‘உனக்கு நூறு தடா வெண்ணையும் அக்கார அடிசிலும் அமுது செய்விப்பேன்’ என்று பெருமாளிடம் ஆண்டாள் சொல்லியிருந்தாள். அவளால் முடியவில்லை. அவளது உள்ளக்கிடக்கையை அறிந்து ஶ்ரீமத் இராமானுசர் தான் செய்து கணருளப் பண்ணினார். இதனால் உடையவரை ஆண்டாள் ‘எம் அண்ணரே’ என்று கொண்டாடியதாக ‘பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே’ என்று வாழித் திருநாமம் உண்டு.

ஆனால் இன்று அவளுக்கே தளிகைகள் இல்லை என்ற செய்தி 60 வருடங்களில் தமிழகத்தை ஆண்ட அரசுகளின் அவலட்சணத்தை வெளிப்படுத்துகிறது. அறம் நிலையாத் துறையில் பணிபுரிபவர்கள் தாங்கள் சோற்றில் கை வைக்கும் தருணங்களில் ‘இந்தச் சோறு உண்ண எனக்கு எள்ளளவாவது அனுமதி உண்டா? ஆண்டாளின் சோற்றை அல்லவா நான் உண்கிறேன்? அவளைப் பட்டினி போட்டு உண்ணும் இந்த உணவு எனக்கு வேண்டாம்’ என்று சொல்ல வேண்டும். பணம் கொடுத்து வேலைக்கு வந்தவர்களிடம் இதை எதிர் பார்க்க முடியாது என்றாலும், இப்பதிவைப் படிக்கும் யாராவது ஒருவருக்காவது அந்த எண்ணம் வரலாம்.
அப்படியொரு எண்ணம் வரவேண்டியது ஏன் என்று கேட்கலாம். ‘நான் உண்ணும் உணவை அரசு அற நிலையத் துறை மூலம் அளிக்கிறது. ஆனால், துறையோ கோவிலின் சொத்தை உண்பவர்களிடமிருந்து பணத்தைப் பிடுங்காமல், கொள்ளை போக விட்டு, மற்ற வழியில் அரசு ஈட்டும் வருமானம் வழியாக எனக்கு இந்தச் சோற்றை அளிக்கிறது. அப்படியும், இந்தச் சோற்றுக்குக் காரணமான தெய்வ வடிவங்களின் வயிற்றில் அடித்துவிட்டு எனக்கு அளிக்கிறது. ஆகவே தெய்வங்களைக் கொன்று அரசு அளிக்கும் இந்தச் சோறு பிணச்சோறு. எனவே இந்தச் சோறு எனக்கு வேண்டாம்,’ என்று அவர்களின் எண்ணங்களில் தோன்றலாம் என்கிற நப்பாசை தான்.
இதெல்லாம் நடக்குமா என்று தெரியவில்லை. ஆனால், நாம் செய்யக் கூடியது ஒன்று உள்ளது.
சேவார்த்திகளாகக் கோவில்களுக்குச் செல்லும் போது, அங்கிருக்கும் அறம் நிலையாத்துறையினரிடம் ‘ கோவில் நிலங்கள் எவ்வளவு? வருமானம் எவ்வளவு? நித்ய மண்டகப்படி எவ்வளவு? நீங்கள் நித்யம் எவ்வளவு கண்டருளப் பண்ணுகிறீர்கள்? ஏன் குறைகிறது? உங்கள் சம்பளம் வருடாவருடம் குறைகிறதா? கோவில் வருமானம் குறைந்தால் உங்களின் வருமானத்தையும் குறைத்துக் கொள்ளலாமே..’ என்கிற ரீதியில் கேட்கலாம்.
அடுத்த முறை சோற்றில் கை வைக்கும் போது உறைக்கும், அவர்கள் சோற்றில் உப்பிட்டு உண்பவாரக இருந்தால்.