உடையவர் திருவடிகளையே ஆஸ்ரயித்த நான் எம்பெருமானாரைப் போலவே நூற்றியிருபது பிராயம் ஜீவித்திருப்பேன் என்கிற எண்ணம் எல்லாம் இல்லை. நல்ல நினைவுடன் இருக்கும் போதே, என்னுடைய கைகள் என் மனதில் இருப்பதைத் தெரிவிக்கும் ஆற்றலுடன் இருக்கும் போதே, நான் யார், என்னென்ன செய்தேன், காஞ்சி வரதனும், அரங்கனும் என்னை என்னென்ன செய்யப் பண்ணினார்கள் என்பதை எழுதி வைத்துவிட எண்ணுகிறேன்.
என்ன எழுதப்போகிறேன் என்பதைத் தற்போது அறியேன். நான் யார் என்று தெரிவிப்பதாகச் சொல்லித் துவங்கியிருந்தேன். ஆகவே நான் யார் என்பதைத் தெரிவிக்கிறேன்.
ஆக, நான் யார்? அதைத் தேடியே இன்னமும் பிரயத்னப் பட்டுக்கொண்டு இருக்கிறேன். நான் யார் என்பதை முழுமையாக அறிந்துவிட்டேனா என்று தெரியவில்லை. ஆனால், அந்த ‘நான்’ என்பது என்ன என்பதைப் பற்றி அறிந்துகொண்டேன். அதாவது இப்போது வயோதிகத்தில் தளர்ந்திருக்கும் இந்த சரீரம் ‘நான்’ இல்லை என்பதை அறிந்துகொண்டுள்ளேன்.
இதைத் தெரிந்துகொள்ள ஒரு நூறு வருஷங்கள் தேவைப்பட்டுள்ளன. உடையவர் வழி காட்டிச் சென்றாரோ என்னால் நூறு வருஷங்களுக்குள் தெரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், உடையவர் வழியில் செல்லா மானுடர் தம்மைப் பற்றி எப்படித் தெரிந்துகொள்வரோ என்கிற கவலையும் என்னுள் இருக்கிறது. அதையும் எழுதிவிடுகிறேன்.
நான் என்னென்ன செய்துள்ளேன் என்பதை நீங்கள் அறிந்துகொண்டிருப்பீர்கள். ஆனால், நான் செய்யாத சிலதையும் கூட நான் செய்துவைத்ததாகவும் நீங்கள் தெரிந்துகொண்டிருப்பீர்கள் என்றே தோன்றுகிறது. நான் தற்போது என்னதான் செய்தாலும், என்னதான் சொன்னாலும், நீங்கள் வாசிக்கும் காலத்தில் இதெல்லாம் எப்படிச் சொல்லப்பட்டிருக்கும் என்பதை நான் அறிகிலேன்.
முக்கியமான அபாண்டம் ஒன்றும் என் மீது ஏற்றப்படும். உடையவர் சம்பிரதாயத்தைப் பிளவு படுத்த என் நேரத்தைப் பயன்படுத்தினேன், வாழ்நாளைச் செலவிட்டேன் என்றும் சொல்வர். ஆனால், உண்மை என்ன? நான் உடையவர் காட்டிய வழியில்தான் சென்றேனா, எம்பெருமானார் ஸாதித்த ஶ்ரீவைஷ்ணவத்தையே விருத்தி செய்ய என் வாழ்நாள் பயன்பட்டதா என்பதை நான் சொல்லவிரும்பவில்லை. என்னென்ன செய்தேன் என்பதை, ரங்கநாதன் என்னை ஒரு கருவியாகக் கொண்டு என்னென்ன நிகழ்த்தினான் என்பதை, அவற்றுள் என் நினைவில் உள்ளதை எழுதுகிறேன்.
பின்னாட்களில் எழப்போகும் கேள்விகள் அனைவற்றிற்கும் என்னால் இந்த லிகிதத்தில் பதில் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. இது வரை வரதன் என் கூட இருந்து வழி காட்டினான். கூரேசருக்கு நேத்ரங்களை மீண்டும் அருளி வழி நடத்திச் சென்றது போல், தற்போதும் அவனே என்னுடனும் இருந்து என்னை எழுதப் பண்ண வேண்டும்.
மீண்டும் சொல்கிறேன். ‘நான் செய்தேன்’ என்று வருகிற இடங்களில் எல்லாம் ‘அரங்கன் ஆணையிட்டு இந்த உடம்பு செய்தது’ என்று புரிந்துகொள்ளுங்கள்.
முழுதும் எழுத முடியுமா, அதற்கு எனக்குப் ப்ராப்தம் உள்ளதா என்று தெரியவில்லை. முடிந்தவரை எழுதுகிறேன். இந்த லிகிதத்தை நீங்கள் எத்தனை வருஷங்கள் கழித்து வாசிகிறீர்களோ, தற்காலத்தில் நான் பயன்படுத்தும் சொற்கள் அப்போது இருக்கின்றனவோ – இவை நான் அறிகிலேன். உங்களுக்குப் ப்ராப்தம் இருந்து, இந்த நூல் உங்கள் கைகளில் கிடைத்து, இதை வாசிக்கும் போது இதில் உள்ளதெல்லாம் உங்களுக்குப் புரிந்தால் ஶ்ரீரங்நாயகித் தாயாரும், பெருந்தேவித் தாயாரும் உங்களைக் கடாக்ஷித்துள்ளார்கள் என்று உணர்ந்துகொள்ளுங்கள்.
எனக்கு என்னவெல்லாமோ பட்டங்கள் கொடுத்துள்ளார்கள். ரங்கநாதனின் பாதுகைகளின் மீது உள்ள அசஞ்சலமான பக்தியினாலும், அப்பாதுகைகளைப் பற்றி நான் பாடியதாலும் என் மீது அன்பு கொண்டு பல பட்டங்கள் கொடுத்தனர் அரங்கனின் பக்தகோடிகள். ரங்கநாதனே கொடுத்த பட்டமும் உண்டு.
ஆனால், நான் வேங்கடநாதனே. வேங்கடநாதனாகவே எழுதுகிறேன்.
அடியேன், வேங்கடநாத தாஸன்.