இன்று காமராஜரின் நினைவு நாள்.
காமராஜர் அரசு வழங்கிய மதிய உணவினால் மட்டுமே பள்ளிப் படிப்பை முடித்த 70-80 வயதினர் இன்றும் வாழ்கின்றனர். துக்ளக் குருமூர்த்தி சாட்சி.
நெய்வேலி நிலக்கரித் திட்டம் காமராஜர் ஆட்சியில் வந்தது. மத்திய அரசினால் செய்ய முடியாது என்று நேரு கூற, காமராஜ், வெங்கட்ராமன், சி.சுப்பிரமணியன், டி.டி.கிருஷ்ணமாச்சாரியார் முதலியோர் தலையீட்டால் மத்திய அரசுத் திட்டமாக உருவெடுத்தது நெய்வேலி திட்டம்.
தன்னளவில் ஊழல் அற்றவராக இருந்த காமராஜர் ஆட்சியில் இருண்ட காலங்களும் இருந்தன என்பதைக் கூர் வாசிப்பின் மூலம் வாசகர்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
தான் முதல்வராக வேண்டும் என்றும், ‘நான்-பிராமின்’ அமைச்சரவை அமைக்க வேண்டும் என்றும் முத்துராமலிங்கத் தேவரிடம் உதவி கோருகிறார் காமராஜர். வரதராஜுலு நாயுடு என்பாரின் வீட்டில் இந்தச் சந்திப்பு நடக்கிறது.
‘நீ பிரமராக ( முதல்வர் ) வேண்டும் என்று நினைக்காதே. காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைமை உன்னிடம் இருக்கட்டும். ஆட்சிக்கு நன்றாகப் படித்தவராகப் பார்த்து வைத்துக்கொள்’ என்று அறிவுரை சொல்கிறார் தேவர். காமராஜர் கேட்கவில்லை. பின்னர் ராஜாஜியின் அமைச்சரவையை அப்படியே எடுத்துக்கொண்டு ஆட்சி செய்கிறார்.
‘நான்-பிராமின்’ அமைச்சரவை அமைக்க வேண்டும் என்று எழுந்துவந்த காமராஜர், தான் ஆட்சிக்கு வந்ததும், ராமசாமி நாயக்கரின் மேல் தானாக முன்வந்து நடவடிக்கை எடுகக்வில்லை என்பதைக் கூர் வாசகன் நோக்க வேண்டும். ராமசாமி நாயக்கரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேரு இரண்டு முறை எழுதும் அளவில் நடந்தது ஆட்சி.
‘கீமாயணம்’ என்னும் பெயரில் நடந்த ராமாயணப் பழிப்பு நாடகத்திற்குக் காமராஜர் போலீஸ் பந்தோபஸ்து கொடுத்தார். முத்துராமலிங்கத் தேவரின் கடும் எதிர்ப்பிற்குப் பின்னர் நாடகம் தடை செய்யப்பட்டது.
பின்னர் நடந்த தேர்தல்களில் வெற்றி பெறக் காமராஜர் கள்ள நோட்டு அடித்தார் என்று தேவர் வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார். தன் மீது வழக்குத் தொடுக்கவும் கோரினார். ஆனால், காமராஜர் தேவரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பின்னர் கோவையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் காங்கிரஸுடன் தொடர்புடையவர். அன்னாளைய சட்டசபைப் பேச்சுகளில் இவற்றைக் காணலாம்.
ஆகவே, எந்த வரலாற்றுப் பாத்திரத்திற்கும் பிற முகங்களும் உண்டு என்பதை வாசகர்கள் உணர வேண்டும்.
இது, காந்தி, நேரு, படேல், நேதாஜி, ராமசாமி நாயக்கர் என்று பலருக்கும் பொருந்தும்.
ஹிந்து விரோதி என்று புதிய ஹிந்துத்துவர்களால் தூற்றப்படும் காந்தி தான், தன் சனாதனப் பற்றைக் கடைசி வரை விடவே இல்லை. ஆங்கில அடிவருடி என்று தூற்றப்படும் வீர சாவர்க்கர்தான் இதுவரை யாரும் அனுபவித்திராத சிறைக் கொடுமைகளை அனுபவித்தார். ஹிந்துத்துவன் எனில் காந்தியைத் தூற்ற வேண்டும் என்பதும், செக்யூலர் எனில் சாவர்க்கரைப் பழிக்க வேண்டும் என்பதும் வடிகட்டிய ஒற்றைபப்டை முட்டாள்தனம் தவிர வேறென்ன ?
கல்விக் கண் திறந்தார் காமராஜர் என்பது எத்தனை உண்மையோ, அத்தனை உண்மை அவர் ராமசாமி நாயக்கரிடம் சமரசம் செய்துகொண்டார் என்பதும். காந்தியின் மனசாட்சி என்று அறியப்பட்ட தியாகி ராஜகோபாலாச்சாரியார் தான் அண்ணாத்துரையுடன் கைகோர்த்தார் என்பது வரலாறு.
வரலாறு எப்போதுமே பல கோணங்களைக் கொண்டது. நமக்கு வேண்டியதை மட்டுமே பார்ப்பது அறிவார்ந்த வாசகன் செய்யும் செயல் அல்ல. வாசிக்காத காரணத்தால் தான் வைக்கம் வீரர் என்று யாரையோ கொண்டாடும் நிலையில் நம் மாநிலம் உள்ளது.
தீவிரமாக வாசியுங்கள். எதிர்க்கருத்துகளைத் தேர்ந்தெடுத்து வாசியுங்கள். அப்போது தான் நிதர்ஸனம் புலனாகும்.
#தேவர்#நேரு#காமராஜர்#kamarajarj#GandhiJayantii#காந்தி#பசும்பொன்
Leave a reply to Amaruvi’s Aphorisms Cancel reply