ரொம்ப பேச வேண்டாம். கோவில் பாழாகியுள்ளது என்றாலே அது தமிழக அரசின் இந்து அறம் நிலையாத் துறையின் கீழ் வரும் கோவிலாகத்தான் இருக்க வேண்டும் என்பது தெளிவு. ஆகவே செய்திகளை மட்டும் தருகிறேன். கோபதாபங்கள், உணர்ச்சிப் பீறிடல்கள் என்று எதுவும் பலனில்லை. முடிந்தால் ஏதாவது செய்யலாம். இல்லையெனில் இருப்பதைப் பற்றி எழுதி, மக்களிடம் கொண்டு சேர்த்து அடுத்த கோவில் பற்றி எழுதலாம். தற்காலத்தில் அவ்வளவு தான் முடிகிறது.
பாபுராயன் பேட்டை கோவில் விஷயமாக அற நிலையத்துறையின் கவனத்துக்குக் கொண்டு வர நான் பட்ட பாடுகள் நானே அறிவேன். எத்தனையோ ஊடகப் பிரிவுகளில் சென்று கேட்டுவிட்டேன். ஹிந்துத்துவ ஊடக வெளிகள் என்று அறியப்படுபவையும் மௌனம் சாதித்தன. ‘யாத்ரிகன்’ என்னும் யூ-டியூப் ஒளிவழி மட்டும் செவி சாய்த்தது. ஆனால், ஹிந்து தர்மத்திற்கு எதிரானதாகக் கருதப்படும் ‘தி ஹிந்து’ நாளிதழ் அக்கோவில் பற்றிய என் கட்டுரையை வெளியிட்டது. பின்னர் தற்போது அறம் நிலையாத் துறை ஏதோ செயலாற்றி வருகிறது. கோவில் புனரமைப்பு குறித்த ஆரம்ப கட்ட திட்டமிடல் பணிகள் ஆமை வேகத்தில் நடக்கின்றன. ஒவ்வொரு முறை வேலைகள் நிற்கும் போதும், அதிகாரத்தில் உள்ளவர்களிடம் செல்வாக்குள்ள பெரியவர்களைக் கொண்டு பரிந்துரைக்க வேண்டியுள்ளது. இது பெரும் மனத்தளர்வை ஏற்படுத்துகிறது.
எனவே, பாபு ராயன் பேட்டை கோவில் தவிர மற்ற கோவில்கள் பற்றிய கட்டுரைகள் எழுதுவதோடு நின்றுவிடலாம் என்று முடிவு செய்து, மற்றுமொரு பாழ்பட்ட பண்டைய கோவில் குறித்து எழுதுகிறேன்.
இந்த முறை திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலசோழங்குப்பம் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவில். வழக்கம் போல் பாழ். கேட்பாரற்ற நிலை. மேற்பார்வை இந்து சமய அறம் நிலையாத் துறை.
பதினைந்து ஆண்டுகளாகக் கோவில் பூட்டிக்கிடந்துள்ளது. தற்சமயம் கோவிலைத் திறந்து பார்த்ததில் தாயார் மூலவர் திருமேனி பின்னம் அடைந்துள்ளது தெரிந்தது. தாயாருக்குத் தனி சன்னிதியே உள்ள நிலையில், தாயார் பின்னம் அடைந்தது பெரிய அப-சகுனமாகத் தோன்றவே, பம்பாயைச் சேர்ந்த வெங்கடேசன் என்பார் கோவிலைப் புனருத்தாரணம் செய்ய முயன்றுள்ளார்.
இதற்காகக் கோவிலில் உழவாரப் பணி செய்த போது ஐந்து மூட்டைகள் அளவிற்குக் காலி மதுபான பாட்டில்கள் இருந்துள்ளன. செடிகொடிகள் என்று அனைத்தையும் தன் செலவில் நீக்கியுள்ள் வெங்கடேசன் மற்றும் ஊர்ப் பெரியவர்கள், தாயார் திருமேனி வேண்டும் என்பதற்காக மஹாபலிபுரத்தில் ஒரு சிற்பக் கூடத்தில் செய்யச் சொல்லியுள்ளார்கள்.
திருமேனி தயாராக உள்ளது. ஆனால், புதிய திருமேனியைப் பிரதிஷ்டை செய்ய அறம் நிலையாத் துறை அலைக்கழித்து வருகிறது. திருவண்ணாமலை போளூர் / கலசப்பாக்கம் ( வந்தவாசி) பகுதி செயல் அலுவலர் இதற்கான மனுவைச் சென்னை அறம் நிலையாத் துறைக்கு அனுப்ப வேண்டும். அனுப்பியுள்ளார்களா என்று தெரியவில்லை. திருமேனி தயாராக இருந்தாலும் பிரதிஷ்டை செய்ய முடியாமல் திண்டாடுகின்றனர் பக்தர்கள்.
கோவில் பழமையானது. ஊரில், 1400 ஆண்டுகள் என்று சொல்கிறார்கள். கல்வெட்டு ஒன்று உள்ளது. ஆனால், கோவிலின் உண்மையான வயது தெரியவில்லை. சோழன் பெயரில் உள்ள ஊரில் உள்ளதால் சோழர் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது. குறைந்தது எண்ணூறு ஆண்டுகளாவது பழமையாக இருக்க வேண்டும் என்பது கோவிலில் சிற்பங்கள், சன்னிதிகளைக் காணும் போது தெரிகிறது.
கோவிலுக்கு சுமார் 15 ஏக்கர் அளவில் நிலங்கள் இருந்துள்ளன. கடந்த காலத்தைக் கவனிக்கவும். மேலும் நிலங்கள் இருந்திருக்கலாம். தற்போது எங்கே என்று தெரியவில்லை. அரசிடம் தகவல்கள் இருக்கும். யாரேனும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டுப் பெறலாம். கோவிலுக்குத் தெப்பக் குளமும் இருந்துள்ளது. கவனிக்க: இருந்துள்ளது. தற்போது ஆக்கிரமிப்பு போக கொஞ்சம் குளமும் உள்ளது.
