தேரழுந்தூரின் வயலையும், நீர் வளத்தையும், அனல் ஓம்பும் அந்தணரையும், தேன் ஒழுகும் கூந்தலை உடைய பெண்டிரையும் கண்ட திருமங்கையாழ்வார் ஊரின் வீதியைக் காண்கிறார். மலைத்து நிற்கிறார்.
கரைகளை உடைய பெரிய கடல் போல் அகலமானவையாக உள்ளனவாம் வீதிகள். வீதிகளைக் கண்டு பிரமித்தவர் அவ்வீதிகளில் உள்ள வெள்ளையடிக்கப்பட்டு உயர்ந்து நிற்கும் மாளிகைகளைக் காண்கிறார். அவற்றின் உயரம் என்னவென்று அறிந்துகொள்ள மேலே அண்ணாந்து பார்க்கிறார்.
வெள்ளைவெளேரென்று வானம் தொட நிற்கும் மாளிகைகளின் உச்சியைக் காண இயலவில்லையாம். ஏன் என்று உற்று நோக்கினால் மாளிகைகளின் உச்சியில் கரும் புகை குடிகொண்டுள்ளதாம். அப்புகை மாளிகைகளின் உண்மையான உயரத்தை மறைக்கின்றதாம்.
எங்கிருந்து வருகிறது புகை? தேரழுந்தூரில் அந்தணர் வழங்கும் ஆகுதியின் புகையோ என்று எண்ணிப் பார்க்கையில் அப்போது மதிய வேளையாதலால் வேள்விகள் நிறைவுபெற்றுவிட்டன. எனவே வேள்விப் புகை அன்று. பின்னர் வேறென்ன புகையாக இருக்கும் என்று சற்று நடந்து சென்று பார்க்கிறார். வீதிகளை அடுத்த தோட்டத்தில் கரும்பில் இருந்து வெல்லம் எடுப்பதற்காக, கருப்பஞ்சாற்றைக் காய்ச்சும் ஆலைகள் உள்ளனவாம். புகை அங்கிருந்து வருகிறதாம்.
ஆலைகள் கொண்டு வெல்லம் தயாரிக்கும் அளவிற்குத் தேரழுந்தூரில் கரும்பு விளைச்சல் மிகுதியாக இருந்துள்ளது தெரிகிறது. அப்படிப்பட்ட ஊரில் குடிகொண்டுள்ள இறைவனைப் பற்றி ஆழ்வாரின் எண்ணம் விரிகிறது.
மாலை நேரம் ஆகிவிட்டதால் இன்ப உணர்ச்சிகள் மேலிடுகின்றன. ஆழ்வார் பரகால நாயகியாகத் தன்னைக் காண்கிறார்( நாயக நாயகி பாவம்). ஆமருவியப்பன் தன் அருகில் வந்து புன்முறுவல் பூப்பது போலவும், பின்னர் தன் அருகில் வந்து பஞ்சணையில் அமர்வது போலவும், அதன் பின்னர் பேரின்பத்தை அளிப்பது போலவும் எண்ணுகிறார். இதைப் போன்றே நம்மாழ்வாரும் பராங்குச நாயகியாகத் தன்னைப் பாவித்துக்கொண்டு பாசுரங்கள் பாடியுள்ளதை நினைவுபடுத்திக் கொள்வோம்.
தலைவன் தலைவியைப் பிரிந்து செல்லும் வேளையில் அவளிடம் சொல்லிச் செல்ல வரும் போது அவளைச் சாந்தப்படுத்த என்னென்ன செய்வானோ, சொல்வானோ, அவை அனைத்தையும் ஆமருவியப்பன் செய்தான் என்பதாகப் பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் விரிகிறது. இவ்விடத்தில் திருக்குறளின் காமத்துப் பாலின் பல குறட்பாக்கள் ஒத்து வருகின்றன.
அழகிய அந்தப் பாசுரம் இதோ:
மாலைப் புகுந்து மலரணைமேல் வைகி யடியேன் மனம்புகுந்து,என்
நீலக் கண்கள் பனிமல்க நின்றார் நின்ற வூர்போலும் வேலைக்
கடல்போல் நெடுவீதி விண்தோய் சுதைவெண் மணிமாடத்து,
ஆலைப் புகையால் அழல்கதிரை மறைக்கும் வீதி அழுந்தூரே

மேற்சொன்ன பாடலில் ‘என் நீலக் கண்கள் பனிமல்க’ என்று திருமங்கை மன்ன சொல்வது போல் உள்ளது சிறப்பு. திருமங்கையாழ்வாருக்கு ‘நீலன்’ என்கிற பெயரும் உண்டு.
அயோத்தியில் நடைபெற்ற செயல்கள் / தொழில்கள் யாவை என்பதைப் பின்வரும் பாடலில் கம்பன் சொல்கிறான்
அகில் இடும்புகை, அட்டில் இடும்புகை,
நகரின் ஆலை நறும்புகை நான்மறை
புகலும் வேள்வியின் பூம்புகையோடு அளாய்
முகிலின் விம்மி முயங்கின எங்கணும்
அயோத்தியிலும் கரும்பு ஆலைகள் இருந்தன, அதிலிருந்து நல்ல நறுமணத்துடன் புகை கிளம்பியது என்கிறான். தேரழுந்தூரில் இருந்த கரும்பு ஆலைகளை அயோத்தி மீது ஏற்றிப் பாடுகிறான் என்று கொள்ள இடமுண்டு. ஏனெனில், கம்பன் தேரழுந்தூர்வாசியன்றோ?
Leave a comment