தேரழுந்தூரில் ராமன்

பெண்களின் கண்கள் அம்பு போல் இருப்பதாகச் சொல்கிறார் ஆழ்வார் (அபம்பராவும் கண் மடவார்). இதனால் தானோ என்னவோ பின்னாளில் வந்த தேரழுந்தூர்க்காரனான கம்பன் சீதையை வர்ணிக்கும் போது அவளின் கண்களை வேலுக்கு (அம்பு) இணையாகச் சொன்னான்.

வயலையும், வீதியையும் விவரித்த திருமங்கையாழ்வார், மூன்றாம் பாடலில் ஊரை விவரிக்கிறார். அத்துடன் இன்று ராமநவமியாதலால்(02-04-2020), இப்பாடலில் இராமனைச் சுட்டுகிறார் போலும்.

இலங்கை பொன்னாலான மதில்களால் சூழப்பட்டது. அதன் தலைவன் பத்துத் தலைகளை உடைய ராவணன். அவனைது தலைகளைத் தனது தேவரருலக அம்பினால் கொய்த இராமன் தேரழுந்தூரில் எழுந்தருளியுள்ளான்.

ஊரும் சாதாரண ஊரன்று. அவ்வூரில் குருக்கத்தி மரங்கள் அடர்ந்துள்ளன. அவை நிறைய கிளைகளையும் தழைகளையும் கொண்டுள்ளன. செருக்கு மிக்க வண்டுகள் அம்மரங்களில் உள்ள கிளைகளையும் தழைகளையும் கோதி, பிரித்து, மறைந்திருக்கின்ற குருக்கத்தி மலர்களில் உள்ள தேனை உண்கின்றன. மிகுதியாக உண்டு பசியாறிய பின்னர், இரவு தங்குவதற்கு ஏற்ற இடம் எதுவென்று தெரியாமல் மயங்குகின்றன. பின்னர் தேரழுந்தூரில் உள்ள அம்பை ஒத்த கண்களை உடைய பெண்களின் கருங்கூந்தலில் சென்று தங்குகின்றன. இதனால் அப்பெண்டிர் கூந்தலில் இருந்து தேன் ஒழுகுகிறது. அவ்வாறான பெண்கள் நிறைந்த ஊரே தேரழுந்தூர் என்னும் திருவழுந்தூர்.

செம்பொன் மதிள்சூழ் தென்னிலங்கைக் கிறைவன் சிரங்கள் ஐயிரண்டும்,

உம்பர் வாளிக் கிலக்காக உதிர்த்த வுரவோ னூர்போலும்,

கொம்பி லார்ந்த மாதவிமேல் கோதி மேய்ந்த வண்டினங்கள்,

அம்ப ராவும் கண்மடவார் ஐம்பா லணையும் அழுந்தூரே.

Ramar in Therazhundhurஆழ்வார் குருக்கத்தி மரத்திற்குப் பயன்படுத்திய சொல் ‘மாதவி’ என்பது. ஆண்டாளும் ‘மாதவிப் பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்’ என்று திருப்பாவையில் சொல்கிறாள்.

பிரம்மாஸ்திரத்தை ‘உம்பர் வாளி’ என்னும் சொல்லால் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது. தற்காலத்தில் ‘ஏவுகணை’ என்னும் சொல்லிற்குப் பதிலாக ‘வாளி’ என்னும் அருந்தழ்ச் சொல்லைப் பயன்படுத்தலாம் என்று தோன்றுகிறது.

பெண்களின் கூந்தல் என்பதை ‘ஐம்பால்’ என்ற சொல்லால் அழைக்கிறார் ஆழ்வார். அது ஐவகைக் குணங்களைக் கொண்டதாம். சுருண்டிருத்தல், நீண்டிருத்தல், கறுத்திருத்தல், நறுமணத்துடன் இருத்தல் மற்றும் அடர்ந்திருத்தல் – இவையே ஐவகைக் குணங்களாம். தேன் உண்ட வண்டுகள் குடியிருந்ததால் அவர்களது கூந்தல் நறுமணத்துடன் இருந்திருக்கலாம்.

பெண்களின் கண்கள் அம்பு போல் இருப்பதாகச் சொல்கிறார் ஆழ்வார் (அபம்பராவும் கண் மடவார்). இதனால் தானோ என்னவோ பின்னாளில் வந்த தேரழுந்தூர்க்காரனான கம்பன் சீதையை வர்ணிக்கும் போது அவளின் கண்களை வேலுக்கு (அம்பு) இணையாகச் சொன்னான்:

வில் ஒக்கும் நுதல் என்றாலும், வேல் ஒக்கும் விழி என்றாலும்,
பல் ஒக்கும் முத்து என்றாலும், பவளத்தை இதழ் என்றாலும்,
சொல் ஒக்கும்; பொருள் ஒவ்வாதால்;சொல்லல் ஆம் உவமை உண்டோ?
“நெல் ஒக்கும் புல்” என்றாலும், நேர் உரைத்து ஆகவற்றோ!

கம்பனைக் கற்ற கண்ணதாசனும் ‘அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது பாய்வதினா தானோ?’ என்று கேட்டதை நினைவில் கொள்ளலாம்.

பி.கு.: கம்பனும் திருமங்கையாழ்வாரும் அந்தக் காலப் பெண்களின் கூந்தலைப் பற்றிப் பாடியுள்ளனர் என்பதை நினைவில் கொள்ளுதல் நன்று.

 

Author: Amaruvi's Aphorisms

Banker by day, blogger by night and a reader throughout.

3 thoughts on “தேரழுந்தூரில் ராமன்”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: