The side that is not spoken about, generally.

‘அன்றிவ்வுலகம் அளந்தாய்’ #பாசுரம், துயில் எழுந்த கண்ணனைத் துதிப்பதாய் அமைந்துள்ளது. துதியுடன் பெருமாளின் அவதாரங்கள் குறிப்பிடப்படுகின்றன.

‘உலகம் அளந்தாய் என்பதால்’ திரிவிக்கிரம அவதாரமும், ‘தென் இலங்கைச் செற்றாய்’ என்பதால் இராமாவதாரமும், ‘குன்று குணிலா வெறிந்தாய்’, ‘கன்று குடையாவெடுத்தாய்’ என்பதால் கிருஷ்ணாவதாரமும் குறிக்கப்படுகின்றன. ‘மாரி மலை’ பாசுரத்தில் நரசிம்மாவதாரம் குறிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

இப்பாசுரத்தின் மூலம் உணர்த்தப்படுவன:

  1. திருவடியின் சிறப்பு-  உலகம் அளந்தது
  2. இறைவனின் திறன் – இராவணன் அழிப்பு
  3. பெருமாள் புகழ் – சகடம் உதைத்தது
  4. கண்ணனின் ஆற்றல் – கன்றினை விளவின் மீது எறிந்தது
  5. கண்ணனின் குணம் – குன்றைக் குடையாய் எடுத்து ஆநிரைகளைக் காத்தது

முதலில் திருவடியின் பெருமை, பின்னர் திருக்கைகளின் பெருமை என்பதாக அமைந்துள்ளது இப்பாசுரம்.

‘பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி’ என்னுமிடத்தில் திடீரென்று வேல் எங்கிருந்து வந்தது என்கிற கேள்வி எழலாம். முதல் பாசுரத்தில் ‘கூர் வேல் கொடுந்தொழிலன் நந்த கோபன் குமரன்’ என்று வேல் உடைய நந்தகோபனின் மகன் என்று கண்ணனைக் குறிக்கிறாள். எனவே கண்ணனிடத்தில் வேல் இருந்தது நியாயமே.

திரிவிக்கிரமாவதாரம் பேசப்படும் இப்பாசுரம் போலவே ‘ஓங்கி உலகளந்த’ பாசுரத்திலும், ‘அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த’ என்று இன்னொரு பாசுரத்திலும் அதே அவதாரம் பேசப்படுவது ஒரு சுவை. தனது அனைத்துப் பாசுரங்களின் வழியாகவும் பெருமாளின் பல அவதாரங்களைப் பேசுகிறாள் ஆண்டாள்.

ஒவ்வொருவராக எழுப்பி, திருமகளையும் எழுப்பி, அவளை முன்னிட்டு எம்பெருமானை அடைந்து, அவனையும் எழுப்பி ( நரசிம்ம அவதாரத்தின் மூலமாக), அவன் எழுந்தவுடன் பறை வேண்டி, அவனைத் துதிக்கத் துவங்குகிறார்கள். இது சரணாகதிக்குப் பின் நாம் செய்ய வேண்டிய அனுஷ்டானங்களை உணர்த்துவதாக உள்ளது.

‘என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான் வந்தோம்’ என்பதால், ‘வேறு ஒன்றும் தேவை இல்லை, உன் கைங்கர்யமே பிரதானம்’ என்பது உணர்த்தப்படுகிறது.

Leave a comment