‘ஜி, மேரா நாம் ஆமருவி ஹை’ என்றேன்.
‘உனக்கு எப்படிடா ஹிந்தி தெரியும்?’ என்றார் புதிய ஆசிரியர் வெங்கட்ராமன்.
‘ஒரு வருஷமா இத மட்டும் தான் படிச்சேன்’ என்றேன்.
‘ஒரு வருஷம் படிச்சியா? அப்ப, இந்த லெஸனப் படி, வாய்விட்டு’ என்றவர் புஸ்தகத்தில் ஒரு பாடத்தைக் காட்டினார்.
‘… ‘
‘வாய விட்டு படிப்பா. மனசுக்குள்ள இல்ல’ என்றவர் உற்றுப் பார்த்து, ‘மொதல்ல புஸ்தகத்த நேரா வெச்சுக்கோ. தலகீழா வெச்சுண்டா படிக்க முடியாது’ என்றார்.
எனக்கு இரண்டும் ஒன்றுதான் என்று அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.
ஒரு முழு ஆண்டு ஹிந்தி வாசித்து, பின் ஏன் இந்த நிலை?
கொஞ்சம் ஃப்ளாஷ்பாக்.
ரெண்டாம்பிளாக் கார்ப்பரேஷன் ஸ்கூலில் மாலையில் ஹிந்தி வகுப்பு எடுக்க தக்ஷிண பாரத ஹிந்தி பிரச்சார சபா வாடகக்கு எடுத்திருந்தது. அங்குதான் ஹிந்தி வகுப்பு எடுப்பார்கள்.
ஆமாம். எடுப்பார்கள். பலர் எடுப்பர்.
ப்ராத்மிக்கிற்கு மத்யமா எடுக்கும், மத்யமாவிற்கு ராஷ்டிரபாஷா, பிரவேசிகா ராஷ்டிரபாஷாவிற்கு என்று முறைவைத்துக் கொண்டு பாடம் நடத்துவர். ஆக, அங்கு பலரும் அத்யாபக், அவர்களே வித்யார்த்தி.
இந்த அழகில் நான் ப்ராத்மிக் சென்று சேர்ந்தேன். என்னுடைய ஆசிரியர், மன்னிக்கவும் ஆசிரியன் ராம்பிரசாத். என்னைவிட ஒரு வயது சின்னவன். நாலாங்கிளாஸ். அவன் எனக்குப் பாடம் நடத்த வேண்டும். ஏனெனில் அவன் மத்யமா மாணவன். இப்படியான ஹிந்தி வளர்ப்பில் ஈடுபட்டிருந்தது தக்ஷிண பாரத ஹிந்தி பிரச்சார ஸபா.
ரெண்டாம்பிளாக்கில் உண்மையான ஹிந்தி வாத்யார் வாரம் ஒருமுறை வருவார். மாலை ஆஃபீஸ் முடிந்து, வீட்டுக்குப் போகப் பிடிக்காத ஒருவரைப் பகுதி நேர ஆசிரியராகப் போட்டிருந்தது ஸபா. மாலை ஐந்தரைக்கு வர வேண்டியவர் துரிதமாக ஆறரைக்கெல்லாம் வந்து ‘மாதம் மும்மாரி பொழிகிறதா’ டைப்பில் ‘இன்னிக்கி பாடம் நடந்துதா’ என்று கேட்டுவிட்டு ஆறேமுக்காலுக்குக் கிளம்பிவிடுவார். நானும் அடுத்த ஐந்து நிமிடத்தில் வீட்டிற்குச் சென்று ‘ஹிந்தி கிளாஸ் முடிஞ்சுடுத்தும்மா’ என்று அறிவித்துவிட்டு அம்புலிமாமாவைத் தேடுவேன்.
‘அம்புலிமாமா என்ன வேண்டியிருக்கு? இன்னிக்கி படிச்ச ஹிந்திய ஒரு தடவை படிக்கலாமோல்லியோ?’ அம்மா.
‘கிளாஸ்லயே படிச்சுட்டேம்மா’
என் ஹிந்தி அறிவு ‘க, க்க, க, க, ஞா’ (அங்கங்கே அழுத்திக் கொள்ளவும்) என்கிற அளவிற்கு முன்னேறியிருந்தது.
இப்படியாகத் துவங்கிய ஹிந்திப் பயிற்சியின் பலனையே நீங்கள் முதல் சில வரிகளில் கண்டீர்கள்.
