‘தேர்தல் நடக்கும் போது நீங்கள் வேறு கிரஹத்தில் இருந்தீர்களா?’ என்று நீதி மன்றம் தேர்தல் ஆணையத்தைக் கேட்கிறது.
மத்திய அரசு, கொரோனாவைக் காரணம் காட்டி, தேர்தல் ஆணையத்திடம் தேர்தல்களைத் தள்ளிப் போடச் சொல்லியிருந்தால் முற்போக்கு, இடது சாரி கோஷ்டிகளும் அவற்றின் குழல் ஊதும் ஊடகமும், இதே நீதி மன்றமும் என்ன சொல்லியிருக்கும்?
நேர்மையான எதிர்க்கட்சிகளும், தேசிய உனர்வுள்ள உதிரிக் கட்சிகளும், நல்ல எண்ணம் கொண்ட ஊடகம் இருந்திருந்தால் பிரச்னை இல்லை. இருப்பது எல்லாம் ‘அடுத்த என்ன பிரச்னை குறித்து குதிக்கலாம்?’ என்று ரொட்டித் துண்டுக்கு அலைபவை. உதா: Western Trunk Road.
ஆக, மத்திய அரசு மவுனம் காத்தது. இது தவறு என்று நான் நினைக்கிறேன். ‘இந்த நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டுமா என்னும் முடிவைத் தேர்தல் கமிஷனிடம் விடுகிறோம்’ என்று வெளிப்படையாகச் சொல்லியிருக்கலாம். மவுனம் காத்ததற்கும் அதுதான் பொருள் என்றாலும் perception என்று ஒன்று உள்ளது. Justice should not only be done, but also seen to be done என்று சொல்வார்கள்.
மாநில அரசு பரிந்துரைத்திருந்தால் மத்திய அரசு தேர்தல் ஆணையத்திடம் சொல்லியிருக்குமா என்பது கேள்விக்குறியே. மாநில அரசுக்குத் தனக்கு அப்படி ஒரு அதிகாரம் இருப்பது தெரியுமா என்றும் தெரியவில்லை. இறுதி முடிவு ஆணையத்திடம் தான் என்றாலும், சொல்வதைச் சொல்லியிருக்கலாம். ஆனால், உடனே எதிர்க்கட்சிகள் ‘தேர்தலைச் சந்திக்கப் பயப்படுகிறார்கள்’ என்று ஆலாபனை துவங்கியிருப்பார்கள்.
ஆக, இதற்கு இருந்த ஒரே பலிகடா, தேர்தல் ஆணையம் தான். மத்தியும் மாநிலமும் மவுனம் காக்க ( ஆணையம் கொரோனா குறித்த பரிந்துரைகளை மத்திய மாநில அரசுகளிடம் கேட்டதா என்று தெரியாத நிலையில்), ஆணையம் தன் கடமையை நிறைவேற்றியது. கமிஷனரும் தன் பணி முடிந்து ஓய்வு பெற்றார். இப்பொது கமிஷனுக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்த கோர்ட் முயல்கிறது.
கமிஷன் ‘கொரோனா வழிமுறைகளை ஒட்டியே தேர்தல் நடத்தப்பட வேண்டும்’ என்று பலமுறை அறிவித்தது. ஆனால், ஒருமுறை கூட செயலில் இறங்கவில்லை என்பது உண்மை. ‘மாஸ்க் இல்லாமலும், சமூக இடைவெளி இன்றியும் பிரச்சாரம் நடந்தால், அந்தத் தொகுதியில் தேர்தல் நிறுத்தி வைக்கப்படும், வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்படுவார்’ போன்ற ஆணைகளைப் பிறப்பித்திருக்கலாம், ஓரிரு இடங்களில் செய்தும் காட்டியிருக்கலாம். தலைமைச் செயலாளரையே மாற்றும் அதிகாரம் உள்ள கமிஷனுக்கு, இந்த அறிவிப்புகளைச் செய்யவும், வேட்பாளர்களைத் தகுதி நீக்கம் செய்யவும் அதிகாரம் இல்லை என்பதை நம்ப முடியவில்லை.
ணையம், மத்திய மாநில அரசுகளிடம் பரிந்துரை, ஆலோசனை கேட்டிருக்கும் என்றே நம்புகிறேன். அரசுகளின் சுகாதார அமைச்சுகள் தேர்தல் நடத்த ஏதுவான சூழல் உள்ளது என்று சொல்லியிருக்கும் என்றே எண்ணுகிறேன். தான் ஒரு Constitutional Entity என்பதால், தனது மாட்சிமையைக் காக்க ஆணையம் மத்திய மாநில அரசுகளைக் காட்டிக் கொடுக்காமல் மவுனம் சாதிக்கிறதோ என்றும் தோன்றுகிறது.
ஆனால், நீதிமன்றம் உத்தம புத்திரன் போல் பேசுவது வியப்பாக இருக்கிறது. நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளைத் தானாகவே முன் வந்து எடுத்து நடத்தும் நீதிமன்றம், இந்த விஷயத்திலும் அப்படி நடக்காமல் விட்டது ஏன்? இதற்கு நீதிபதி பதில் சொல்ல வேண்டும்.
நம் நாட்டில் எல்லாமே ‘ஆல்’ போட்டுப் பேச வேண்டியதாக உள்ளது.
எதிர்க்கட்சிகள் நியாயமாகச் செயல்படும் என்கிற நம்பிக்கை இருந்திருந்தால், ஊடகங்கள் அறம் சார்ந்து பேசும் என்கிற நம்பிக்கை இருந்திருந்தால், மத்திய, மாநில அரசுகள் தயவு தாட்சண்யம் இன்றி ஆணையத்திற்கு அறிவுரை வழங்கியிருந்தால்….
எல்லாவற்றிற்கும் மேலாக, நமக்கு அறிவிருந்திருந்தால்…
Leave a comment