‘மாலே மணிவண்ணா’ பாசுரத்தில் ஜீவாத்மா பரமாத்மாவைச் சேறும் இறுதி நிலை தெரிகிறது. அதற்கான நோன்பிற்குத் தேவையான உபகரணங்களைச் சேகரிக்கும் விதமாக அமைந்துள்ளது இப்பாசுரம்.
‘நாங்கள் மோக்ஷம் பெற அவாவுடன் தயாராக உள்ளோம். இதற்குத் தேவையான பொருட்களை அருள்வாயாக. உலகை நடுங்க வைக்கும் ஒலி எழுப்பும் பாஞ்சசன்னியம் போன்ற பல சங்குகள், எங்களின் வருகையை அறிவிக்கும் பறை, விடியற்காலையாகையால் ஒளியூட்ட அழகிய விளக்கு, பனியிலிருந்து காக்க விதானம் போன்ற துணிக்குடை, அனைத்திற்கும் மேல் வாழ்த்துப் பாடுவதற்குப் பண்ணிசைப்பார், நாங்கள் வருவதை அறிவுக்கும் கொடி (வேறு எங்கிருந்து வந்து சேர்வோரும் தெரிந்துகொள்ள) என்று அருள்வாயாக,’ என்பதாகப் பொருள்படுகிறது பாசுரம்.
‘பல்லாண்டிசைப்பாரே’ என்பதால் இவ்விடம் ‘பல்லாண்டுப் பாசுரம்’ பாடிய பெரியாழ்வார் குறிப்பிடப்படுகிறார் என்றும் ஒரு பார்வை உண்டு. ‘வில்லிபுத்தூர் விட்டுசித்தன்’ என்று பின்னர் குறிப்பிடப்போவதை முன்னரே இவ்வாறு சொல்கிறாள் #ஆண்டாள் என்பது ஒரு சுவை.
‘மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்’ என்னும்போது பெரியோர் செய்தவைகளை நாங்களும் செய்ய வேண்டும் என்பது குறிக்கப்படுகிறது. முன்னர் ‘செய்யாதன செய்யோம்’ என்று சொன்னது நினைவிருக்கலாம். முன்னோர் செய்யாதன செய்யோம் என்ற பொருளில் இன்றைய பாசுரத்தின் ‘மேலையார்’ விசேஷமான பொருள் தருகிறது. முன்னோர் செய்தவற்றைப் பெருமையாகச் சொல்கிறாள் ஆண்டாள்.
‘இத்தனை பொருள்களையும் நான் எப்படித் தர முடியும் இந்த அதிகாலை வேளையில்?’ என்று கண்ணன் கேட்க, அதற்கு ‘நீ பிரளய காலத்தில் ஆலின் இலையில் மிதந்தவன். ஆனால் அச்சிறிய வயிற்றுக்குள் உலகங்களைச் சுமப்பவன். ஆகையால் இவற்றையெல்லாம் தருவிப்பது உனக்கு ஒரு பெரிய செயல் அல்ல’ என்று ஆய்ச்சியர் கூறினார்கள் என்பது காலட்சேபங்களில் சேவிக்கப்படுவது.