The side that is not spoken about, generally.

‘இந்தக் கதை எல்லாம் தெரிஞ்சு என்ன பண்ணப் போறோம் ?’ என்று நினைப்பவர்கள் மேலே வாசிக்க வேண்டாம். ஐ.பி.எல். மேட்ச் பார்க்கச் செல்லலாம்.

என்ன ? வாசித்தே ஆவேன் என்று வருகிறீர்களா ? சரி. அப்புறம் உங்கள் இஷ்டம்.

ஶ்ரீவில்லிபுத்தூர் சுந்தராஜ ஐயங்கார், தன் மகள் பத்மாசனியை 1900களிலேயே பள்ளிக்கு அனுப்பினார். அந்தப் பெண் எழுத்தறிவு பெற்றாள். மதுரை தமிழ்ப் பண்டிட் ஶ்ரீனிவாசவரதனை மணந்தாள்.

கல்வியறிவு இருந்ததால் பாரதியின் பாடல்களைப் பாடத்துவங்கினாள் பத்மாசனி. கணவனும் மனைவியுமாகச் சேர்ந்து பாரதியின் பாடல்களைத் தெருவெல்லாம் பாடினர். கணவன் கள்ளுக்கடை மறியல், தேசபக்தன் இதழில் எழுத்தர் என்று தேச சேவை செய்ய, பிரிட்டிஷ் அரசு அவரைக்கைது செய்கிறது. பத்மாசனி அம்மாள் தன் கணவருக்கு நெற்றித் திலகம் இட்டு சிறை செல்ல வழியனுப்புகிறார்.

கணவன் சிறைக்குச் சென்றால் என்ன என்று தானே களத்தில் இறங்குகிறார் பத்மாசனி. காந்தியடிகளின் ஆணைப்படி அன்னிய நாட்டுத் துணிகள் பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபடுகிறார் பத்மாசனி. அனேகமாக விடுதலைப் போருக்காகச் சிறை சென்ற முதல் தமிழ்ப் பெண்ணாக இருக்கலாம் என்று தெரிகிறது. ஊர்ஜிதம் இல்லை.

கணவனும் மனைவியுமாக தேச சேவை செய்த பத்மாசனிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்து ஓராண்டுக்குள் மரிக்கின்றன. தேசம் தேசம் என்று ஓடினால், குழந்தைகளை யார் பர்த்துக்கொள்வது ?

மூன்றாவதாகக் கருவுரும் பத்மாசனி, கதர் போராட்டத்தில் கைதாகிச் சிறை செல்கிறார். கரு கலைகிறது. நான்காம் முறை கர்ப்பம் தரிக்கும் பத்மாசனி, சுப்பிரமணிய சிவாவின் காவிரி நடைப் பயணப் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். சிவாவின் பாப்பாரப்பட்டியில் குழந்தை பிறந்து இறக்கிறது.

எப்போதுமே தேச சேவை என்கிற எண்ணத்திலேயே இருக்கும் பத்மாசனி அம்மாள், உப்பு சத்தியாக்கிரஹம், கதர் பிரச்சாரம் என்று பலதிற்காகவும் சிறையில் இருக்கிறார்.

வசதியானவரான பத்மாசனி அம்மாள், மூணாம்பட்டி என்னும் இடத்தில் ‘பாரதி ஆசிரமம்’ அமைக்க 10 ஏக்கர் நிலம் தானம் கொடுகிறார். கணவர் ஶ்ரீனிவாச வரதன், பாரதியார் பத்திரிக்கை நடத்தத் தேவையான போதெல்லாம் பண உதவி செய்துவந்தார் என்பது உபரித் தகவல்.

பத்மாசனி அம்மாள் ‘சகோதரிகள் சங்கம்’ என்று ஓர் அமைப்பை ஏற்படுத்தி, இன்னும் சில பெண்களுடன் சேர்ந்து, கதர் பிரச்சாரம், அன்னிய துணி பகிஷ்கரிப்பு, பாரதியின் பாடல்களைப் பிரபலப்படுத்துவது என்று மதுரையைக் கலக்கியுள்ளார்.

பெல்காம் காங்கிரஸ் மாநாட்டிற்குத் தமிழகத்தின் சார்பாகச் சென்று வீர உரை ஆற்றியுள்ள பத்மாசனி அம்மாள், மானாமதுரையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் பள்ளி நிறுவியுள்ளார்.

சென்னையில் கொடுங்கோலன் நீல் சிலை அகற்றும் போராட்டத்திற்கு நிதி வேண்டும் என்கிற நிலை வந்த போது, தனது நகைகளை விற்றுப் பணம் கொடுத்த பத்மாசனி அம்மாள், 1936ல் ஆஸ்துமா நோயால் காலமானார். நீல் சிலை நீக்கம், பார்ப்பன சதி என்று அன்றைய ஜஸ்டிஸ் கட்சி அரசு அறிக்கை விட்டு, தனது ஆங்கிலேய விஸ்வாஸத்தைக் காட்டிக்கொண்டது.

மதுரை ஹேப்ரங்கால் பள்ளிக்கு அருகில் ‘பத்மாசனி பார்க்’ என்று ஒன்று 70களில் இருந்தது. இன்று பழைய மர, இரும்புச் சாமான்கள் போட்டுவைத்துள்ளார்கள் என்று இணையத்தில் தெரிகிறது.

#azadikaamritmahotsav

Leave a comment