‘நான்கு ஆண்டுகளாக செய்திக்காக எந்தப் பத்திரிக்கையையும் வாசிப்பதில்லை. எனக்குத் தெரிய வேண்டிய செய்திகள் எப்படியும் என்னிடம் வந்து அடைகின்றன’ என்கிறார் ஜெயகாந்தன்.தெரியாமலே நான் இவரது பாணியைச் சில ஆண்டுகளாகப் பின்பற்றுகிறேன்.
இதற்கு News Fast (செய்தி கேளா விரதம்) என்று பெயரிட்டுள்ளார்கள். பலருக்கும் இந்த வியாதி இருக்கும் போல.
இந்த விரதத்தால் மனம் ஒரு நிலையில் இருப்பதாகவே உணர்கிறேன். அதிகம் வாசிக்க முடிகிறது. தனியாக அமர்ந்து சிந்தித்து எழுதவும் நேரமும், ஊக்கமும் கிடைக்கிறது என்பது என் அனுபவம். நடைப் பயிற்சியின் போது யாருடனும் பேசாமலும், காதில் கணடதையும் மாட்டிக்கொண்டு அலையாமலும், வெறும் சிந்தனைகள் மட்டுமே கொண்டு நடப்பது என் வழக்கம். அப்படியே கேட்டாக வேண்டுமென்றால் சில Podcastகள் உள்ளன. சுமார் 20 மணித்துளிகள் ஓடக்கூடியவை.
தொடர் செய்திகளால் மனித மனம் அல்லல்படுகிறது என்று தோன்றுகிறது. ஒரு பிரச்னையில் இருந்து அடுத்த பிரச்னைக்குத் தாவிக்கொண்டே இருப்பது நமது மூதாதையர்களை ஜினைவுபடுத்த உதவலாமே தவிர வேறொரு பலனும் இருப்பதாகத் தெரியவில்லை. இது விஷயமாக ‘Deep Work’ என்றொரு நூல் உள்ளது. வாசித்துப் பாருங்கள்.
காஞ்சி பரமாச்சாரியார் அன்றைய நாளிதழை இரவில் வாசிப்பாராம். ‘காலம்பரயே தெரிஞ்சுண்டு ஆகப்போறது என்ன? நாள் முழுக்க அந்த சிந்தனையே மனசுல உக்காண்டு, நம்ம ஆண்டுண்டு இருக்கும். கார்த்தாலயே நான் தெரிஞ்சுண்டதால செய்தி மாறப் போறதா என்ன?’ என்று குருமூர்த்தியிடன் சொன்னதாகத் தெரிகிறது.
இந்த நாளிதழ் தான் என்று இல்லை, எல்லாவற்றிலுமே நம்பகத்தன்மை இல்லாததும், போலியான கருத்துரைகளை உருவாக்குவதும் அவற்றில் இருந்து ஒரு மன விலகலை ஏற்படுத்திவிட்டதோ என்று நினைக்கிறேன்.உதா: நீட் மற்றும் நியூட்றினோ. உண்மை எல்லாருக்கும் தெரியும். ஆனாலும் இந்தப் பாசாங்கு எதற்கு? பாசாங்கே உண்மை என்பது போல் பேசிக்கொண்டே இருந்தால் செய்தித்தாள்களும் சரி, செய்திகளை உருவாக்குபவர்களும் சரி, எப்படித்தான் மன அமைதி பெறுகிறார்கள் என்று எண்ணியதுண்டு.
தொடர்ந்து உண்மைக்கு மாறானதையே சொல்லி வந்ததைக் கண்டு எல்லா பத்திரிக்கைகள் மீதுமே ஒரு வகையான ஒவ்வாமை வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது.தொலைக்காட்சி பேச்சே வேண்டாம். நேரம், மன அமைதி, அறிவு எல்லாம் பாழ். தொலைக்காட்சியில் செய்தி பார்ப்பது முட்டாள்தனம். அதிலும் நான்கு பேர் அமர்ந்து கொண்டிருந்தால் உடனே மூடிவிட்டுச் சென்றுவிடுவது உத்தமம்.
சரி. வேறு என்னதான் செய்வது என்று கேள்வி வரலாம்.காலையில் உடற்பயிற்சி / நடைப்பயிற்சி முடிந்தபின் வாசிக்கலாம். புரிவதற்குக் கடினமான கட்டுரைகள், கீதை வியாக்கியானம், பாசுர விளக்கம், அறிவியல் நூல்கள் இன்ன பிற. ஏதோ பைத்தியம் உளறுகிறது என்ற எண்ணம் வரலாம். ஆனால், நான் இதைத்தான் செய்கிறேன். ( ஆக, ஆமருவி பைத்தியம் தான், ஹையா !!)
Jokes apart. உழப்பட்டு, உரங்கள் இடப்பட்ட நல்ல விளை நிலத்தில் எருக்கஞ்செடியை விதைப்பது எப்படியோ, அப்படியானது செய்தி அலைவரிசைகளில் காலத்தைக் கழிப்பது.
காந்தியடிகளின் பிறந்த நாளில் இருந்து செய்தி நோக்கா / கேளா விரதம் அனுஷ்டிக்கலாமா?
–ஆமருவி தேவநாதன்.02-10-2021