உங்களுக்கு அடையார் அம்பிகா அப்பளம் சந்திப்பு தெரியும் தானே? தெரியாதவர்களும் வாசிக்கலாம்.
எனக்கு வலப்புறத்தில் அம்பிகா அப்பளம் கட்டடம் உள்ளது. நான் காரில் உள்ளேன். எனக்கு எதிரே ஆங்கில T வடிவ போக்குவரத்து சந்திப்பு. T-யின் மூன்று கோடுகளும் மீடியன் வைத்த இருவழிச் சாலைகள். அதிக நெரிசல். மாலை 5 மணி.
எனக்கு இடப்புறம் சர்தார் படேல் சாலையில் இருந்து கார்கள் என் வலதுபுறம் நோக்கி நகர்கின்றன. பெரிய லாரி மெதுவாக ஆடியபடி வருகிறது. அப்போது சர்தார் படேல் சாலையின் வலப்புறத்தில் இருந்து ஒரு டூ-வீலர் வருகிறது. ஓட்டுவது 16 வயது மதிக்கத்தக்க சிறுவன். ஆடியபடியே வந்தவன், இடப்புறமிருந்து வரும் லாரிக்குக் குறுக்கே வருகிறான். லாரி குலுங்கியபடி நிற்கிறது. சிறுவன், கண்டுகொள்ளாமல், நின்றுகொண்டிருக்கும் என் காரின் முன் வருகிறான், வாகனதின் மேல் அமர்ந்தபடி. இரு கைகளையும் தூக்கி எனக்கு வணக்கம் வைக்கிறான். 180டிகிரி திரும்பி லாரியைச் சுற்றிச் சென்று மீண்டும் வந்த வழியே சர்தார் படேல் சாலையில் திரும்பிச் செல்கிறான். மொத்தப் போக்குவரத்தும் ஸ்தம்பித்து நிற்கிறது. காவலர் விசில் ஊதுகிறார். 15 வினாடி ஆச்சர்யம் / பயம் தெளிந்த பிறகு போக்குவரத்து மீண்டும் துவங்குகிறது.
இது ஏன் நிகழ்ந்தது? அந்தச் சிறுவன் ஏன் அப்படிச் செய்தான்? தெருவில் யாருமே ஏன் அந்தச் சிறுவனைத் தட்டிக் கேட்கவில்லை? காவலர் ஓடிச்சென்று பிடித்திருக்கலாமே? அவர் ஏன் செய்யவில்லை? கண நேர எரிச்சல், ஆச்சர்யம், பயம். பின்னர் அப்படி ஒன்று நிகழ்ந்ததாகவே யாருக்கும் நினைவில் இல்லை. ஏன் இப்படி? என்னுள் யோசித்தேன்.
அந்த நொடி நேர நிகழ்வு என்னை உலுக்கிவிட்டது. அந்தச் சிறுவனை எங்கோ பார்த்திருக்கிறேன் என்று தோன்றியது. யோசித்துப் பார்க்கிறேன். நினைவிற்கு வரவில்லை. ஏதோ மெக்கானிக் கடையில் வேலை செய்யும் சிறுவனைப் போல் தோற்றம். வறிய நிலை முகத்தில் வெளிச்சம். உடைகளில் அழுக்கு + கிரீஸ். எண்ணெய் காணாத தலை. மீண்டும் மீண்டும் யோசித்தேன். பிரயோஜனமில்லை.
இல்லம் சேர்ந்த பின்பும் மன அழுத்தம் தீர்ந்தபாடில்லை. சற்று நேரம் கழித்து குடும்பத்துடன் பேசிக்கொண்டிருந்த போது ஒரு கொசு தொல்லை தந்து கொண்டே இருந்தது. சற்று பெரிய அளவு. புஷ்டியான, கரிய நிறக்கொசு. ஓரிரண்டு முறை முயன்று அடித்துப் பார்த்தேன். தப்பித்துவிட்டது. பேச்சு சுவாரசியத்தில் கொசு நினைவில் இல்லை. சற்று நேரம் கழித்து மீண்டும் அது. மகன் ஒரு கொசு பேட் எடுத்து வந்து ஒரே முயற்சியில் கொசுவை வீழ்த்தினான். பேச்சு தொடர்ந்துகொண்டே இருந்தது.
ஏதோ நினைவு வந்தவனாகக் கீழே விழுந்த கொசுவைப் பார்த்தேன். பேசிக்கொண்டிருந்தவர்கள் யாருக்கும் அந்தக் கொசு நினைவில் இல்லை. அப்படி ஒன்று நிகழவே இல்லை என்பது போல், அங்கு ஒரு சாவு நிகழ்ந்ததைக் கண்டுகொள்ளவே இல்லை. அப்படி ஒன்று நிகழ்ந்ததாகவே யாருடைய நினைவிலும் பதியவில்லை.
