திருமங்கையாழ்வார் திகைத்து நிற்கிறார்.
தேரழுந்தூரின் அகன்ற வீதிகளில் உள்ள ஒரு மாட மாளிகையின் மேல் வானத்தைக் கீறும் அளவிற்கு ஒரு சூலம் எழுந்து நிற்கிறது. சூலம் என்ன செய்கிறது என்று பார்க்கிறார். அது வானத்தின் வயிற்றைக் கிழிக்கிறது. அதனால் வானம் கொண்டிருக்கும் மேகக்கூட்டங்களின் வாயிலாகத் தேரழுந்தூரில் மாமழை பொழிகிறது. ‘முந்தி வானம் மழை பொழியும்’ ஊரன்றோ தேரழுந்தூர்?
வானம் பொழிவது இருக்கட்டும். ஆனால் இடி இடிக்கும் ஓசையே கேட்கவில்லையே? என்று வியக்கிறார் ஆழ்வார். எப்படிக் கேட்கும் அவருக்கு? மாட மாளிகைகளின் தளங்களில் தேரழுந்தூர்ப் பெண்டிர் இடைவிடாமல் அபிநயம் பிடித்து ஆடும் நடனம் எழுப்பும் ஒலியில் இடியோசை கேட்கவில்லை.
இப்படியான ஊரில் வாழும் கண்ணன் சிலையாக மட்டும் நில்லாமல், தாமரை இதழ் விரியும் போது தோன்றும் பவளச்சிகப்பு நிறத்தில் புன்முறுவல் பூத்து நின்றபடி ஆழ்வாரின் மனம் புகுந்து நின்றான் ஆமருவியப்பன் என்னும் தேவாதிராஜன்.
முந்தைய பாடலில், ‘என் உள்ளத்துள்ளும், கண்ணுள்ளும், மனத்துள்ளும் நின்றான்’ என்ற ஆழ்வார், தற்போது அவனது பவளச் சிகப்பான இதழ் தெரியும் வண்ணம் அவரது உள்ளத்தினுள் அமர்ந்துள்ளான் என்கிறார். ‘பவள வாய் கமலச் செங்கண்’ என்னும் திருவரங்கப் பாசுர வரிகள் நினைவிற்கு வரலாம்.
‘மாடு வந்து என் மனம் புகுந்து நின்றார்’ என்பதில் ‘மாடு’ என்பது ‘அருகில்’ என்னும் பொருளில் வருகிறது. நாம் இழந்துள்ள மற்றுமொரு அருந்தமிழ்ச் சொல் ‘மாடு’.
அருமையான பாசுரம் இதோ:
ஏடி லங்கு தாமரைபோல் செவ்வாய் முறுவல் செய்தருளி,
மாடு வந்தென் மனம்புகுந்து நின்றார் நின்றா வூர்போலும்,
நீடு மாடத் தனிச்சூலம் போழக் கொண்டல் துளிதூவ,
ஆட லரவத் தார்ப்போவா அணியார் வீதி அழுந்தூரே.