திருவிடந்தையில் ஒரு மணி நேரம்

‘இங்கே வர இவ்வளவு நாளா?’ என்று கேட்பது போல் தோன்றியது. சில ஆயிரம் ஆண்டுகளாக நின்றுகொண்டிருக்கும் பெருமாள்அவர்.  பலமுறை செல்ல யத்தனித்துக் கடைசியாக இன்று(11-03-2020) நிறைவேறியது. இடம் திருவிடந்தை ( முன்னர் திரு இட வெந்தை). பெருமாள்: நித்யகல்யாணப் பெருமாள்.

ஒரு துளி அகம்பாவம் இல்லை. ஒரு பொட்டு அலட்டல் இல்லை. ‘போங்கோ போங்கோ’ என்ற அதிகாரத் தோரணை இல்லை. கோவிலில் யாருமே இல்லை, அர்ச்சகரும் பெருமாளும் மட்டுமே. பிரளயம் முடிந்து பேரமைதி நிலவும் நேரம் போல் அலைபாயும் பெரும் மவுனத்தின் மத்தியில் மோன நிலையில் நின்றிருந்தார் திருவிடந்தைக் கோன் பூவராஹப் பெருமாள். அவர் மடியில் அளவில்லாக் கருணையுடன் அகிலவல்லித் தாயார். குளிர்ந்த கடற்காற்றும், பேரமைதியும் சேர்ந்து பெருமாளின் சான்னித்தியத்தின் அருகாமையைப் பல மடங்குகள் அதிகரித்தது போல் தோன்றியது.

யுகங்கள் பல கடந்தும் யுகங்களைத் தாண்டிய பார்வையுடன், அனைத்தையும் அறிந்தவராய் மானுடர்களின் கோணங்கித்தனங்களையும் ஆணவப் பரிபாஷைகளையும் கவனித்துக் கொண்டிருந்தார் பூவராஹப் பெருமாள். பேரமைதியுடன் நின்றுகொண்டிருந்த தலைவனின் சன்னிதியிலும் பேரமைதியே நிலவியது. அந்தப் பெருத்த மவுனத்தில் மனதில் தேங்கியிருந்த பல கேள்விகளுக்கு மவுனத்திலேயே விடைகள் கிடைத்ததை உணர முடிந்தது.

கூட்டம் இல்லை என்பதால் ஏகாந்தமாகச் சேவிக்க முடிந்தது. கோவிலின் தல புராணம், உற்சவங்கள் என்று பலதையும் பற்றிக் கூறினார் அர்ச்சகர். சேவை முடிந்தும் கூட்டம் இல்லாததால் மேலும் 15 மணித்துளிகள் நின்றபடி சேவித்துக்கொண்டிருந்தோம். இப்பெருமானைத் திருமங்கையாழ்வார் பாடியுள்ளார்.

பிரிய மனமின்றி வெளியேறினோம். தாயார் (கோமளவல்லி) சன்னிதிச் சுவர்களில் வட்டெழுத்துக்களும் தற்காலத்திய எழுத்துகளுமாய் வரலாற்றைப் பறைசாற்றி நின்றன. சுவர்களில் தெலுங்கு எழுத்துக்களும் உண்டு.

கோவில் தூண்களில் பல புராணச் சிற்பங்களுக்கிடையில், ஆச்சாரியர்களின் உருவங்களும் தென்படுகின்றன. கையில் த்ரிதண்டம் ஏந்திய ஆச்சார்யர்கள் பலர் உள்ளனர். நின்ற கோலத்திலும், அமர்ந்த கோலத்திலும் தென்படும் இவ்வாசார்யர்களில் உடையவர் இருக்கிறார். மாமுநிகளும் இருக்கலாம். ஆனால் பலரது நெற்றியில் வடகலைத் திருமண் தென்படுகிறது. எனவே சில ப்ராசீன மடங்களின் ஜீயர்களோ என்று எண்ண இடமுண்டு. (அறிந்தவர்கள் தெளிவியுங்கள்).

சில சிற்பங்கள் சிதிலமடைந்துள்ளன (சிதைக்கப்பட்டுள்ளன?). காலத்தின் கோலம் என்பதை உணர முடிகிறது. ப்ராசீனமான சில சிற்பங்கள் என்பதாலும், கடல் காற்று என்பதாலும் அவற்றின் உருவங்கள் தேய்ந்து போயிருக்கலாம் என்றும் ஊகிக்க இடமுண்டு. பல்லவர் கோவில். எனவே பழமைக்குப் பஞ்சமில்லை.

ஆண்டாள் சன்னிதியில், ஆழ்ந்த பேரமைதியில், ‘அன்னவயல் புதுவை’ தனியனைச் சேவித்தேன். ‘மார்கழித் திங்கள்’, ‘வையத்து வாழ்வீர்காள்’ பாசுரங்களை மெதுவாகச் சேவித்த போது மோனத்தில் இருந்த ஆண்டாள் தலையசைப்பது போல் தோன்றியது. பிரமைதான் என்றாலும், தாயார் அல்லவா? என்றுமே ஆண்டாள் என்றாலே ஒரு தனி பிரியம் தான்.

