The side that is not spoken about, generally.

ஶ்ரீராமர் 7000 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தார் என்று ஜெயஶ்ரீ சாரநாதன் என்பார் எழுதியுள்ளார். அதற்கான தரவுகள், உசாத்துணைகள் என்று பலதையும் சேர்த்து நூல் வடிவில் எழுதியுள்ளார். உபன்யாசகர் ஶ்ரீமான் துஷ்யந்த் ஶ்ரீதரும் இதனை ஒப்புக்கொள்கிறார் என்பது போல தெரிகிறது. தனது ‘ராமாயணம்’ நூலில் இதைச் சொல்கிறார் என்று அறிகிறேன். நிற்க.

இதனை ஒரு குறையாகச் சொல்கிறார்கள் சிலர். இதற்குப் பௌராணிக உபன்யாசகர்களையும் துணைக்குச் சேர்த்துக் கொள்கிறார்கள். முன்னணி உபன்யாசகர்கள் ஶ்ரீமான் வேளுக்குடி கிருஷ்ணன், ஶ்ரீமான் அனந்த பத்மநாபன் என்று பட்டியல் நீள்கிறது.

ஶ்ரீராமரின் காலத்தை அளவிட்ட செயலைக் கண்டிக்கிறார்கள். அளவிட்டவர்களை வசைபாடுகிறார்கள். அவர்கள் ஶ்ரீவைஷ்ணவர்கள் தானா என்றும் கேள்வி கேட்கும் விதமாகவும், தனிப்பட்ட தாக்குதல்கள் மூலமாகவும் சர்ச்சை சென்றுகொண்டிருக்கிறது என்று அறிந்து, சில காணொளிகளைப் பார்த்தேன். உண்மைதான் என்று தெரிந்துகொண்டேன். இது குறித்து என் கருத்து என்ன என்று சிந்தித்துப் பார்க்கிறேன்.

பௌராணிக மரபையும், ஆராய்ச்சி மரபையும் போட்டுக் குழப்பிக் கொள்வது சரியன்று என்பது என் நிலை.

பௌராணிக மரபு நம்பிக்கையின் அடிப்படையில் செயல்படுவது. இதைத் தற்கால ஆராய்ச்சி மரபின் எதிர்த்திசையில் வைத்து, மோதல் பார்வையுடன் செயல்படுவது தேவையற்ற வேலை.

மு.ராகவையங்கார் என்னும் அறிஞர் ‘ஆழ்வார்களின் கால நிலை’ என்றொரு ஆராய்ச்சி நூல் எழுதினார். இன்றளவும் சுட்டப்படும் நூல் அது. எழுதப்பட்ட போதே ஆன்மீக, பௌராணிக வர்க்கத்தால் எதிர்க்கப்பட்ட நூலும் அதுவே. அக்காலத்தில் பெரிது பிரபலாமாயிருந்த காஞ்சிபுரம் அண்ணங்கராச்சாரியார் என்னும் வைணவர் பௌராணிக மரபறிஞர் இந்த நூலைக் கண்டித்து எழுதியுள்ளார். சம்பிரதாய வைணவர்கள் அந்த நூலை ஏற்கவில்லை.

பொதுவாகவே சம்பிரதாய வைணவர்களுக்கு ஆழ்வார்களின், ஆசார்யர்களின் காலம் தேவைப்படுவதில்லை. அன்னார்கள் காட்டிய வழியே பிரதானம் என்னும் பார்வையுடன் செயல்படுபவர்கள் சம்பிரதாய வைணவர்கள். அவர்களுக்கு ஆழ்வார்களின் காலம், உடையவர் காலம் முதலியவை தேவை இல்லாத ஒன்று. ராகவையங்காரின் நூல் பற்றிப் பல சம்பிரதாய வைணவர்களுக்கு அறிமுகம் கூட இருப்பதில்லை. அவர்களுக்குத் தேவை ஆராய்ச்சி இல்லை. அனுஷ்டானம், ஆசார்யனிடம் பக்தி, பஞ்ச சம்ஸ்காரங்கள், பிரபத்தி முதலியவற்றின் வழி முக்தி என்பதே அவர்கள் வழி. ஆகவே யார் என்ன சொன்னாலும், எழுதினாலும் அவர்களுக்குப் பொருட்டில்லை. ஶ்ரீராமர் பல லட்சம் வருஷங்கள் முன்பு வாழ்ந்த பெருமான் என்பதே அவர்களுக்குப் போதுமானது. கோவில்கள் கூட தேவர்களால் கட்டுவிக்கப்பட்டவை என்பதே அவர்களில் பெரும்பாலோர் நம்புவது. அதற்கு மேல் தெரிந்துகொள்ள அவர்களுக்குத் தேவை இருப்பதில்லை.

ஆனால், தற்கால இளைஞர்களுக்குக் கேள்விகள் உள்ளன. யுகங்களின் நீளம் என்ன? நாம் எந்த யுகத்தில் இருக்கிறோம்? ஶ்ரீராமர் இருந்தார் என்பதை ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்? சேது பந்தனம் மனிதர்களால் கட்டப்பட்டது தான் என்பதை எப்படி நம்புவது? அறிவியல் சான்றுகள் உள்ளனவா? தற்போது நடப்பது எத்தனையான மன்வந்தரம் ? என்பன போன்ற பல கேள்விகள். மஹாபாரதம் பற்றியும், ஶ்ரீகிருஷ்ணர் பற்றியும் என்று நீள்கிறது இளைஞர்களின் கேள்விப்பட்டியல்.

