பிராமண போஷாகர் எஸ்.வி.சேகர் சமூகத்திற்கு, அனேக நமஸ்காரங்கள். உபய க்ஷேமம்.
இப்பவும் உங்கள் பிராமணக் கட்சி பற்றிய பேச்சைக் கேட்டேன். 48 லட்சம் பிராமணர்கள் ஓட்டுப் போட்டு… சரி ஒரு சந்தேகத்தைக் கேட்கிறேன்.
பிராமணர் கட்சியில் இட ஒதுக்கீடு உண்டா ? ஐயர் எத்தனை %? ஐயங்கார் ? ஐயங்காரில் வடகலை எத்தனை, தென்கலை எத்தனை ? வடகலையில் மடம், முனித்ரயம், ஸ்வயமாசார்யாள் என்று % உண்டா ? ஐயரில் அஷ்டசஹஸ்ரம், வடமாள், வாத்திமாள் இன்னபிற என்று எவ்வளவு % ?
மாத்வர்களுக்குத் தனி % உண்டா ?
முக்கியமாகக் கேட்க வேண்டியது . சோழிய வைஷ்ணவர்களுக்கும் உண்டா ?
விபரம் தெரியப்படுத்தவும்.
மயிலாப்பூரில் ஐயங்காரை நிற்க வைக்காதீர்கள். தென்கலைக்கு வடகலையும், வடகலைக்குத் தென்கலையும் ஓட்டு போட மாட்டார்கள். ஐயர் யாரையாவது நிறுத்துங்கள். டிரஸ்ட்பாக்கம் பத்து தெருக்களில் ஐந்து ஓட்டு விழும்.
திருவல்லிக்கேணியில் தென்கலையாரை நிற்க வைக்கவும். ஏனெனில் வடகலையார் கோஷ்டியில் நிற்கவே வழி இல்லை. தேர்தலில் நிற்பதாவது ?
தேரழுந்தூர் ( குத்தாலம்) தொகுதியில் பிராமணர்களை நிற்க வைக்க வழி இல்லை. இருப்பது ஒரே ஒரு பட்டர் மட்டுமே. அவருக்குக் கோவில் வேலை உண்டு. ஆகவே ஏதாவது வந்தேறி யாரையாவது நிறுத்த வேண்டியது தான். ( பிரஷாந்த் கிஷோர் உதவலாம். அட்ரஸ் அண்ணா சாலையில் உள்ள உங்கள் தலைமை அலுவலகத்தில் ).
மறந்தேவிட்டேன். நவீன பிராமணர்கள் பூணூலையும் துறந்துவிட்டனர். அனேகமாக இங்கிலீஷ் மட்டுமே பேசுவார்கள். அவர்களுக்கு இடம் உண்டா?
இதெல்லாம் எப்படியோ போகட்டும். இந்த ஒரு கேள்விக்குப் பதில் சொல்லவும்.
உங்கள் பிராமணக் கட்சி வேட்பாளர்களுக்கு உங்கள் மவுண்ட் ரோடு ஃபைனான்ஸியர்களிடமிருந்து பேமெண்ட் ஜி-பேவில் வருமா ? அதில் ‘ஜி’ இருப்பதால், மரியாதை சம்பந்தப்பட்ட விஷயம் என்று அவர்கள் ஒதுங்கிவிடப்போகிறார்கள்.
இல்லை, அந்த பேமெண்ட் உங்களிடம் வந்து, உங்கள் கமிஷனை எடுத்துக் கொண்டு மிச்சம் மீதியைத் தான் தருவீர்களா ?
விபரமாக ஒரு கடுதாசி எழுதுங்கள்.
மிகுந்த ஆவலுடன்
அசட்டு அம்மாஞ்சி.
Leave a comment