The side that is not spoken about, generally.

இப்படியான ஒரு நூலை வாசிப்பேன் என்று நினைத்ததில்லை. ஆனால், வாசித்தேன்.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த மலையாளியான வினயா, தனது இளமையில், தன் தாய் அனுபவிக்கும் பெண் சுதந்திரம் இன்மையைக் காண்கிறாள். சமூகத்தில் பெண்களுக்கு இருக்கும் கட்டுப்பாடுகளையும் கண்டு கேள்வி கேட்கிறாள்.

இளமைக்காலத்தில் தான் அனுபவித்த வாழ்வு, தன் பள்ளிக்கூட நிகழ்வுகள், கிராம வாழ்க்கை, குறிப்பாக அதில் இருந்த பெண் சுதந்திரம் அற்ற தன்மை, பெண்களுக்கான கட்டுப்பாடுகள் என்று பலதையும் சொல்லும் வினயா, தன் குடும்பத்துக்குள்ளும் நடக்கும் ஆண் ஆதிக்கச் செயல்களையும் பதிகிறாள்.

தன் முயற்சியால் கேரளக் காவல் துறையில் காவலராகப் பணி நியமனம் பெறும் வினயா, அவ்விடத்திலும் பெண் காவலர்கள் நடத்தப்படும் நிலை குறித்தும் கவலைப்படுகிறாள். காவல் துறையில் பெண் காவலர்கள் சேலை அணிய வேண்டும் என்பது துவங்கி, காவல் பணியில் பெண் காவலர்களுக்கு என்று ‘மனிதாபிமான’ அடிப்படையில் காட்டப்படும் சலுகைகளையும் கூட எதிர்க்கிறாள். அச்சலுகைகளும் கூட பெண்களை ஒரு தரம் கீழே இருக்கச் செய்வதற்கான முயற்சிகளே என்பதையும் உணர்ந்து அவற்றைக் களைய முனைகிறாள்.

தான் காணும் பெண் சுதந்திரப் பறிப்புகளை நீக்க, கேரள காவல் துறைக்குள்ளேயே, துறை ரீதியாகப் போராடுகிறாள். இதனால் பணி இட மாற்றம், அவமானங்கள் என்று பலதையும் ஏற்கிறாள்.

துறைக்குள் நடத்தும் போராட்டங்களினால் பெரிய பலன் இல்லை என்று உணரும் நிலைகளில் சட்டத்தின் உதவியை நாடுகிறார் வினயா.

Vinaya Book

வினயாவின் முயற்சியால் கேரளக் காவல் துறையில் நிர்வாக ரீதியான பல மாற்றங்கள் நிகழ்கின்றன. பெண் காவலர்களின் உடை முதற்கொண்டு பல சமத்துவ உரிமைகள் கிடைக்கின்றன.

தனது போராட்டங்களினால் பல நண்பர்களியும் இழக்கும் வினயா, தனது குடும்பத்துக்குள்ளும் எதிர்ப்புகளைச் சந்திக்கிறார்.

மூன்று முறை தாற்காலிகப் பணி நீக்கம் மற்றும் ஒரு முறை நிரந்தரப் பணி நீக்கம் பெறும் வினயா, தனது போராட்டங்களை முடித்துக் கொள்வதாக நூல் முடிகிறது.

ஆனால், நிதர்ஸனத்தில் வினயாவிற்குப் பணி மீண்டும் கிடக்கிறது. 31-மே-2023 அன்று உதவி ஆய்வாளராகப் பணி ஓய்வு பெற்றுள்ள வினயா நிஜமான பெண்ணீயவாதியாகப் பரிணமிக்கிறார்.

மலையாளத்தில் எழுதப்பட்ட இந்த நூலை குளச்சல் மு. யூசூப் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

நூலை வாசித்த பின்னர், பெண் காவலர்களைக் காணும் யாருக்கும் வினயாவின் செய்திகளே நினைவிற்கு வரும் என்பது என் எண்ணம்.

நூல்: வினயா – ஒரு பெண் காவலரின் வாழ்க்கைக் கதை. ஆசிரியர் – வினயா. தமிழில் : குளச்சல் மு.யூசூப். எதிர் வெளியிடு.

Leave a comment