The side that is not spoken about, generally.

எப்போதும் பூமி க்ருஹத்திலேயே உள்ள ஜஸ்டிஸ் ஸ்வாமிகள் சன்னிதியில் அனேக தெண்டன் சமர்ப்பித்த விஞ்ஞாபனம். க்ஷேமம். சமீபத்திய ஜட்ஜ்மெண்ட் சமாச்சாரத்தில் தேர்தல் கமிஷன் மட்டுமே காரணம் என்று வைதுள்ளீர்கள். ஆகவே, உங்களிடம் இன்ன பிற விஷயங்களையும் கேட்டுக்கொள்ளலாம் என்று எழுதுகிறேன். எனக்கு எதற்கு வம்பு, இல்லையா?

சாத்துமுதில் புளி சேர்ப்பது நல்லதா? அல்லது ஜீரகம் மட்டும் இட்டு செய்யலாமா? எதில் வாசனை அதிகம் வரும்?அக்கார அடிசிலில் நாட்டுச் சர்க்கரை போடுகிறார்கள். வெல்லமும், பாலும், அன்னமும் மட்டுமே தானே போட வேண்டும்? இதைப் பற்றி ஏதாவது ஜட்ஜ்மெண்ட் இருக்குமா?

காஃபி என்கிற போர்வையில் கபசுரகுடி நீர் கொடுக்கிறார்கள். வித்யாசமே தெரிவதில்லை. இதற்கு ஏதாவது தடை உத்தரவு போட முடியுமா?

ரெம்டிசிவிர் கட்டுப்பாடு போன்று கபசுரப் பொடிக்கும் கட்டுப்பாடு விதித்து, வீட்டுக் கணவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டுகிறேன்.

ஆட்கொணர்வு மனு போல, பொருள் கொணர்வு மனு போட வழி உண்டா? ‘வீட்ல தான இருக்கீங்க. டிஃபன் எதுக்கு? நேரா சாப்பாடே சாப்பிடுங்க’ என்கிற கொடுமையில் இருந்து காக்க ‘டிஃபன் கொணர்வு மனு’ போட வழி உண்டா என்று சொல்லுங்கள் ஸ்வாமி.

தெவசத்திற்கு ப்ராம்மணார்த்திற்கு வருபவர்கள் காலை அலம்ப வேண்டுமா? தற்காலத்தில் அவர்களைக் குளுப்பாட்டவே வழி உண்டா? சானிடைசரில் ஆசமனம் பண்ணலாமா?

யாரெயெல்லாமோ என்னென்ன வேலை செய்யவில்லை என்பதைப் பார்த்துக் கருத்து சொல்கிறீர்கள். அதைப் போல, கீழ்க் கோர்ட்டுகளில் ஒரு சிவில் சூட் போட்டால் போட்டவனுக்கு தெவசம் வருகிறதே தவிர ஹியரிங் வருவதில்லை. போட்டவனின் மகனுக்கு தெவசம் முடிவதற்குள் கேஸ் முடிய வழி உண்டா என்று சொல்ல முடியுமா?

எலக்‌ஷன் கமிஷன் ஒரே நாளில் தேர்தல் நடத்தி உங்களின் பெருங்கோபத்திற்கு ஆளாகியுள்ளது. என்ன இருந்தாலும் 30 வருஷம் கேஸ் நடத்தி செத்துப் போனப்பறம் தீர்ப்பு சொன்ன உங்க பெருந்தன்மை கமிஷனுக்கு இல்லை தான்.

எல்லாரும் உங்களை மாதிரி ஆக முடியுமா என்ன?அதுவும் எப்படியான விசேஷம்? எம்.எல்.ஏ. வாக, தேர்தலில் நிற்கணும். தெருத்தெருவா சுத்தணும். செத்து சுண்ணாம்பு ஆனப்பூறம், மக்கள் தேர்ந்தெடுத்தா எம்.எல்.ஏ. அதுக்கப்புறம் முதல்வர் சொன்னா மந்திரி, இல்லேன்னா எந்திரி. கமிஷன்ல ஆஃபீஸரா ஆகணும்னா, பரீட்சை எழுதணும், பாஸ் பண்ணனும், 30 வருஷம் வேலை பார்த்து, கடைசில கமிஷன்ல வர்றதுக்கு வய்ப்பு இருக்கு. ஆனா, உங்களுக்கு அப்படியா? உங்கள்ள யார் நிதிபதின்னு நீங்களே சொல்லுவேள். அதைக் கேக்க முடியாது. அப்பறம் நீங்களே உங்களை அப்பாயிண்ட் பண்ணவாள கொறை சொல்லுவேள். இவ்வளவு இருந்தும், கோர்ட் வாசல்ல யாராவது தும்மினா கண்டப்ட் ஆஃப் கோர்ட்.

போகட்டும். லோகாயதமா பேசுவோம்.இன்னிக்கி ராத்திரி என்ன தளிகை பண்ணறது? ரவா உப்புமா, கொஸ்து பண்ணலாமா? கொரானாவுக்கு சரியா வருமா? இல்ல கொஸ்து பண்ணா பெந்தகொஸ்து கோச்சுப்பாளா?

என்னெழவோ உங்களப் பத்திப் பேசினாலே கொழர்றது.

‘என்ன கண்றாவி இது? கண்ட டிவியும் பார்க்காதேங்கோன்னா கேட்டதானே? கண்டதையும் பார்க்கறது, ராத்திரி தூக்கத்துல ஒளறவேண்டியது. ஹால்ல போய் படுங்கோ, தூங்க முடியல்ல’

2 responses

  1. RAVICHANDRAN R RAJA Avatar
    RAVICHANDRAN R RAJA

    ஆமருவி சார்….ரொம்ப தகிரியம்தான்….உங்களுக்கு…..கோர்ட்டயே….satire பண்றீங்களா!

    Like

    1. Amaruvi's Aphorisms Avatar

      இருக்கற பிரச்னைகள்ல அவங்க என்னையா பார்க்கப் போறாங்க?

      Like

Leave a comment