‘Why do we need a western validation? What are we trying to prove again to the west?’ என்று வந்திருந்தவர்களில் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
நேற்று சென்னை லிட் ஃபெஸ்ட் நிகழ்வில் ‘ஆரிய திராவிட அடையாளங்கள்’ என்கிற தலைப்பில் திராவிட மாயை சுப்பு (Subbu Maniyan) அவர்களுடன் நான் கலந்துகொண்ட நிழ்வின் இறுதியில் கேள்விபதிலில் இந்தக் கேள்வி எழுந்தது. அருமையான கேள்வி. ஆனால் நேரம் முடிந்துவிட்டதால் பதில் அளிக்க இயலவில்லை. கேட்டவர் நண்பர் Tiruchendurai Ramamurthy Sankar என்று பின்னர் அறிந்துகொண்டேன். இருட்டில் முகம் தெரியவில்லை.
ஆரியப் படையெடுப்பு நிகழவில்லை, சரஸ்வதி நதி நாகரீகம், தாஸர், தாஸ்யு விளக்கங்கள், மாக்ஸ் முல்லரின் கோணல் பார்வை, மிஷேல் டானினோவின் ஆராய்ச்சி, வஸந்த் ஷிண்டே மற்றும் டேவிட் ரீச் முதலிய ஆராய்ச்சியாளர்களின் ராக்கி கரி கண்டுபிடிப்புகள், திராவிட என்னும் சொல் வந்துள்ள இலக்கியங்கள் என்று பலவற்றின் வாயிலாகவும், விவேகானந்தர், அம்பேத்கர் முதலியோரின் எண்ணங்களை அடிப்படையாகவும் கொண்டு ஆரியப் படையெடுப்பு என்பதன் அபத்தத்தைப் பற்றிப் பேசினேன்.
பேசாமல் விட்ட தலைப்புகள் கொன்ராட் எல்ஸ்ட் மற்றும் டேவிட் ஃப்ராலி கொடுத்துள்ள பார்வைகள், சாயன பாஷ்யம், சமீபத்திய மரபணு முடிவுகள் மற்றும் கனேடிய ஆராய்ச்சியாளர் ஜார்ஜ் எர்டோஸி, அமெரிக்க ஆய்வாளர் ஹேய்ன்ரிக் ஹோக் முதலியோரின் பார்வைகள். நேரத் தேவையைச் சரியாகக் கணிக்க முடியாமல் போனது வருத்தமே. கேள்விக்கு வருவோம். பேச்சின் இடையில் தமிழ்நாடு, மஹாராஷ்டிரம், வங்காளம் முதலிய மாநிலங்களின் பாடப் புத்தகங்களில் இன்றும் உள்ள ஆரியப் படையெடுப்பு குறித்த குறிப்புகளைப் பற்றிச் சொல்லியிருந்தேன்.
மேற்கத்திய அறிஞர்கள் கூறிவிட்ட காரணத்தாலேயே உண்மை என்று நமது இடதுசாரி வரலாற்று ஆசிரியர்கள் ஒப்புக்கொண்டும், தங்களது நூல்களிலும் ஆரியப் படையெடுப்பு நிகழ்ந்தது என்பது ஏதோ கேள்வியே கேட்க முடியாத உண்மை என்கிற நிலையிலேயே நமது மாநில அரசுகள் வரலாற்றுப் பாடத்திட்டத்தை வகுக்கின்றன. இன்றைய அரசும் கூட ‘ நாங்கள் வரலாற்றுப் பாடத்தில் ஒரு கமா (comma) வைக் கூட மாற்றவில்லை’ என்று சொல்கிறது. ஏனெனில், எதையாவது மாற்ற வேண்டும் என்றால் உடனே எழும் பெரும் கூக்குரல் மற்றும் ஊடகங்களில் நிகழும் அரையணா அறிஞ்ர்களின் ஒப்பாரிகள். ஆகவே அரசுகள் தயங்குகின்றன – பாஜ அரசும் அப்படியே.
1901ல் பேசிய சுவாமி விவேகானந்தர் ‘எங்கள் பிள்ளைகள் இந்தப் பொய்களையே வாசிக்கிறார்கள்’ என்று ஆதங்கப்படுகிறார். 120 ஆண்டுகளுக்குப் பிறகும் அதே கதைதான். நான் 80களில் வாசித்த வரலாற்றையே என் மகனும் வாசிக்கிறான். பொய் வரலாறு என்று தெரிந்தே அவனும் வாசிக்கிறான். ஆக, நமது மக்களிடம் இந்தப் பொய்களைப் பற்றிய பூரண விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். யுனெஸ்கோ விருது கோமாளித்தனம் போன்று நமது மக்களும் இந்த விஷயம் குறித்து மேலும் கேள்விகள் எழுப்பி, அரசியல் கட்சிகள் இந்த விஷயங்களில் தங்கள் நிலையைத் தெளிவுபடுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும். இதற்கு, இம்மாதிரியான தொடர்ச்சியான விழிப்புணர்வும், பேச்சுகளும் எழுத்துகளும் நடந்துகொண்டே இருக்க வேண்டும்.