வெங்கட்ராமன் எட்டாம்பிளாக் பள்ளியில் உண்மையிலேயே ஆசிரியர். பொழுது போகாமல் பாடம் சொல்ல வரவில்லை. ஏதோ இன்று ஹிந்தி புரிகிறதென்றால் அவரே காரணம். ஆனால், ஹிந்தித் தேர்வுகளில் பாஸ் பண்ணினதுக்கு அவர் காரணம் இல்லை.
ப்ராத்மிக் தேர்வில் ஹிந்தி வார்த்தைகள் தெரியாத போது ஆங்கிலத்தில் எழுதிப் பூர்த்தி பண்ணிவிட்டேன். ஆனால், மத்யமாவில் நிறைய ததிகினத்தோம் போட வேண்டியதாக இருந்தது. மனப்பாடம் செய்வது வழக்கம் இல்லை என்பதால் சிரமப்பட்டேன். எகிறி எகிறிப் பாஸாகியது.
ராஷ்டிரபாஷா புட்டுக்கும் என்று தெரியும். கொஞ்சம் சஞ்சலமாகவே தேர்வை நெருங்கினேன். ‘ னேன்’ இல்லை, ‘ னோம்’. பன்மை.
பரீட்சை ஹாலில் ஏகக் களேபரம். என் பெயர் (ஆமருவி) புரியாததால் பெண்கள் ஹாலில் போட்டுவிட்டனர். பெண்களுடன் சேர்ந்து எழுதமாட்டேன் என்று சொல்லி தர்ணா செய்தேன் (அப்போது வயது 12, சே). போனால் போகிறதென்று ஆண்கள் ஹாலுக்கு அனுப்பினார்கள்.
ஒரு பெஞ்சில் இருவர் அமர வேண்டும். ஒருவர் ராஷ்டிரபாஷா, மற்றொருவர் பிரவேசிகா. பெஞ்ச் ஒன்றிலும் இடமில்லாததால் கடைசியாக ஒரு பெஞ்சில் ஒருவன் மட்டுமே அமர்ந்திருந்தான்.
‘அங்க இடம் இருக்கு சார்’ என்றேன். ‘போயி உக்காந்துக்கோ. உன் பக்கத்துல இருக்கறவன் பிரவேசிகாவான்னு கேட்டுக்கோ’ என்று சொல்லும் முன் இடத்தைக் காலி செய்துவிட்டு நகர்ந்துவிட்டேன்.
ராஷ்டிரபாஷாவில் நான் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன் என்பதை நம்ப யாரும் தயாராக இல்லை.
பிரவேசிகாவில் அவ்வளவு கஷ்டப்படவில்லை. நோட்ஸ் எடுத்து வைத்திருந்தேன். பரீட்சை ஹாலிலும்.
இது தவிர சி.பி.எஸ்.ஈ.யில் மூன்றாவது மொழி ஹிந்தி. ஹிந்தி பிரச்சார ஸபாவில் படித்ததால் எழுத்துக்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்கிற அளவில் கொஞ்சம் உபயோகம் இருந்தது. ஆனால் அறிவுப்பேராசானுக்கு அந்த பாக்யம் இல்லை.
அவன் மந்தாரக்குப்பம் என்னும் பகுதியில் இருந்து வந்து செல்ல சுமார் ஒருமணி நேரம் ஆகும். அவனுக்கு ஹிந்தி களாஸ் போகவெல்லாம் நேரமில்லை. ஆக, மூன்றாவ்து மொழி அவனுக்கு வேப்பங்காய். பெரும்பாலும் ஏதாவது சேட்டை செய்துவிட்டு வகுப்பிற்கு வெளியிலேயே நிற்கும் அவுட் ஸ்டாண்டிங் ஸ்டூடண்ட்.
இப்படியான வேளையில் காலாண்டுப் பரீட்சை வைத்தார்கள். ‘எப்டிடா எழுதறது?’ என்று அப்பாவியாக கேட்டான் அறிவு.
‘ஈஸியா வழி சொல்றேன்’ என்று வலுவில் அறிவுரை வழங்க வந்த கிச்சி சொன்னது, ‘மொதல்ல கேள்வில இருக்க எல்லாத்தையும் எழுதிக்கோ. அப்பறம் முதல் வார்த்தை எப்டியும் ‘க்யா’, ‘கவுன்’ நு இருக்கும். இல்ல செண்டென்ஸ்ல எங்கியாவது ‘க்யா’, ‘கவுன்’ இருக்கா பாரு. அதை மட்டும் அழிச்சுட்டு உனக்குத் தோணினத எழுது’ என்றான்.
