திருமங்கையாழ்வார் கனவு நிலையில் இருந்து விடுபடுகிறார். பரகால நாயகி நிலையில் இருந்து மீண்டு, திருமங்கை மன்னனாக, ஆழ்வாராக உணர்கிறார்.
மாற்றம் நிகழ்ந்தவுடன் ஊரின் வயல்வெளிகள் கண்ணில் படுகின்றன. வளம் மிக்க தேரழுந்தூர் அல்லவா? மன்னி முது நீர்க் கழனிகள் கொண்ட ஊரன்றோ? வியந்தவண்ணம் ஊரின் வெளியில் வருகிறார். அப்போது தேரழுந்தூருக்கு வழி கேட்டு யாத்ரீகன் ஒருவன் வருகிறான்.
ஸ்வாமி, திருவழுந்தூர் செல்லும் வழி யாது ?
அடடா, நான் அவ்வூரில் இருந்தே வருகிறேன். எனவே வழி கூறுகிறேன் கேளுங்கள். நான் வந்த இந்தப் பாதையிலேயே செல்லுங்கள். ஊர் வந்துவிடும்.
திருவழுந்தூரை எவ்வாறு அடையாளம் கண்டுகொள்வது?
சுலபம், யாத்ரீகரே. மன்னி முது நீர்க் கழனிகள் நிறைந்து இருக்கும், வயல்களில் வாளை மீன்கள் துள்ளும். அதுதான் திருவழுந்தூர்.
மன்னிக்கவும் ஸ்வாமி. இந்தப் பிராந்தியத்தில் எல்லா ஊர்களிலுமே பழைய நீர்க் கழனிகளும், வயல்களும் உள்ளனவே. ஆகவே தேரழுந்தூரை எப்படிக் கண்டுபிடிப்பது?
ஆம். உண்மை தான். சோழ தேசம் அல்லவா? நீர் வளம் நிறைந்து தான் இருக்கும். ஊரின் அடையாளத்தைச் சொல்கிறேன் கேளும். வயல்களில் குவளை மலர்கள் பூத்து நின்று, பெருமானின் கண்களைப் போன்ற தோற்றம் அளிக்கும். வயல்களின் அருகில் உள்ள நீர் நிலைகளில் செவ்வல்லிப் பூக்கள் மிகுந்து, பெருமானின் உதட்டைப் போன்ற தோற்றத்துடன் விளங்கும். இதற்கு மேலும் சந்தேகம் இருந்தால், உற்றுப் பாருங்கள், நீர் நிலைகளில் உள்ள தாமரைப் பூக்கள் பெருமானின் முகத்தைப் போன்று அழகுடன் விளங்கும். இவ்வாறான ஊர் எதுவோ அதுவே தேரழுந்தூர்.
அடடா, அருமையாக வழி சொன்னீர் ஐயா. தாங்கள் யாரோ ?
பூக்கொடிகள் அடர்த்தியாக வளர்ந்துள்ளதால் அவற்றின் உள்ளிருந்து குயில்கள் கூவும் திருமங்கை என்னும் நாடு உள்ளதன்றோ? யாம் அன்னாட்டின் அரசன் திருமங்கை மன்னன் என்னும் பரகாலன்.
வந்தனம் ஆழ்வீர். தங்களைக் கண்டுகொண்டேன். தாங்கள் தேரழுந்தூரைப் பற்றிப் பாடியுள்ள இப்பத்துப் பாடல்களைப் பாடினால் பயன் யாதோ?
அடியேன் வாக்கில் இருந்து, திருவருளால் பொலிந்து வந்துள்ள இத்தமிழ் மாலையைச் சொன்னால் பாவங்கள் அனைத்தும் நீங்கும்.
நெல்லில் குவளை கண் காட்ட நீரில் குமுதம் வாய் காட்ட
அல்லிக் கமலம் முகம் காட்டும் கழனி அழுந்தூர் நின்றானை
வல்லிப் பொதும்பில் குயில் கூவும் மங்கை வேந்தன் பரகாலன்
சொல்லில் பொலிந்த தமிழ்-மாலை சொல்ல பாவம் நில்லாவே
ஆழ்வார் குவளை, அல்லி, தாமரை முதலியவற்றைத் தேரழுந்தூர்ப் பெண்களின் கண், உதடு, முகம் முதலியவற்றிற்கே உவமையாகச் சொல்கிறார். ஆனால், ஆழ்வார் பாசுரங்களைப் பக்தர்கள் தம் உள்ளக் கிடக்கைக்கு ஏற்ப அனுபவிக்கலாம் என்பதால் எம்பருமானார் தாமே வியாக்யானம் எழுதாமல், திருக்குருகைப் பிரான் பிள்ளானிடம் வியாக்யானம் எழுதச் சொன்னதைப் பின்பற்றி, மேற்கண்ட பாடலில் உவமையை பெருமாளின் கண், உதடு, முகம் முதலியவற்றுடன் ஒப்பிட்டு எழுதியுள்ளேன். வழிப்போக்கருடன் ஏற்பட்ட பேச்சுக்களும் கூட அடியேனின் கற்பனையே. (அறிஞர் பெருமக்கள், பிழை இருப்பின் பொறுத்தருளவும்).
குவளை, அல்லி, தாமரை மலர்களைக் கொண்டு அடையாளம் சொல்லப்பட்ட தேரழுந்தூர் பின்னாளில் கம்பன் பிறந்த ஊர் என்று அடையாளம் கண்டது.
தற்போது, ஊர் வேறு ஒரு காரணத்திற்காக அறியப்படுகிறது. மனம் வலிக்கும் காரணம் அது.
Leave a comment