இந்தக் கேள்விகள் புறந்தள்ள முடியாதவை. ‘நம்பு. ஆராய்ச்சி செய்யாதே’ எனில் ஒப்புக்கொள்ளும் மன நிலையில் இன்றைய ஜென் – ழீ (Gen Z) இளைஞர்கள் இல்லை. இணைய வசதி உள்ளதும், செயற்கை நுண் அறிவு சார்ந்த மென்பொருள்களில் பரிச்சயம் உள்ள இந்த இளைஞர்களிடம் ‘அது அப்படித்தான். நம்பு’ எனில் நம் சம்பிரதாயத்தைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை மட்டுமேஏற்படும் அபாயம் உள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஏற்கெனவே செக்யூலர் கல்வி என்கிற சட்டகத்தின் மூலம் நமது ஆன்மீக மரபுகளை இழந்துவிட்ட நிலையில், ஜெயஶ்ரீ சாரநாதன், துஷ்யந்த் ஶ்ரீதர் போன்றவர்களின் ஆராய்ச்சிகளே கூடாது என்று ஶ்ரீவைஷ்ணவ சமூகத்தில் பெரியவர்களாக மதிக்கப்படும் உபன்யாசகர்கள் சொல்வாரெனில், இளைஞர்கள் சம்பிரதாயப் பார்வைகளில் இருந்து இன்னமும் வெளியேறும் சாத்தியக்கூறு உண்டு என்று நான் நினைக்கிறேன்.

ஆகவே, ஶ்ரீராமனின் காலத்தை அளவிடும் முயற்சிகள், ஆராய்ச்சி நூல்கள், முதலியவை வளர வேண்டும். பலரும் இத்துறைகளில் ஈடுபட வேண்டும். நவீனக் கல்வி அளித்துள்ள ஆராய்ச்சி வசதிகளைக் கொண்டு நமது பண்பாட்டைப் பற்றிய மேலும் சிறப்பான ஆராய்ச்சிகள், பூமிக்குள் / கடலுக்குள் புதைந்துள்ள நமது பண்பாட்டுச் சின்னங்களை அறிவியல் கருவிகள் மூலம் கண்டறியும் வேலைகள் முதலியன நடைபெற வேண்டும். அழிக்கப்பட்டுள்ள நமது பண்பாட்டு வேர்களை மீட்டுருவாக்கம் செய்ய இளைஞர்கள் முன்வர வேண்டும்.

பௌராணிக முறையிலான பார்வை மற்றும் ஆராய்ச்சி பார்வை என்னும் இரு விழிகளாலும் நமது பண்பாட்டை நாம் ஆராய்ந்து மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும். ஆன்மீகத் தேடலுடன் வரலாற்றுத் தேடலிலும் ஈடுபட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

இல்லையெனில் ஆதிசங்கரரின் காலம் பொ.மு. 6000 என்றும், பூதத்தாழ்வார் வேறு யுகத்தைச் சார்ந்தவர் ( பல லட்சம் ஆண்டுகள் முன்னர்) என்றும் சொல்லிக்கொண்டிருப்போம். இதை ஆராய்ச்சிக்கு உட்படுத்துவது தவறு எனில், தமிழ்மொழி பல லட்சம் ஆண்டுகள் பழமையானது என்று கொள்ள வேண்டிவரும். அத்துடன் பைபிள் சொல்வது போல் உலகம் பொ.மு. 6000 அன்று உருவானது என்றும்.

உங்கள் கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள்.

3 responses

  1. muggi64 Avatar
    muggi64

    ஆண்டவனும் ஆராய்ச்சிக்கு உட்பட்டவர்தான் என்ற நிலைப்பாடு நல்லதே. கேள்வி கேட்காமல் நம்பு என்பதைவிட கேட்டு விடைபெறுவது நல்லது ஆனால் விடைகள் திருப்தி தரவில்லை என்றால் நம்பிக்கை பொய்க்கலாம். ஆண்டவன், வேண்டுபவருக்கே அனைத்தையும் தருவார் என்பதை விட்டு ஆண்டவனின் செயல்களுக்கு பொருள் விளங்கிக்கொள்வது கடினம் என்று தெரிந்தால் நமக்கு நல்லது ஆயினும் ஆராய்ச்சிகள் தொடர வேண்டும். எவ்வளவு தெரிந்து கொள்ள முடியுமோ அவ்வளவு தெரிந்து கொள்வது நல்லதே.

    Liked by 1 person

  2. VADHYAR R SOUNDERRAJAN Avatar
    VADHYAR R SOUNDERRAJAN

    EXCELLENT

    Like

  3. இறங்கி வருதல் – Amaruvi's Aphorisms Avatar

    […] 2024 வரை அடியேனைத் தெரியாது. பின்னர் ராமாயண சர்ச்சை குறித்த என் கட்டுரை, ‘பேசு தமிழா பேசு’ காணொளியில் என் […]

    Like

Leave a comment