The side that is not spoken about, generally.

ஸ்ரீமதி. விசாகா ஹரியின் சங்கீத உபன்யாசம்  இந்தத் தை மாத ஏகாதசி அன்று கிடைத்த பேரருள்.

  • நடந்த இடம்: ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில், சிங்கப்பூர்.
  • நடந்த நாள் : ஏகாதசி, மாலை.
  • தலைப்பு: ‘எந்தரோ மஹானுபாவுலு’

துவக்கமே அமர்க்களம். தலைப்பிற்கு ஏற்றாற் போல தியாகப் பிரும்மத்தின் ‘எந்தரோ மஹானுபாவுலு’வில்  துவங்கினார். பின்னர் தியாகையரின் ராக, தாள, லய, ஸம்ஸ்க்ருத மேதாவிலாசங்களைத் தக்க கீர்த்தனைகளின் வாயிலாக விளக்கினார்.

‘Prism’ வழியாக ஒளிக்கற்றை செல்லும் போது ‘Refraction’ ஏற்பட்டு, ஏழு வண்ணங்கள் உருவாவது போல் ‘ஓம்’ என்னும் பிரணவம் நமது உடல் என்னும் Prism வழியாக ஊடுறுவும் போது தோன்றுவதே சப்த-ஸ்வரங்கள் என்று அவர் கூறியது சுவை.

e0aeb5e0aebfe0ae9ae0ae95_e0aeb9e0aeb0e0aebf.jpg‘நாத உபாசனை’, ‘வாகேயக்காரர்’ என்பனவற்றுக்கு அவர் அளித்த  விளக்கங்கள் ஆழ்ந்த பொருளுடையவை.

தியாகப் பிரம்மம், புரந்தர தாசர், ஆண்டாள் என்று மூன்று பொக்கிஷங்கள் பற்றி அவர் அளித்த விளக்கம்   850 பேரை சுமார் இரண்டரை மணி நேரம் கட்டிப் போட்டது என்பது உண்மை.

உத்திரப் பிரதேசம், மத்தியப்பிரதேசம், வங்காளம், ஒரிசா, மஹாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரம், தமிழ் நாடு, கேரளம் என்று பிராந்தியம் வாரியான ஆன்மீகப் பெரியோர்களைப் பட்டியலிட்ட விசாகா ஹரி, அவர்கள் ஒவ்வொருவரையும் பாரத மாதாவின் உடலை அலங்கரிக்கும் ஆபரணங்களுக்கு உருவகப் படுத்தியது மெய்சிலிர்க்கவைக்கும் அனுபவமாக இருந்தது. பாரத மாதாவின் பாதங்களுக்கு இந்தியப் பெருங்கடல் பாத பூஜை செய்கிறது என்றது உடலில் மயிர்க்கூச்செறியச் செய்தது.

தியாகப் பிரம்மம் பற்றியும், புரந்தர தாசர் பற்றியுமான நிகழ்வுகளைக் கூறும் போது, அவர்களது கீர்த்தனைகளையும் தொடர்புடைய இடங்களில் இணைத்தும், நெகிழ்ச்சியூட்டும் சில நிகழ்வுகளைச் சொல்லும் போது தானே கண்ணீர் மல்கக் கூறியதும் உபன்யாச்த்தை வேறு நிலைக்குக் கொண்டு சென்றது. ஶ்ரீவத்ஸ ஜெயராம சர்மா அவர்களின் ‘ந்ருஸிம்ஹாவதரம்’ உபன்யாசத்தில் இவ்வாறான அனுபவம் ஏற்பட்டதை எனக்கு னினைவூட்டியது.

நிகழ்ச்சியின் இறுதியில் ஆண்டாள் பற்றிச் சொன்ன அவர், தற்போதைய சர்ச்சையையும் ஒரு குட்டு குட்டினார். சிங்கப்பூர் மேடையில் இதைப்பற்றிய இரண்டாவது குட்டு இது.

தியாகராஜர் பற்றிய சில புள்ளி விவரங்கள்:

  1. 250 ராகங்களில் பாடியுள்ளார்.
  2. 24,000 க்ருதிகள் பாடியுள்ளார்.
  3. பல ராகங்கள் அபூர்வமானவை.
  4. தோடி ராகத்தில் மட்டுமே 30 க்ருதிகள் பாடியுள்ளார்.

