சில மாதங்களுக்கு முன்னர் ஶ்ரீ ராமபிரானின் காலம் குறித்த சர்ச்சை நடந்துகொண்டிருந்த போது, வரலாற்று ஆராய்ச்சிகள் வேண்டும் என்று ஒரு கட்டுரை எழுதினேன். அதில் ஆழ்வார்களின் கால நிலை பற்றி 1929ல் மு.ராகவையங்கார் என்னும் அறிஞர் எழுதிய நூல் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். அந்த ஆராய்ச்சியை காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் ஒப்புக்கொள்ளவில்லை என்றும், புத்தூர் வக்கீல் கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் ஒப்புக்கொண்டார் என்று எழுதியிருந்தேன்.

புத்தூர் ஸ்வாமி என்று அழைக்கப்பட்ட வக்கீல் கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் ‘ஸுதர்சனர் பதில்’ என்று ஆராய்ச்சிக் கட்டுரைகளைக் கேள்வி பதில் வடிவில் எழுதிவந்தவர். ஶ்ரீவைஷ்ணவ சிம்ஹம் என்று போற்றப்பட்ட அவர் வைணவமே சங்ககாலச் சமயம், கம்பன் வைணவனே என்கிற ஆராய்ச்சி நூல்களையும் எழுதினார். வைணவ தத்துவங்களில் ஆழமான ஞானம் பெற்றிருந்த புத்தூர் ஸ்வாமி, விஷ்ணுவின் பரத்வத்தை நிலை நாட்டும் வகையில் பல கட்டுரைகளையும், மாற்று தரிசன மடங்கள், கல்கி, ஞானபூமி, தாய் போன்ற ஸ்தாபனங்கள் மற்றும் அரசியல்வாதிகள் வைணவம் தொடர்பான தவறான கருத்துகளைச் சொன்னால், அவற்றை ஆதாரப்பூர்வமாக எதிர்த்தும் எழுதிவந்தார். அவ்வகையில் அவர் எழுதியதே ‘ஸுதர்சனர் பதில்கள்’ என்னும் பத்திரிகை.
1929ல் மு.ராகவையங்கார் எழுதிய ‘ஆழ்வார்களின் கால நிலை’ நூலில் அனைத்து ஆழ்வார்களும் 5-8 நூற்றாண்டுகளுக்குள்ளேயே தோன்றினர் என்று நிறுவினார். இந்தக் காலக்கணக்கைப் புத்தூர் ஸ்வாமியும் ஒப்புக்கொண்டாரா என்பது அவரது கேள்வி-பதில் பத்திரிக்கைகளாலும், அவரே எழுதிய சில நூல்களாலும் புலப்படுகிறதா என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
ஶ்ரீவைஷ்ணவ குருபரம்பரையில் ஆழ்வார்களின் காலம் வேறு யுகங்களில் இருந்ததாக எழுதியுள்ளது என்பதை எண்ணத்தில் கொண்டு மேலும் தொடர்வோம்.
‘கடபயாதி சங்க்யை’ என்றொரு கணிதமுறை உள்ளது. இந்த முறையிலேயே ஶ்ரீவைஷ்ணவ குருபரம்பரை நூல்களில் ஆழ்வார்கள், ஆசார்யர்களின் காலம் தெரிவிக்கப்படுகிறது. கடபயாதி சங்க்யை என்பது ஒரு வாய்ப்பாடு போன்றது. ஒவ்வொரு உயிர் எழுத்துக்கும் ஒரு எண் கொடுக்கப்படுகிறது. மெய்யெழுத்து விலக்கப்படுகிறது. அதன் மூலம் முன்னோர்களின் காலம் குறிக்கப்படுகிறது. இவ்வகையில் எம்பருமானாரின் காலம், அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ள பொ.யு. 1017-1137 என்று வருகிறது. ஆனால், பொய்கையாழ்வாரின் காலம் துவாபர யுகம் 8,62,900 என்று வருகிறது. இதனை ‘ஸுதர்சனர் பதில் – 12வது சதகம்’ என்னும் இதழில் புத்தூர் ஸ்வாமி, வி.ராகவன் என்பார் கேட்டிருந்த கேள்விக்குப் பதிலாகத் தெரிவிக்கிறார். இதைச் சொல்லும் ஆசிரியர் ( புத்தூர் ஸ்வாமி), குருபரம்பரையில் உள்ளதை அப்படியே சொல்வதற்காகச் சொல்லியுள்ளார் என்று புரிந்துகொள்கிறேன். ஏனெனில், பின்னர் பார்க்கப் போகும் பல உதாரணங்களில் தற்கால ஆய்வு முறைகளை ஒட்டியே தனது கருத்தைத் தெரிவிக்கிறார்.