‘இவ்ளோதானா ஹிந்தி?’ என்ற அறிவுப்பேராசானின் சந்தோஷத்தைக் கெடுக்க விருப்பம் இல்லாமல் மவுனமாக இருந்துவிட்டேன்.
காலண்டுப் பரீட்சை முடிந்து, பேப்பர் கொண்டுவந்தார் ஆசிரியர் வாரீஸ் ஜெஹான் ( ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்). எங்கள் பேப்பர் எல்லாம் வந்துவிட்டது. நாங்கள் வரைந்ததற்கு ஏற்றவாறு ஏதோ வந்திருந்தது. அறிவுப்பேராசானின் பேப்பர் மட்டும் வரவில்லை.
‘சப் கோ பேப்பர் மிலா?’ என்று ஆசிரியர் கேட்க, வழக்கம் போல் நாங்கள் பேந்தப் பேந்த விழித்ததை ‘மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி’ என்று எடுத்துக்கொண்டார் ஜெஹான்.
கடைசியாகப் பையின் உள்ளிருந்து ஒரு பேப்பரை எடுத்தார். ‘க்,க, கா, ககி, கீ, கு, கூ’ என்று பல ஒலிகளுடன் சிரிக்கத் துவங்கினார். சுமார் ஐந்து நிமிடங்கள் சிரித்து, வியர்த்து, விறுவிறுத்து, மூச்சு வாங்கி, ஒருவாறு நாற்காலியில் அமர்ந்தார்.
‘யே அறிவு கா பேப்பர் ஹை. கிச்சி, யஹான் ஆவோ, இஸ் பேப்பர் கோ படோ’ என்றார். நாங்கள் (வழக்கம் போல்) மோட்டுவளையைப் பார்த்தபடி அமர்ந்திருந்தோம்.
‘கிச்சி, கம் ஹியர் அண்ட் ரீட் திஸ் பேப்பர் அலவுட்’ என்றார். கிச்சி எழுந்து நின்று பேப்பரை வாங்கிக்கொண்டான்.
முதல் வரியை மவுனமாகப் படித்தவன் கீழே விழுந்துவிடுபவன் போல சிரித்தான். (கண்ணாடியை எடுத்துப் பையில் வைத்துக் கொண்டு). காரணம் தெரியாமல் நாங்களும் சிரித்தோம். அவனால் வாசிக்க முடியவில்லை.
பேப்பரை என்னிடம் நீட்டினான்.
கேள்வி : துமாரா நாம் க்யா ஹை ?
பதில் : துமாரா நாம் காகா ஹை.
‘ஏண்டா இப்பிடி எழுதின? மிஸ்ஸு பேரு ‘காகா’வா? அவங்க வெள்ளையாதானே இருக்காங்க?’
‘எனக்குத் தெரிஞ்ச ஒரே எழுத்து ‘கா’. எதுக்கும் இருக்கட்டும்னு இன்னொரு தடவை ‘கா’ ந்னு எழுதினேன். சாரி வரைஞ்சேன் ‘ அறிவு நேர்மையாகச் சொன்னான்.
‘மத்த எந்தக் கேள்விக்கும் பதிலே எழுதல்லயே, ஏன்?’
‘இத வரஞ்சு முடிக்கறதுக்கே முப்பது நிமிஷம் ஆச்சு’
சிரித்து, ஓய்ந்து, பசியெடுத்து உணவு உண்ணும் வேளையில் அறிவு எங்கள் பெஞ்சிற்கு வந்தான்.
‘ஒரு டவுட்டுடா’
‘சொல்லு’ என்றேன்.
‘பரீட்சைல அந்த முதல் கேள்விக்கு என்ன அர்த்தம்?’
பி.கு. ராஷ்ட்ரபாஷா பரீட்சை ஹாலில் என்னுடன் ஒரே பெஞ்சில் இருந்தவன் கிச்சி. அவனும் ராஷ்டிரபாஷா. யாரிடமும் சொல்லிவிடாதீர்கள்.
Nagaichuvai kalandha nalla padhivu.
https://welcomeupdates.blogspot.com/
LikeLike