புரந்தர தாசர் பற்றிய சில விவரங்கள்:

  1. மிகப்பெரிய செல்வந்தர், பின்னர் அனைத்தையும் துறந்தவர்.
  2. 4,89,00 க்ருதிகள் பாடியுள்ளார்.

வெகு நாட்களுக்குப் பிறகு மிக உன்னதமான ஆன்மீக அனுபவமாக அமைந்தது ஶ்ரீமதி.விசாகா ஹரியின் சங்கீத உபன்யாசம். மிருதங்கத்தில் முத்து சுப்பிரமணியன் ( ரசாயனப் பொறியாளர்), வயலினில் ஶ்ரீநாத் ஐயர் ( மென்பொறியாளர்) – மிகுந்த ஊக்கத்துடன் பங்கேற்றனர்.

உபன்யாசம் முழுவதும் தனது மாமனாரான கிருஷ்ணப் பிரேமி சுவாமிகளின் ‘வைஷ்ணவ சம்ஹிதா’ நூலில் இருந்து மேற்கோள் காட்டியபடி இருந்த விசாகா ஹரி, நிகழ்ச்சியை  ‘எந்தரோ மஹானுபாவுலு’வில் துவங்கி , அதே கீர்த்தனையுடன் நிறைவு செய்தார். முடிவில், ஆண்டாளைத் தொட்டு, ‘ரங்கநாத தத்துவம் என்பது என்ன?’ என்கிற ஆழ்ந்த தத்துவ விளக்கம் அளித்தது நிகழ்ச்சியின் வைரக்கல்.

நிகழ்வில் பாடப்பட்ட சில கீர்த்தனைகள்:

  1. எந்தரோ மஹானுபாவுலு
  2. செக்கனி ராஜ
  3. ரா ரா தேவாதி தேவா
  4. பாக்யாத லக்ஷ்மி
  5. வேங்கடாசல நிலையம்
  6. ஶ்ரீரங்க புர விஹாரா

‘செக்கனி ராஜ’ கீர்த்தனையைப் பல விதங்களில் பாடி, ஒவ்வொரு முறையிலும் உள்ள உட்பொருளை விளக்கியது ஆக அருமை. இனி அப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் அத்தனை விளக்கங்களும் மனதில் ஓடும் என்பதில் ஐயமில்லை.

தேர்ந்த சங்கீத ஞானம், நல்ல ஸம்ஸ்க்ருத உச்சரிப்பு, அபரிமிதமான ஆங்கில, தமிழ்ப் புலமை, கருணை பொழியும் குரல் வளம், ஆழ்ந்த பக்தி என்று உபன்யாச உலகில் வலம் வரும் அந்த அம்மையாருக்கு எனது வணக்கங்கள். அவருடன் வந்திருந்து உடனுடன் பாடியபடியே அமர்ந்திருந்த அவரது 10 வயது மகன் ராஜகோபால், எதிர்காலத்தில் நல்ல உபன்யாசகராக வருவதற்கான தேஜஸ் ( தமிழில் தேசம்) பெற்றிருக்கிறான். வாழ்த்துக்கள்.

பி.கு.:

  1. உபன்யாசம் ஆங்கிலத்தில். அதனால், உணர்ச்சிபூர்வமான பேச்சில் திடீர் வேகத் தடைகள். சிங்கையின் பல மொழிச் சூழலில் ஆங்கிலம் புரிந்துகொள்ளப் படக்கூடியதே என்றாலும், தமிழிலேயே இருந்திருந்தால் அனுபவம் இன்னமும் அதிகமாக இருந்திருக்கும்.
  2. விழா முடிந்தவுடன் அவரைச் சந்தித்துச் சில மணித்துளிகள் உரையாடினேன். எனது ‘நான் இராமானுசன்’ நூலைப் படித்துக் கருத்துரைப்பதாகச் சொல்லியுள்ளார்.

One response

  1. A.P.Raman, Singapore Avatar
    A.P.Raman, Singapore

    ஆம். அருவி போன்று அள்ளித் தெளிக்கும் அழகான விமர்சனம், ஆமருவிவியின் விமர்சனம்! சொட்டச் சொட்ட நனைய வைத்தது. தலையைத் துவட்டிக் கொள்ள மனம் வரவில்லை. அம்மையார் ஓர் இறைத் தூதர்! பக்தன் ஆமருவி அனுபவித்து எழுதியவை, ஸ்வர-சுதி சுத்தமான சங்கீதம். வாழ்த்துகள். ஏ.பி.ராமன்.

    Like

Leave a comment