர் இருக்கு. எழுதினதே 12 எக்ஸாம் தான். எப்ப க்ளியர் பண்றது?’ என்கிற ரீதியில் நாங்கள் பேச்சுக் கொடுத்த போது, ‘பாத்ரூம் போய் வருகிறென்’ என்று போனவன் திரும்ப வரவில்லை. ஹாஸ்டலிலும் இல்லை.

அந்த வகுப்பில் தான் சனாவுல்லா தீப்பிழம்பாய் நின்றது.

நாட்கள் சென்றன. செமஸ்டர் பரீட்சை வந்தது. எல்லாரும் மும்முரமாகப் படித்துக் கொண்டிருந்தார்கள். அன்று ஹாஸ்டலில் சக்தி தென்பட்டான். ஆனால் மறு நாள் பரீட்சைக்கு வரவில்லை.

பரீட்சை முடிந்ததும் ஒரு மாலை வேளையில் சுப்பு சொன்னான்,’சக்தி இனிமே வர மாட்டான். நான் அவன் ஊருக்குப் போன போது அவன் வீட்டுக்குப் போயிருந்தேன். ‘அப்பாவோட கூட பனை மரம் ஏறப் போறேன். எனக்குப் படிப்பு வரல்ல. ஆனா அப்பப்ப வந்து ஸ்காலர்ஷிப் பணத்த வாங்கிப்பேன்’ அப்டின்னு சொன்னான்’ என்றான்.

‘அவன் படிச்சா அவங்க பேமிலிக்குத் தானேடா நல்லது?’ என்றேன்.

‘எப்டிடா படிப்பான்? பி.ஈ. சீட் குடுத்தா மட்டும் போதுமா?  ஸ்காலர்ஷிப் குடுத்தா மட்டும் போதுமா? அவனுக்கு ஸ்கூலுக்கு என்னடா பண்ணியிருக்கு  கவர்மெண்டு? வீடு ஓலைக் குடிசை. ஸ்கூலு 10 கிலோமீட்டர் தள்ளி. வாத்தி வரமாட்டான். இவன் அதால மரந்தான் ஏறிட்டிருந்தான்.  இப்ப கொண்டு வந்து பி.ஈ. படின்னு கான்வெண்ட் பசங்களோட போட்டா, என்னடா பண்ணுவான் அவன்?’ சுப்பு அழுதுவிடுவான் போல் இருந்தது.

கொஞ்ச நேரம் அமைதியாயிருந்தேன். ‘அன்னிக்கி நீ புரொபசர்ட்ட பொய் சொன்னியாடா?’ என்றேன்.

‘ஆமா. அவனைப் பார்த்தேன்னு சொல்லியிருந்தா அவனோட ஸ்காலர்ஷிப் என்ன ஆகுமோன்னு எனக்குப் பயமா இருந்தது. பாவம்டா அவன். அப்பிராணி. ஏண்டா இப்பிடியெல்லாம் கஷ்டப்படணும் ?’ என்று அழுதவாறே கேட்டான் சுப்பு.

‘அவன் வீடு பார்த்தியா?’ என்று மெதுவாகக் கேட்டேன்.

‘அந்த 20 கொட்டாய்ல அவனுதும் ஒண்ணு’ வாய் விட்டே அழுதான் சுப்பு.

அடுத்த இரண்டு ஆண்டுகளும் சக்தி கல்லூரிக்கே வரவில்லை என்றாலும், புரொபசர் சனாவுல்லாவின் தலையீட்டால் ஸ்காலர்ஷிப் பணம் கிடைத்துக் கொண்டிருந்தது என்று பின்னர் தெரிந்து கொண்டேன்.

*மாணவர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

One thought on “குரு

  1. ஸ்கலாரே இல்லாவதற்கு ஷிப்பா. Scholar 👨‍🏫 means only student not a great intellectual

    Like

Leave a comment