ஊர்க்காரர்கள் சொன்னது: “ஶ்ரீமத் இராமானுசர் திருமேனியின் தலை துண்டிக்கப்பட்டுக் கிடந்தது. மது அருந்திய நிலையில் காலிகள் போட்ட ஆட்டம் இது. தாயாரின் திருமேனி பின்னமும் இவர்களாலேயே தான்.” இராமானுசரது திருமேனி இப்போது எங்கே போனது என்று தெரியவில்லை. அருகில் உள்ள கல்லூரியின் பேருந்துகள் நிற்கும் இடமாகவும், ஓட்டுநர்கள் சிறுநீர் கழிக்கும் இடமாகவும் கோவில் வளாகம் இருந்துள்ளது. இந்து சமய அறம் நிலையாத் துறை தனது கோவில்களைக் காக்கும் அழகு இது தான்.
தாயார் சன்னிதியில் அசைவ உணவும் மதுவும் கூடிய கூட்டுக் களிகள் நடந்துள்ளன என்றால் நம்புவீர்களா?
மத்திய தொல்லியல் துறை எங்கே போனது என்றே தெரியவில்லை. மாநிலத் தொல்லியல் துறையும் விடியலில் குளிர் காய்கிறதோ என்னவோ. யாரும் எட்டிக் கூடப் பார்ப்பதில்லை. நம் கண் முன்னே நமது அரசுகள் நமது பண்பாட்டையும், வரலாற்றையும் அழித்துக் கொண்டு திரிகின்றன. கோவிலை மக்கள் மதுபானக் குப்பிகளின் கிடங்காகப் பயன்படுத்தும் நிலையில் அரசுகள் மக்களை வைத்துள்ளன. வேதம் நிறைந்த தமிழ் நாடு, கல்வியில் சிறந்த தமிழ் நாடு என்று பாரதி சொல்வான். பள்ளித் தலம் அனைத்தும் கோவில் செய்வோம் என்றான். நாமோ கோவில் தலத்தை மதுக் குப்பிக் கிடங்காக்கியுள்ளோம். அவன் இன்றிருந்தால் பேனாவால் தன் கண்களைக் குத்திக் கொண்டு மாய்ந்திருப்பான்.
பிற மத மன்னர்கள் தங்கள் வழிபாட்டுத் தலங்களை ஹிந்துக் கோவில்களை இடித்துக் கட்டியுள்ளனர் என்பது எவ்வளவு உண்மையோ, நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசுகளும் தங்களது அலட்சியத்தினால் நமது பண்பாட்டை அழித்து வருகின்றனர் என்பதும் அதே அளவு உண்மை.
பக்தர்கள் இணைந்து உழவாரப் பணி செய்து சிறிதளவு பார்க்கும் படி செய்துள்ளார்கள். ஆனால், அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது என்னும் கேள்விக்குப் பதில் இல்லை. இந்த ஆண்டு புனரமைக்கப் பட உள்ள 1000 கோவில்களில் இந்தக் கோவிலும் உள்ளது என்று சட்டமன்றத்தில் அ.நி.து.அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்போது மே மாதக் கடைசியில் இருக்கிறோம். இன்னும் ஏழு மாதங்களில் என்ன செய்யப் போகிறார்கள், எப்படிச் செய்யப் போகிறார்கள் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். கலசப்பாக்கம் அ.நி.து. அலுவலகத்தில் இருந்து கடிதம் சென்னை அ.நி.து. அலுவலகத்திற்குச் செல்வதற்கே அவ்வளவு காலம் பிடிக்கும் போல் தெரிகிறது.
இந்தக் கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதாதது ஏன் என்கிற கேள்வி எழலாம். நம் தமிழ் நாட்டு மானம் உலக அளவில் கப்பல் ஏற வேண்டாம் என்கிற கரிசனம் தான் என்பதே என் பதில்.
விருப்பம் உடையவர்கள் இக்கட்டுரையை ஆங்கிலத்தில் / ஹிந்தியில் மொழி பெயர்த்துக் கொள்ளலாம்.
கோவிலின் நிலை பற்றிய படங்களை இணைக்கிறேன். மேலசோழங்குப்பம் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள் இந்த அவல நிலையைப் பார்த்து அறம் நிலையாத் துறைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுகிறேன். என்னால் முடிந்தவரை அதிகாரிகளிடம் / அரசிடம் பேசக்கூடிய பெருமக்களிடம் சொல்லிப் பார்க்கிறேன்.
கோவில் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கும் கைங்கர்யத்தில் பங்கு கொள்ளவும் மும்பையில் வசிக்கும் திரு.வெங்கடேசன் அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.( +91 – 9 8 3 3 3 8 3 2 2 7 )

பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவில், மேலசோழங்குப்பம்

பெருமாள் சன்னிதி மேலசோழங்குப்பம்

தாயார் சன்னிதி

திருப்பணி செய்த ஏதோ ஒரு அரசன், அரசி, மகன்

தூணில் இராமானுசர் ?

மஹா மண்டபத்தின் உள் கூரையில் வேலைப்பாடுகள்




