நான் பொதுத்துறைக்கு எதிரானவன் அல்லன்.
ஆனால் …
எல்.ஐ.சி. உருப்பட வேண்டுமென்றால் அதில் உள்ள வயது மூத்த, தெனாவெட்டு அதிகம் உள்ள, வேலையில் அக்கறை இல்லாத பணியாளர்களுக்கு விருப்ப ஓய்வு கொடுத்து அனுப்ப வேணும். அதெப்படி ஒருசில கிளைகள் பிரமாதமாகவும் சிலது திராபையாகவும் இருக்க முடிகிறது? மயிலாப்பூர் கிளைக்கு 5 ஸ்டார் கொடுக்கலாம் என்றால் என்.எஸ்.ஸி. போஸ் சாலை கிளைகளுக்கு மைனஸ் 50 ஸ்டார் கொடுக்கலாம். அதிலும் சில சீட்டுகளில் அமர்ந்துள்ளவைகளுக்கு ( வேண்டுமென்றே அஃறிணை) மைனஸ் 500 கொடுக்க ஒரு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நங்கநல்லூர் கிளை ஓஹோவென்றும், ஆர்.ஏ.புரம் கிளை சுமாராகவும் செயல்படுவது ஏன் என்று அந்த வங்கி யோசிக்க வேண்டும். பாரத ஸ்டேட் வங்கியிலும் நங்கநல்லூர் ஓஹோ, மந்தைவெளி கொடுமை.
கனரா வங்கியின் மந்தைவெளிப்பாக்கம் கிளை நன்றாகவே செயல்படுகிறது. மற்ற இடங்கள் பற்றித் தெரியவில்லை.
கொரோனா காலத்தில் வேலையில் இருப்பதே பூர்வபுண்ணிய பலன் தான். அதுவும் அரசு வேலையில் இருப்பது பெரிய கொடுப்பினை இருந்தாலே முடியும். இதனை நினைவில் கொண்டு பொதுத்துறை ஊழியர்கள் நடந்துகொள்ள வேண்டும்.
ஏர்டெல் நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் அதிகரித்துள்ளனர். அவர்களில் பலருக்கும் கொரோனாவினால் வேலை போய்விட்டது. வோடஃபோன் என்ன ஆகும் என்று தெரியவில்லை. ஆனால் அரசு நிறுவனங்கள் அப்படியன்று. ஊழியர்களுக்கு வேலை உள்ளது.
எழுதுகிறேன் பேர்வழி என்று நமது அரசு நிறுவனங்களைக் கரித்துக் கொட்ட நிறையவே வாய்ப்புள்ளது. ஆனாலும், அவ்வாறு எழுதக் கைவருவதில்லை. ஏனெனில் பொதுத்துறை என்பது வேற்றுக்கிரகம் இல்லை. அவை நமது குருதிச் சொந்தம். நம் உப்பு, அவர்கள் சம்பளம். அவர்கள் உழைப்பு, நமது உரிமை. ஏனெனில் நாமே அவர்கள்.
பொதுத்துறை அழிவது நாட்டுக்கு நல்லதில்லை.
அதற்காக ஏர் இந்தியா போல ஆழும் பாழும் ஆனால், பேசாமல் இருக்க முடியாது. சொந்தம் ஒன்று குட்டிச்சுவராகப் போனால் பார்த்துக்கொண்டிருக்க முடியாதன்றோ? அதைப் போல் தான் எல்.ஐ.சி.யும்.
எல்.ஐ.சி. ஊழியர்கள், பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் முதலியவர்கள் இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏற்கெனவே எல்.ஐ.சி.யின் பங்குகள் விற்பனைக்கு என்று அரசு கூறியுள்ளது. கொரோனாவால் தப்பியுள்ளீர்கள். ஆனால், 2021-22ல் அவசியம் நடந்துவிடும். அப்போதும் இப்படியே ‘எவன் அப்பன் வீட்டு வேலை’ என்று நடந்துகொண்டால் அம்போ தான். தொழிலாளர்கள் யூனியன்கள் எல்லாம் முதலில் வீரம் காட்டுவார்கள். பின்னர் அவர்களுக்குப் புரியும்படி அரசு நடந்துகொள்ளும் என்று எதிர்பார்க்கலாம். இந்த அரசு செய்யும். 370 எப்படி வந்தது?
எனவே, பொதுத்துறை ஊழியர்களே விழித்துக் கொள்ளுங்கள். உங்கள் வேலைகள் உங்களிடம் இருக்க வேண்டுமென்றால் வேலை செய்யுங்கள். வாடிக்கையாளர்களைக் கனிவுடன் நடத்துங்கள்.
நானும் முன்னாள் பொதுத்துறை ஊழியரின் மகனே. எனவே அத்துறையின் மீதான பாசம் உண்டு. ஆனாலும், தாயும் மகனும், வாயும் வயிறும் கதை தான்.
விழித்துகொள்ளுங்கள். உண்மையாக வேலை செய்யுங்கள். உங்களுக்குக் கிடைத்துள்ள அரிய வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.
இத்தனைக்கும் காவல் துறை, மருத்துவம் என்று அரசுத் துறையில் ஊழியர்கள் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்கின்றனர். அவர்களைப் பார்த்தாவது திருந்துங்கள். ப்ளீஸ்.
இதெல்லாம் முடியாதென்றால், அதிக அளவில் இளைஞர்களைப் பணியில் அமர்த்தி, சோம்பேறியர்களுக்கு விருப்ப ஓய்வு கொடுத்து அனுப்ப வேண்டியதுதான்.
நான் அப்படித்தான் செய்வேன்.