ஆண்டாள் சன்னிதியில் பிள்ளையார்
விநாயகர்

ஆண்டாள் சன்னிதியின் தூண்களிலும் சில ஆச்சார்யர்கள் உள்ளனர். அங்கிருந்த சிதிலமடைந்த விநாயகர் சிற்பம் மனதை அழுத்திப் பிழிந்தது. ஆனால் வைணவ திவ்யதேசத்தில் எப்படி? ஒருவேளை, விநாயகர் சிலை என்பதால் சிதைக்கப்பட்டதோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. அச்சிற்பத்தை இந்த அளவிற்கு ஆக்கிய கைகளை, அச்சிலையை வடித்த சிற்பியின் ஆன்மா மன்னிக்க வாய்ப்பே இல்லை. சிலைகளுக்கும், சிற்பங்களுக்கும் அருகில் அவற்றை வடித்த சிற்பிகளின் ஆன்மா நின்றபடியே இருக்கும்.

கோவிலின் தல விருக்‌ஷம் புன்னை மரம். கடற்காற்று வீச, அசைந்தாடும் குழந்தை வேண்டிய தொட்டில்கள் சிலுசிலுக்க, புன்னை மர தேவி அங்கு கம்பீரமாகக் காட்சியளிக்கிறாள், அது யாருடைய மண் என்பதையும் பறைசாற்றுகிறாள்.புன்னை மரத்தில் தொட்டில்கள்

கோவிலின் உள்ளேயே ரங்கநாதரும் ரங்கநாயகியும் எழுந்தருளியுள்ளனர். யாருமற்ற தனி மோனத்தில் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருந்த பெருமானைக் கண்டால் தற்போது நாட்டில் நிலவி வரும் அமைதியின்மை குறையும் என்று தோன்றியது.

ரங்கநாதர் சன்னிதிக்கு அருகிலும் ஆழ்வார்கள், ஆச்சார்யர்களுக்கென்று தனிச் சன்னிதி உள்ளது. வராஹர் சன்னிதிக்கு அருகிலும் அவ்வாறே. எனவே ரங்கநாதர் கோவில் தனிக் கோவிலாக இருந்து, பின்னர் வராஹர் கோவிலுடன் இணைந்ததோ என்று எண்ணத் தோன்றுகிறது. கட்டட அமைப்பும் அவ்வாறு நினைக்க இடம் அளிக்கிறது. தூண் வீரர் பக்தர்

ரங்கநாதர் சன்னிதியின் தூண் ஒன்றில் திருமண் சாற்றிய வீரர் ஒருவர் தெரிகிறார். தாடி வைத்துள்ளார். வாளும் உள்ளது. ஒருவேளை திருமங்கை ஆழ்வாராக இருக்கலாம் என்று யூகித்தேன். தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

அற நிலையத்துறை மற்றும் மத்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் வரும் இந்தக் கோவிலில் உள்ள தூண் சிற்பங்களுக்கு அருகில் அவற்றைப் பற்றிய சிறு குறிப்போ, அல்லது வெளியில் தொடு கணினித் திரை வழியாக ஒவ்வொரு சிற்பம் பற்றிய செய்தியோ கூறப்பட வேண்டும். இதற்குப் பெரிய செலவெல்லாம் ஆகாது. சமீபத்தில் மறைந்த அரசியல் தலைவர்களுக்கு மணி மண்டபம் கட்டுவதற்கு ஆகும் செலவில் 10 விழுக்காடு கூட ஆகாது. அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். தனியார் கொடை கொண்டும் செய்யலாம்.

பிரிய மனமின்றிப் பிரிந்து வந்தோம் திருவிடந்தை என்பிரானை. வார இறுதிகளில், முகூர்த்த நாட்களில் கூட்டம் அதிகம் இருக்கும் என்கிறார்கள். சென்னையில் இருந்து 28 கி.மீ. தொலைவில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள திருவிடந்தை, நம் அகந்தைதனை நீக்கும் அருமையான திவ்யதேசம்.

பி.கு.: ‘ஃபோட்டோ எடுக்க கூடாது’ன்னு போட்டிருக்காளே. நீங்க எப்படி எடுத்தேள்?’ திரும்பி வரும் போது மகன் கேட்டான். ‘நல்ல வேளை நீ அப்பவே சொல்லலை’ என்றேன், மனதிற்குள்.

5 thoughts on “திருவிடந்தையில் ஒரு மணி நேரம்

  1. Aamaruvi
    Excellent coverage!!
    I had visited this divyadesam last year (along with thirukkadal mallai) but never paid this much attention to the scriptures, inscriptions and the sculptures . Yes, the temple is a peace-inducing one though I thought it could have been better maintained(though it was wishful thinking, considering that these temples are under TN HRC). Having said that, I could see better attendance here than the ones I visited in thirunangoor and nava thirupathi. There you have to call the bhattar before visiting so that he will open the sannidhi and wait for us. Those temples are in such a state.

    நமக்கு படியாளப்பவனுக்கு நாம் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று நினனக்கும் போது வருத்தம் அளிக்கிறது (though you could say that we can donate in some capacity)

    If we dont help, the bhattar profession is sure to die a slow death. Hopefully we can do something about this.

    கோலமலர்ப்பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ
    நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்ததொப்ப
    கோல வராகமொன்றாய் நிலம் கோட்டிடைக்கொண்டவெந்தாய்
    நீலக்கடல் கடைந்தாய் உன்னைப்பேற்றினிப்போக்குவனோ
    —— நம்மாழ்வார்

    Like

  2. Also I saw that the thridhandam for one of the acharyas is on the left side rather than on the right. I dont know the intricacies but is there a requirement as to which side should the thridhandam be held?

    Like

Leave a comment