The side that is not spoken about, generally.

நாளை மாலை மயிலைவாசிகளுக்கு ஒரு நல்ல வாய்ப்பு.

நாஸாவில் இருந்து செவ்வாய் நோக்கி ஏவப்பட்ட விண்கலம் மயிலை தெற்கு மாட வீதியில், சங்கீதாவிற்கு எதிரில் தரையிறங்கவுள்ளது. செவ்வாய் நோக்கிப் பறந்த விண்கலத்தின் கேமராவில், செவ்வாயின் தரை அமைப்பை ஒத்த தெற்கு மாட வீதி தென்பட்டதால், செவ்வாய் வந்துவிட்டது என்று நினைத்துக் கீழிறங்குகிறதாம்.

இந்த விழாவில் மயிலை எம்.எல்.ஏ. குத்துவிளக்கேற்றி விண்கலத்தை வரவேற்கிறார். பூரணகும்ப மரியாதை, நாதஸ்வர மங்கள இசை என்று அமோக வரவேற்பாம். இவ்வளவு கஷ்டப்பட்டு மேலே ஏவிய விண்கலத்தை ஒரே நொடியில் கீழே இறக்கிய திறமையைப் பாராட்டி அமெரிக்கன் கான்சுலேட் அதிகாரிகளும் மாலை போட்டுக்கொண்டு வந்து ஆரத்தி எடுக்கிறார்களாம்.

‘வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்’ என்று முதல்வரும் விண்கலத்துக்குப் பாராட்டு தெரிவித்து வரவேற்றுள்ளார் என்று தெரிகிறது. தேர்தல் நேரத்தில் மக்களின் கவனத்தைத் திசை திருப்புகிறார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் கண்டித்தாலும் அண்ணாவின் கொள்கைப்படி வரவேற்போம் என்றும் சொல்லியுள்ளார்.

தெற்கு மாட வீதியை இப்படி செவ்வாய் தரை போல் நல்ல வகையில் குண்டும் குழியுமாக ஆக்கி, அவ்வாறே ஒரு வருஷமாக நிலைநிறுத்தி. நமக்கெல்லாம் இந்த நல்ல வாய்ப்பை நல்கிய சென்னை கார்ப்பரேஷனுக்கு அனந்தகோடி நமஸ்காரங்கள்.

One response

  1. Ushasedhadri Avatar
    Ushasedhadri

    Ha ha
    நல்ல கற்பனை

    Like

Leave a reply to Ushasedhadri Cancel reply