காலை 11 மணிக்கு மாடிக்குப் போன மகன் வேகமாக ஓடி வந்து சொன்னான் ‘அப்பா, மாடில காக்காவுக்கு அடிபட்டிருக்கு. உடனே வாங்கோ’
விழுந்தடித்துகொண்டு மாடிக்குச் சென்றால் மொட்டை மாடிக்குள் நுழையும் வழியில் பூந்தொட்டிக்கும் சுவருக்கும் இடையில் ஒரு காக்கை எழும்ப முடியாமல் படுத்திருந்தது. அருகில் சென்றாலும் எழவில்லை, கத்தவில்லை. ஆனாலும் தலையைத் தூக்கிப் பார்த்தது.
தண்ணீர் வைத்தால் குடிக்கிறதா என்று அருகில் நீர் வைத்தேன். அருந்தவில்லை.
பதட்டத்துடன் கூகுளில் தேடியதில் பல எண்கள் கிடைத்தன. எல்லா எண்களிலும் ‘ஹேளி’ என்றனர். பெங்களூரு எண்கள். சென்னையில் கிளை இல்லை என்றனர். ப்ளூ க்ராஸ் இருக்கிறது என்றனர்.
ஒரு மாதத்திற்கு முன் ப்ளூ க்ராஸை அழைத்த அனுபவம் இருந்தது. ஃபோனை யாரும் எடுக்க மாட்டார்கள். கொரோனா பேச்சுக் கண்றாவி முடிந்த பின், 1,2,3 …10 வரை அழுத்தச் சொல்லிக் கழுத்தறுத்தறுபட்ட அனுபவம் உண்டு. மகனும் நானும் அழைத்துப் பார்த்தோம். வாட்ஸப்பில் படம் அனுப்பச் சொன்னார்கள். கூகுள் ஃபார்ம்ஸ்ல் காக்காயின் ஜாதகத்தை அப்லோட் பண்ணச் சொன்னார்கள்.
வெறுத்துப் போய், மீண்டும் கூகுளில் தேடினால் 2-3 எண்கள் கிடைத்தன. எல்லாம் ஹிந்துவில் வந்த கட்டுரைகளில் இருந்தவை. ஒருவர் காக்கை அனேகமாகத் தானாகவே பறந்துவிடும் இல்லையென்றால் நோய் காரணமாக இறந்துவிடும் என்றார். இன்னொருவர் பீட்டாவை அழையுங்கள் என்றார். பீட்டாவில் காக்கை எல்லாம் காக்க முடியாது என்று ஜகா வாங்கிவிட்டனர்.
இதற்கிடையே ட்விட்டர், ஃபேஸ்புக் என்று உதவி கோரி அழைத்தேன். அவ்வப்போது காக்கை தண்ணீர் குடித்ததா என்று பார்த்து வரச் சொன்னேன். குடித்திருக்கவில்லை.
ஆட்டோ அண்ணா என்பவர் பற்றி ஹிந்துவில் ஒரு கட்டுரை வந்திருந்தது. அவரது எண்ணை அழைத்தேன். பாஸ்கர் என்னும் ஆட்டோ ஓட்டுநர் தாம்பரத்தில் நாய் ஒன்றை மீட்கச் சென்றிருக்கிறேன். ஒரு மணி நேரத்தில் வருகிறேன் என்றார்.அரை மணி கழித்து அழைத்தேன். ‘ வந்து ப்ளூ கிராஸ் எடுத்துச் செல்கிறேன். ஆட்டோ கட்டணம் மட்டும் கொடுங்கள்’ என்றார்.
ஆட்டோ அண்ணா பெயர் பாஸ்கர். விலங்குகளைக் காப்பதையே தொழிலாக வைத்துள்ளார். நாய், பூனை, பறவைகள் என்று அவை அமர்வதற்கான வகையில் ஆட்டோவில் கூண்டுகள் வைத்து மாற்றியுள்ளார்.
அவரை அழைத்துக்கொண்டு மாடிக்குச் சென்றோம். காக்கையைக் காணவில்லை.
‘காக்கா எழுந்து நடக்கற அளவுல இருந்திச்சா?’ என்றார். ‘இல்லை’ என்று ஃபோட்டோவைக் காட்டினேன்.
‘அனேகமா பூனை கொண்டு போயிருக்கும்’ என்றவர், ‘இது நடக்கறதுதான். பறவைகள் அடிபட்டு விழுந்தா தண்ணி வெச்சுட்டு, மூங்கில் கூடை போட்டு மூடிடுங்க. காப்பாத்திடலாம்’ என்றார்.
இவ்வளவு பிரயத்னப்பட்டு காக்கையைக் காக்க முடியவில்லையே என்று வருத்தம் அனைவருக்கும். ‘என்னங்க பண்றது, பூனை, நாய் இதெல்லாம் வந்தா அவ்ளோதான். போனாப்போவுது’ என்று இறங்கினார்.
அப்போதுதான் உறைத்தது. இவ்வளவு அடிபட்ட காக்கை தானாக அந்தச் சிறிய இடத்திற்குள் வந்து விழுந்திருக்க வழி இல்லை. பூனை கொண்டுவந்து போட்டிருக்க வேண்டும். என் மகன் மேலே போக, பூனை நகர்ந்திருக்கவேண்டும். ஆள் நடமாட்டம் குறைந்தவுடன் வந்து எடுத்துச் சென்றிருக்க வேண்டும். மிருக உலகம். வருத்தப்பட வழி இல்லை என்று சிந்தித்தவாறு சிறிது நேரம் நின்ற போது ஏக்கத்துடன் அந்தக் காக்கை எங்களைப் பார்த்திருந்த பார்வை மனதிற்குள் ஓடியது. ‘பூனை என்னை இங்கு போட்டுள்ளது. காப்பாற்றுங்கள்’ என்று மவுன மொழியில் கேட்டதோ என்னவோ.
‘நான் மனுசங்களுக்கு வண்டி ஓட்டறதில்ல. மிருகங்களுக்கு தான் ஓட்டறேன். யார் வீட்டுலயாவது நாய், பூனைக்கு ஒடம்பு சரி இல்லேன்னா அதுங்கள ஆஸ்பத்திரிக்கி கூட்டிக்கிட்டுப் போவேன். ஒரு வேளை இறந்துடுச்சுன்னா, அதக் கொண்டுபோய் அடக்கம் பண்ணிடுவேன். நேத்து கூட ஈஞ்சம் பாக்கத்துல நாய் ஒண்ணு அடி பட்டுக் கெடக்குன்னு தகவல் தெரிஞ்சு, போய் காப்பாத்தி அனுப்பி வெச்சேன்’ என்றார் அலட்டிக்கொள்ளாமல்.
‘வெச்சுக்குங்க’ என்று சிறிதளவு பணம் கொடுத்து அனுப்பினேன்.
காக்கை குருவி எங்கள் சாதி என்ற பாரதி இவரைப் பார்த்து மகிழ்வான். Animal Rescue Baskar +91-94451-59587
பி.கு.: ப்ளூ க்ராஸ், பீட்டா முதலானவை தமிழகத்தில் இல்லை என்று அறிவித்துவிடலாம். தண்டத்துக்கு இரு இயக்கங்கள்.
#Animalrescue #autoanna



