1987 வாக்கில் கர்நாடகத்தைச் சேர்ந்த மஹாபலேஸ்வர பட் என்னும் 22 வயது வேத விற்பன்னர் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளைச் சந்திக்கிறார். தான் வேத அத்யயனம் செய்து முடித்துள்ளதைத் தெரிவித்து அருளாசி வேண்டுகிறார்.
‘உனக்கு ஒரு வேலை வெச்சிருக்கேன்’ என்கிறார் சுவாமிகள்.
‘அடியேன். பால பெரியவா சொல்றதைச் செய்ய சித்தமா இருக்கேன்’ பட் சொல்கிறார்.
‘தமிழ் நாட்டுல வேதம் கத்துக் குடுக்கறயா?’ சுவாமிகள் கேள்வி.
‘பெரியவா உத்தரவு’ பட் பதில்.
‘நாளைக்கு வா. உனக்கு வழி கிடைக்கும்’ சுவாமிகளின் அருள் வடியும் முகத்தைப் பார்த்தவாறே நின்ற மஹாபலேஸ்வர பட் சுவாமிகளை விழுந்து வணங்கிவிட்டுச் செல்கிறார்.
பெரும் எதிர்பார்ப்புடன் மறுநாள் வருகிறார் பட்.
‘மஹாபலேஸ்வரா, இங்க வா. போளூர்னு ஒரு ஊர் திருவண்ணாமலை பக்கத்துல இருக்கு. அங்க ஒரு பாடசாலை இருந்தது. என்னோட பூர்வாஸ்ரம தகப்பனார் வேத அத்யாபகரா இருந்து வேதம் சொல்லிவெச்சார். நான் அங்க தான் அத்யயனம் பண்ணினேன். அப்பறம் அந்தப் பாடசாலை தண்டலம்ங்கற ஊருக்குப் போயிடுத்து. இப்ப போளூர்ல பாடசாலை இருந்த கட்டடம் கல்யாண மண்டபமா ஆயிடுத்து. நீ போய் அங்க வேத பாடசாலைய நடத்து. கட்டடத்துக்குச் சொந்தக்காரா கிட்ட சொல்லி, நான் பாடசாலை நடத்தறதுக்கு உபகாரம் பண்ணச் சொல்றேன்’ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசப் பேச மஹாபலேஸ்வர பட் கை கூப்பியபடி நின்றிருந்தார்.
அன்று சுவாமிகள் போட்ட விதை. இன்று வரை சுமார் 70 வேத விற்பன்னர்களை உருவாக்கியுள்ளது போளூர் சங்கர வேத பாடசாலை. அதன் அத்யாபகராக இன்றும் பணியாற்றிவருகிறார் வேத வித்வான் ஶ்ரீ மஹாபலேஸ்வர பட்.
பாடசாலையில் பயிலும் மாணவர்களுக்கு என்று கோசாலை ஒன்றும் இயங்கி வருகிறது.
அந்தக் கோசாலைக்கு என்று இன்று ஒரு பசுமாடும் கன்றும் வாங்கி வழங்கினேன். (சமீபத்தில் காலஞ்சென்ற என் தந்தையாரின் நினைவாக).
வேத பாடசாலையில் தற்சமயம் வித்யார்த்திகள் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. கொரோனாவிற்குப் பிறகான பாதிப்பு என்று மஹாபலேஸ்வர பட் தெரிவித்தார்.
இதை வாசிக்கும் நீங்கள், உங்கள் பிள்ளைகளை / பேரன்களை வேத அத்யயனம் செய்ய அனுப்புங்கள் என்று அறிவுரை சொல்ல எனக்கு அருகதை இல்லை. ஏனெனில், நான் வேதம் பயிலாமல் லௌகீகக் கல்வியே பயின்றவன். என் பிள்ளைகளும் அப்படியே. ஆகவே அறிவுரை சொல்ல முடியாது. ஆனால், வேதம் பயில முடியவில்லை என்றாலும், வேத பாடசாலைகளுக்கு என்னாலான உடல் உழைப்பையும், பொருளியல் சார்ந்த ஒருங்கிணைப்பு முயற்சிகளையும் செய்தே வருகிறேன். குறிப்பாகக் கோசாலை, வித்யார்த்திகளுக்கான உதவிகள், வேத வாத்தியார்களுக்கான அவசர உதவிகள் முதலியன.இதை வாசிக்கும் நீங்களும் அவ்வாறு செய்யலாம் என்று நினைக்கிறேன்.
வேதே ரக்ஷதி ரக்ஷித :


Leave a comment