இவ்வாண்டிற்கான KVPY-SA தேர்வு முடிவுகள் ஒரு புதிய திறப்பை அளித்துள்ளன. ஆனால், பார்க்கத்தான் ஆளில்லை.
மேலே வாசிக்கும் முன்: +1 மாணவர்கள் எழுதும் இந்தத் தேர்வு மிகக் கடுமையான ஒன்று என்பதை மனதில் கொள்ளுங்கள். அடிப்படை அறிவியல் மற்றும் கணிதத்தில் Concept அளவில் அதி தீவிர நுண்ணறிவு பெற்றிருக்க வேண்டும்.
இவ்வாண்டு பொதுப் பிரிவினருக்கான தகுதி மதிப்பெண் 51. இதற்கு மேல் வாங்கியிருந்தால் KVPY Scholar என்று அங்கீகாரம் பெறுவர். மேற்படிப்புக்கு மத்திய அரசின் உபகாரச் சம்பளம் உண்டு. IISc / IISERல் இடம்.
இவ்வாண்டு பட்டியல் இன மாணவர்களுக்கான தகுதி மதிப்பெண் 40. இந்த மதிப்பெண்ணுமே கூட மிகவும் கடினமான ஒன்றுதான். அந்த அளவு புரிதல் உள்ள பட்டியல் இனக் குழந்தைகள் உள்ளார்கள் என்பது மகிழ்ச்சியளிக்கிறது. பட்டியல் இனக் குழந்தைகள் முன்னேறி வருகிறார்கள் என்பது பாரதத்திற்கு நல்லதே.
இக்குழந்தைகள் இத்தேர்வை ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதியிருப்பார்கள். (வரும் ஆண்டில் இருந்து அனைத்து இந்திய மொழிகளிலும் எழுதலாம்).
நிற்க.
இவ்வாண்டுப் பட்டியல் இன வெற்றியாளர்கள் பெயர்களில் தமிழ்ப் பெயர்கள் போல் தோற்றம் அளிப்பவை இரண்டு மட்டுமே. அதெப்படி மற்ற மாநிலப் பட்டியல் இனக் குழந்தைகள் இந்தக் கடுமையான தேர்வில் உபகாரச் சம்பளம் பெறும் அளவிற்கு வெற்றி பெறுகிறார்கள், ஆனால், தமிழ் நாட்டில் இருந்து அந்தச் சமூகக் குழந்தைகள் தேர்வு வெற்றியாளர் பட்டியலில் இல்லவே இல்லையே ?
தமிழகத்தின் பட்டியல் இனக் குழந்தைகள் ஆங்கிலத்தில் போதுமான தேர்ச்சி பெற்றிருக்கவில்லை என்பதைத்தானே இது உணர்த்துகிறது? இதற்கு யார் காரணம் ?
போகட்டும்.
2022 நவம்பரில் நடக்கவிருக்கும் KVPY SA / SX தேர்வுகளில் தமிழ் நாட்டுப் பெயர்கள் எத்தனை ? அவற்றில் பட்டியல் / ஓபிசி குழந்தைகள் எத்தனை என்பதைக் கவனிக்க வேண்டும். ஏனெனில் அத்தேர்வு தமிழிலும் நடக்கவுள்ளது.
மத்திய அரசின் உபகாரச் சம்பளம் தவிர, KVPY Scholar-களுக்கு அரசின் Smart Card கொடுக்கிறார்கள். அதன் மூலம் மத்திய அரசின் ஆராய்ச்சிக் கழகங்களில் அக்குழந்தைகள் இலவசமாக ஆராய்ச்சிகள் செய்ய வழி உண்டு. அதற்கு மேல் IISc / IISERகளில் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.
மாநில அரசிற்கு ஓர் வேண்டுகோள் : நவம்பர் மாதத்திற்கு இன்னும் 4 மாதங்கள் உள்ளன. அரசுப் பள்ளிகளில் உள்ள அறிவியல் / கணிதத் திறமை வாய்ந்த +1 / +2 குழந்தைகளை விரைவாகக் கண்டறிந்து, குறுகிய காலப் பயிற்சி அளியுங்கள். எத்தனை மாணவர்கள் வெற்றி பெறுகிறார்களோ அத்தனை நல்லது. கொஞ்சம் போர்க்கால அடிப்படையில் செயலாற்றுங்கள். ப்ளீஸ்.
KVPY குறித்த எனது முந்தைய பதிவைக் கண்டு நாமக்கல்லில் இருந்து ஓர் அறிவியல் ஆசிரியர் அழைத்திருந்தார். தேர்வு குறித்து என்னால் முடிந்த அனைத்துத் தகவல்களையும் தெரிவித்திருந்தேன். அவர் சார்ந்த அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு மேலும் கல்வி குறித்த உதவிகள் செய்யவும் உள்ளேன்.
ஆகவே, அரசும், அரசில் அதிகாரம் உள்ள அரசியல்வாதிகளும் இந்தப் பதிவை நல்ல நோக்கத்தில் அணுகுங்கள்.
பி.கு.: இது குழந்தைகள் நலன் பற்றிய சிறு பதிவு. இதில் அரசியல் கலக்காதீர்கள்.