பாஜக தலைவர் திரு.முருகன் அவர்களே, வணக்கம்.
சித்தாந்த ரீதியில் சொந்த வீடு என்றாலும் தவறென்றால் சொல்லத்தான் வேண்டும்.
‘சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவேன் கேண்மினோ’ என்னும் ஆழ்வார் வாக்கிற்கிணங்க சொல்லிவைக்கிறேன்.
நீங்கள் யாரோ ஒருவரைச் சமூகச் சீர்திருத்தக்காரர் என்று அபாண்டமாகச் சொன்னது தவறு என்றே நினைக்கிறேன். ‘உன்னை யார் கேட்டார்கள்?’ என்றால் யாரும் கேட்கவில்லை. ஆனாலும் தர்மம் எதுவோ அதைச் சொல்லவே ஸ்வதர்மம் பழக்கியுள்ளது.
பாஜக அவருக்குக் கோவிலே கட்டினாலும் பாஜகவிற்குப் பலன் இருக்கப்போவதில்லை. அந்த மனிதரின் கொள்கையைத் தூக்கிப் பிடிப்பவர் / தூக்கிப் பிடிப்பதாகச் சொல்லிக்கொள்பவர்கள் யாரும் பாஜகவிற்கு வாக்களிக்கப் போவதில்லை. ஏனெனில் ஆட்டு மந்தைக் கூட்டத்திற்குச் சிந்திக்கத் தெரியாது. இல்லையென்றால் தெய்வத் தமிழ் மொழியைக் காட்டுமிராண்டி பாஷை என்றும், திருக்குறளை மலம் என்றும், கண்ணகியைத் ****ள் என்றும் வெளிப்படையாகச் சொன்ன கன்னடக்காரரைத் தமிழர் தலைவர், தந்தை என்று எந்த மானமுள்ள மனிதனும் தூக்கிப்பிடிக்க மாட்டான்.
இன்று மாரிதாசின் முயற்சியால் சாதாரண மக்கள் விழிப்புணர்வு பெற்றுள்ளனர். அந்த மூன்றெடுத்துப் பிம்பத்தை வைத்துப் பிழைப்போரைக் கேள்வி கேட்க மக்கள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் ஒன்று அவரை ஆதரிக்கிறோம், அவரை சமூகச் சீர்திருத்தவாதி என்று ஒப்புக்கொள்கிறோம் என்று சொல்லும் பத்து கட்சிகளில் பதினொன்றாகக் காட்டிக்கொண்டு, ஆகக் குறைவான வாக்கு வாங்கலாம். ஏனெனில் இருக்கும் அத்தனைக் கட்சிகளும் அந்த நபரை ஆதரிப்பவர்களே. ‘காங்கிரஸை அழிக்க வேண்டும்’ என்று முழங்கியவரை இன்று காங்கிரஸ் மதிப்பதாகக் கூறிக் கொள்வதைப் போல பாஜகவும் சொல்லி, காணாமல் போகலாம்.
இல்லையென்றால் ‘நாங்கள் அவரை மதிக்கவில்லை. ஏனெனில் பிரிட்டிஷ் ஆட்சியே நிலைத்திருக்க வேண்டும் என்றும் , இல்லையேல் இந்தப் பரந்த பாரத நாடு துண்டாடப் பட வேண்டும் என்றும், சுதந்திர தினத்தைத் துக்க தினமாக அனுஷ்டித்தவரை நாங்கள் கடுகளவிற்குக் கூட மதிக்கவில்லை. இல்லாத விருதுகள் வாங்கியவர் என்று பொய்ப் பிம்பம் ஏற்படுத்தப்பட்டு ஊர் நெடுகிலும் சிலை வடியில் நிற்கும் அந்த நபரைக் கொண்டாடுவது ஜின்னாவைக் கொண்டாடுவது போன்றது. அகண்ட பாரதம் என்னும் உயரிய கருதுகோளைக் கொண்டவர்களாகிய எங்களால் தற்போதுள்ள பாரதத் தாய் துண்டாடப் பட வேண்டும் என்று விரும்பியவரை, இந்தப் பாரத நாட்டின் ஆன்மீக வேர்களை அவமரியாதை செய்தவரை, பாரதப் பண்பாட்டின் அடையாளமான ஶ்ரீராமர், விநாயகர் முதலியோரைக் கீழ்த்தரமாக விமர்சித்தவரை நாங்கள் கொண்டாடுவதை விடுங்கள், ஒரு தலைவராகக் கூட நினைத்துப் பார்க்க முடியாது’ என்று ஒரு நிலையை எடுத்தால், ‘ஓஹோ இந்தக் குருட்டு வழிபாட்டு வழியைத் தவறு என்று தெரிந்தாலும் ஆதரித்தே ஆக வேண்டிய கட்டாயம் ஒன்றும் இல்லை போல’ என்கிற எண்ணம் திராவிட விஷப் பாம்புகளின் கீழ் வேறு வழியின்றி நின்றுகொண்டிருக்கும் தமிழக மக்கள் மத்தியில் உருவாகும். அவர்கள் உங்கள் பக்கம் வருவார்கள்.
எனவே, உங்கள் நிலைப்பாட்டை ஸ்திரப்படுத்திக்கொள்ளுங்கள். அதற்கு ‘சிந்தன் பைடக்’ ஒன்றை ஏற்பாடு செய்து விவாதித்து நிலைப்பாட்டை வகுத்துக் கொள்ளுங்கள்.
அதை விடுத்து, ‘எங்காத்துக்காரரும் கச்சேரிக்குப் போனார்’ கதையாக நடந்துகொண்டால், தனியாக நிற்க வேண்டியது தான். தொண்டர்களும் குழம்பி, மக்களும் வெறுத்து … அந்த வாழ்க்கை பாஜகவிற்கு வேண்டாம்.
ஆக, அவரைப் போற்றுவதாகக் காண்பித்துக்கொண்டு ‘also ran’ என்று வருவது. அப்படித்தான் செய்வோம் என்றால் அடல்ஜி, சியாமா பிரசாத் முகர்ஜி வரிசையில் இவரின் படத்தையும் உங்கள் பதாகைகளில் போட்டுக்கொள்ளுங்கள். இல்லை அவரைக் கொண்டாடாமல் ‘நான் வெளியிட்ட செய்தி தவறானது. மன்னிக்கவும். நாங்கள் அவரைக் கொண்டாடவில்லை’ என்று அறிவிப்பது.
தனது இறுதி வரை அந்த நபரின் கொள்கையை எதிர்த்த முத்துராமலிங்கத் தேவரைக் கொண்டாடும் போது அவர் எதிர்த்த மனிதரைக் கொண்டாடுவது சரியா என்று யோசித்துப் பாருங்கள்.
அரசியல் சரி நிலை என்பது இப்பொது உங்களுக்குத் தேவையற்றது. தேசத்திற்குச் சரியானது மட்டுமே உங்களிடம் எதிர்பார்ப்பது.
எதிர்பார்ப்பை வீணாக்கிவிடாதீர்கள்.
Leave a reply to PN Badri Cancel reply