அப்போது அங்கே அந்தச் சிறுவன் தெரிந்தான், கொசுவாக.
ஒருவேளை அந்தச் சிறுவன் வண்டியில் ஆடும் போது விழுந்திருந்தால், அடிபட்டிருந்தால் அப்படி ஒன்று நிகழாதது போலவே கூட்டம் நகர்ந்திருக்கும். அந்த விடலைச் சிறுவனையும் கொசுவையும் ஒரு தேவையற்ற, மதிக்க வேண்டியிராத தொல்லையாகவே பார்க்கிறது சமூகம். இரண்டுமே அழையா விருந்தாளிகள். அவற்றால் தொல்லை தான். எனவே அவர்களுக்கு ஒரு துன்பம் என்றால் அது கண்டுகொள்ளப் படாது.
சென்ற வாரம் தரமணி ஓ.எம்.ஆர். ரோடில் இருந்து கோட்டூர்புரம் செல்லும் சந்திப்பில் காரில் காத்திருந்தேன். ஒரு அடி கூட முன்னேற முடியாத அளவிற்கு நெரிசல். அங்குலம் அங்குலமாக நகர்ந்துகொண்டிருந்தோம். கண்ணாடியில் பார்த்தேன். சுமார் 25 வயது ஆள் பலம் அதிகம் உள்ள டூ-வீலரில் சர்க்கஸ் செய்வது போல் கார்களுக்கு இடையே புகுந்து புகுந்து வந்துகொண்டிருந்தான். சுமார் 5 நிமிடங்களில் என் காரைத் தாண்டி முன்னேறிச் சென்றான். அக்கம் பக்கத்தில் காத்திருந்த கார் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டுனர்கள் முகம் சுளித்தபடி பார்த்திருந்தனர். முன்னர் இரண்டு கார்களைத் தாண்டியிருப்பான். தரையில் எண்ணெய் போலும். வழுக்கி விழுந்தான். தலை தரையில் பட்டது. மெள்ள எழுந்து அமர்ந்தான். யாராவது உதவுவார்களோ என்று அண்ணாந்து பார்த்தான். அவன் அருகில் இருந்த யாரும் அவனைப் பார்க்கக் கூட இல்லை. காரின் கதவைத் திறக்க முயன்றேன். முடியவில்லை. அவ்வளவு நெரிசல். ஒரு ஆசாமி விழுந்தான், அவன் உதவி கோருகிறான் என்கிற பிரக்ஞையே இல்லாமல் முன்னால் பார்த்துக் கொண்டிருந்தனர் அவன் அருகில் காத்துக்கொண்டிருந்த ஓட்டுனர்கள்.
இதில் அறம் இல்லையா என்றெல்லாம் யாரும் நினைக்கவில்லை. இம்சை அளித்த கொசு ஒன்று அடி பட்டு விழுந்தது என்று எண்ணியிருக்கலாம் என்று தற்போது தோன்றுகிறது.
16 வயது சிறுவனும், 25 வயது ஆளும் தங்கள் மீது ஒரு பார்வை விழ வேண்டும் என்பதற்காக உயிரைப் பணயம் வைத்துச் சாலைகளில் கூத்தாடினார்கள். நானும் இந்தச் சமுதாயத்தில் ஒருவன் தான், என்னையும் கவனியுங்கள் என்று மவுனக் கூக்குரலுடன் அவர்கள் நடமாடிச் சென்றனர். கொசுவும் அப்படியே.
இந்தப் பதிவை வாசிக்கும் சாலைகளில் கூத்தாடும் இளைஞர்கள் சற்று நிதானித்துப் பார்க்கவும். நீங்கள் கொசுவிற்குச் சமமானவர்கள் என்றே இந்தச் சமூகம் உங்களை மதிப்பிடுகிறது. சாலைகளில் உங்களைக் கடந்து போகும் மனிதர்களுக்கு உங்கள் உயிர், உங்கள் நலன் என்று எதைப் பற்றியும் அக்கறை கிடையாது. உங்கள் வினாடி-நேரக் கவன் ஈர்ப்புகள் கொசுவின் ரீங்காரத்தைப் போன்றே பார்க்கப்படுகின்றது. கொசுவுக்கு நேரும் கதியே உங்களுக்கும்.
எனவே, உங்கள் விருப்பம் யாது? கொசுவாக இருப்பதா அல்லது நாகரீக மனிதராகவா ?
சாய்ஸ் உங்களுடையது.
Dear sir,
Greetings of the day,
I am living in Trichy last 7 years here also same type of road guys
including auto Eman ,
இன்னும் 100 வருஷம் ஆனாலும் திருத்த முடியாது இவர்களை போல் ஆட்களை,
நாம் ஓரமாக மெதுவாக செல்லும் போது நாம் தான் அவர்களின் முதல் target,
நன்றி.
Sriram.C
LikeLike