சமீபத்திய ராக்கி கரி அகழ்வாராய்ச்சிகள் பற்றி எந்தச் செய்தி ஊடகமும் பேசுவதில்லை. ஏனெனில், அது ஆரியப் படையெடுப்புப் பொய்யை மறுக்கும் விதத்தில் அறிவியல்பூர்வமாக அமைந்துள்ளது. பூரணமான முடிவுகள் வெளிவரவிருக்கின்றன. இந்த நிலையில், கீழடியில் சமயம் தொடர்பான எந்தச் சான்றும் இல்லாத வகையில் முடிவுகள் வெளியிடப்பட வேண்டும் என்று பெரும் முயற்சியும் நடக்கின்றது என்கிறார்கள். ஆகவே, ஆரியப் படையெடுப்பு எப்படி கேள்வியே கேட்க முடியாத விஷயமாக மாறிவிட்டதோ, அம்மாதிரியாகக் கீழடி, ராக்கி கரி முதலியன அமைந்துவிடக் கூடாது. இந்த நிலை ஏற்பட, மேலும் விழிப்புணர்வு வேண்டும்.
முதலில் சொந்த நாட்டு விழிப்புணர்வு தேவை. பிறகே தவறான கருத்தியல்களைப் புகுத்த முயல்பவர்களின் எண்ணங்களை முறியடிக்க முடியும். ஆக, நமக்கு மேற்கத்திய சான்றிதழ்கள் தேவை இல்லை என்பது எவ்வளவு உண்மையோ, அந்த அளவு மேற்கத்திய ஏடுகளில், பல்கலைக் கழகங்களில் உண்மை ஆராய்ச்சி முடிவுகள் எழுதப்பட வேண்டும் என்பதும் உண்மை. ஏனெனில், மேற்கத்திய ஏடுகளில் நமது ஆராய்ச்சியின் உண்மைத் தன்மை சரியான வகையில் வெளிவரவில்லை என்றால், நமது பாடத் திட்டங்களில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.
இடதுசாரிக் கும்பல்கள் ஊடுருவியுள்ள கல்விக் கழகங்கள், பள்ளிகள் முதலியவற்றில் ஏற்றப்பட்டுள்ள விஷம் முறிய, இம்மாதிரியான கலந்துரையாடல்கள் அதிக அளவில் இடம்பெற வேண்டும். இது தான் உண்மை என்பது வாஷிங்டன் போஸ்ட், நியூ யார்க் டைம்ஸ் முதலிய ஏடுகளில் தொடர்ந்து வந்தால் மட்டுமே நம் நாட்டின் கல்வித் திட்டத்தில் மாற்றம் ஏற்பட சிறிதளவாவது வாய்ப்புள்ளது. பாராளுமன்றம் இயற்றிய சட்டங்களை அமல் படுத்த முடியாமல் நிற்கிறோம் என்பதை நினைவில் கொண்டால் இந்தத் தேவை புரியும்.
நான் Consensus ஏற்படுத்த வேண்டும் என்று சொல்கிறேன். அதை, உண்மைகளை உரத்து உரைப்பதன் மூலம் செய்ய வேண்டும் என்கிறேன்.
பின்னர் கேள்விகள் கேட்ட வேறொருவர் ‘கொன்ராட் எல்ஸ்ட் பார்வைகள், ஶ்ரீபாஷ்யத்தில் உள்ள சம்ஸ்க்ருதச் சொல்லின் பொருள் முதலியனபற்றியும், சாயன பாஷ்யம் பற்றியும் ஏன் பேசவில்லை?,’ என்பது போல் கேட்டார். எல்ஸ்ட் பார்வை பேச முடியாதது வருத்தமே. முன்னர் கூறியபடி நேரம் இன்மை தான் காரணம். ‘இந்த நிகழ்வில் புதியதாக ஒன்றும் இல்லையே, updated ஆக இல்லையே?’ என்றும் கேட்டார். ‘Update’ என்று அவர் சொன்னது நல்லதே. ஒரு சிலர் இந்தத் தலைப்புகள் குறித்துத் தொடர்ந்து வாசித்து வருகிறார்கள் என்பது மகிழ்ச்சியே.
மாக்ஸ் முல்லர் பற்றித் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகம் அவர்கள் பின்னர் சந்தித்து மாக்ஸ் முல்லரின் உள்நோக்கம் பற்றிக் கேட்டு, உரையாடினார். பல புதிய செய்திகள் அறிந்துகொண்டதாகத் தெரிவித்தார்.
நிகழ்வு முடிந்தவுடன் என்னுடன் பேசிய சில ஆர்வலர்கள் பல செய்திகள் தாங்கள் கேட்டதே இல்லை, இன்று பேசியது போதவில்லை. மீண்டும் சந்தித்து, 3 மணி நேரத்துக்கான கலந்துரையாடல் ஏற்பாடு செய்யலாமா என்று கேட்டார் ஒரு ஆர்வலர்.
நல்லது நடந்தால் சரிதான். #ChennailitFest