எப்படியாவது சைவ வைஷ்ணவ ஒற்றுமையைக் குலைக்க வேண்டும் என்று முயல்கிறார்கள்.
எப்படியாவது சிறுதெய்வம், பெருதெய்வம் என்று பிளவு படுத்திவிட வேண்டும் என்று விடாமல் முயற்சி செய்து பார்க்கிறார்கள்.
ஆனால் இவை அனைத்தையும் புறந்தள்ளி, சனாதன தர்மத்தின் பல தெய்வங்களுக்குள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருக்கும் உறவைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறது தேரழுந்தூர் எனும் வைணவ திவ்யதேசம்.
ஆண்டுதோறும், விநாயகர் சதுர்த்தி அன்று தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோவிலில் இருந்து தளிகை, பெருமாளின் வட்டிலில் புனித தீர்த்தம் எடுத்துக் கொண்டு ஆமருப்பெருமாள் கோவில் பட்டாச்சாரியார் அவ்வூரில் உள்ள கம்பர் வழிபட்ட விநாயகர் கோவிலுக்குச் செல்கிறார். அங்கு அவரே விநாயகருக்கு அபிஷேகம் செய்து, தளிகை நைவேத்யம் செய்கிறார். இந்தப் பழக்கம் சுமார் ஆயிரம் ஆண்டுகளாகத் தொடரும் ஒரு வழக்கம்.
அதை ஒட்டி, இன்று தேரழுந்தூரின் பெருமாள் கோவில் பட்டர் கம்பர் வழிபட்ட விநாயகருக்கு உரிய மரியாதைகளைச் செய்தார்.


ஒரு காலத்தில் மேள தாளத்துடன் நடைபெற்ற இந்த உற்சவம் தற்போதும் நடைபெறுகிறது.
இதைப் போன்றே, ஆமருவியப்பனின் வருடாந்திர பிரம்மோற்சவம் துவங்கும் முன் ஐயனார் குளத்திற்கு அருகில் எழுந்தருளியிருக்கும் ஐயனார் சுவாமிக்கு ஆமருவியப்பனின் காப்பு அனுப்பப்படும். ஐயனார் கையில் காப்பு ஏறியதும், ஐயனாரின் உற்சவ மூர்த்தி நான்கு வீதியும் எழுந்தருளி, பெருமாளின் உற்சவங்கள் நல்லவிதமாக நடைபெற மற்ற எல்லைக் காவல் தெய்வங்களிடம் விசாரித்து வருவது என்பது ஐதீகம். தற்போது ஐயனாரின் உற்சவர் திருமேனி பாதுகாப்பு கருதி திருவாரூரில் இருப்பதால், வீதிப் புறப்பாடு நடைபெறுவதில்லை என்று சொல்கிறார்கள்.
இதைப் போலவே, ஆண்டுதோறும் உற்சவங்களின் போது கடகடப்பைக் குளம் அருகில் உள்ள எல்லைப் பிடாரி அம்மன் கோவிலுக்கும் புடவை, எண்ணெய், அரிசி முதியன ஆமருவியப்பனிடம் இருந்து செல்கிறது.
இதைத் தவிரவும், ஆண்டுதோறும், மாசிப் புனர்வசுவன்று ஆமருவியப்பன் ராமர் வேடம் பூண்டு அவ்வூரின் கிழக்கே எழுந்தருளியுள்ள வேதபுரீஸ்வரர் என்னும் பரமசிவனுக்குச் சேவை சாதிக்கும் உற்சவமும் இன்றளவும் நடைபெற்றுவருகிறது.
வாய்ப்பு கிடைத்தால் ஒருமுறை தேரழுந்தூர் சென்று வாருங்கள். திருமங்கையாழ்வார் பாடிய ஆமருவியப்பனையும், திருஞானசம்பந்தர் பாடிய வேதபுரீஸ்வரரையும், கம்பர் வழிபட்ட காளி மற்றும் விநாயகரையும் தரிசித்து வாருங்கள்.
கொஞ்சம் வரலாற்றைச் சுவாசித்து வாருங்கள்.