மேலே செல்லும் முன், ஆசிரியர் தான் வேத சாஸ்திரங்களிலும் தமிழ் இலக்கியங்களிலும் நிபுணத்துவம் கொண்டிருந்தாலும், நவீன விஞ்ஞானப் பார்வை கொண்டவர் என்பதை மீண்டும் ஒருமுறை எண்ணிக்கொள்ள வேண்டும். அதற்கு ஓரிரு உதாரணங்களைக் காண்போம்.
25-1-1990 அன்று வெளிவந்த ‘ஸுதர்சனர் பதில் – 10வது சதகம்’ பக்கம் 40ல், மணல்வாரி அம்மை நோய்க்கும் மகமாயிக்கும் தொடர்பில்லை என்பதை ஆணித்தரமாகச் சொல்கிறார்.
‘நம் நாட்டைப் பிடித்திருக்கும் சாபக்கேடுகளில் மகமாயிக்கும் அம்மை நோய்க்கும் தொடர்பு ஏற்படுத்துவதும் ஒன்று. அம்மை என்பது நோய் தவிர வேறல்ல என்று விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை. சென்ற தலைமுறையில் பல உயிர்களைப் பலி வாங்கிவந்த பெரியம்மை நோய், தடுப்பு மருந்துகள் செலுத்துவதன் மூலம் இன்னாட்டில் அடியோடு ஒழிக்கப்பட்டுவிட்டது. இந்த நோய் ஒரு தெய்வத்தின் கோபத்தினால் விளைவதாயிருந்தால் இது எப்படி சாத்தியமாகும்?’ என்று கேள்வி எழுப்புகிறார்.
மற்றுமொரு பதிலில், தேரழுந்தூர் என்னும் வைணவ திவ்யதேசத்தில் உள்ள பெருமாள் ஆமருவியப்பன். அந்த ஊரில் சிவபெருமான் பார்வதிக்குச் சாபம் கொடுத்து, அவளைப் பசுவாகப் பிறக்க வைத்தான். அந்தப் பசுவை மேய்த்ததால் பெருமாளுக்கு ஆமருவியப்பன் என்கிற பெயர் வந்தது என்று பரணீதரன் எனும் எழுத்தாளர் புதிதாக ஒரு தல வரலாறு எழுதியது பற்றி ஆசிரியர் காட்டமான பதிலில் ஒரு பகுதி : ’ இது போன்ற பொய்யான தலபுராணக் கதைகளே இம்மூன்று பத்திரிக்கைகளிலும் (விகடன், கல்கி, இதயம்) எழுதப்படுகிறது. இதனால் நம் தெய்வங்களுக்கு இழிவு ஏற்படுகிறதேயொழியப் பெருமை ஏற்படுவதில்லை…விஞ்ஞான உண்மைகளும் பகுத்தறிவு வாதங்களும் வளர்ந்துவரும் இவ்விருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இத்தகைய அபத்தக் கதைகளை நூற்றுக்கணக்கில் வெளியிட்டு, இவற்றையே இந்துமதமாக்கி, வேதாந்த ரஹஸ்யங்கள் நிறைந்த வைதிக மதத்தை இப்பத்திரிக்கைகள் சாகவடித்து வருவதைக் கண்டு அழுவதா, சிரிப்பதா என்று நமக்கு விளங்கவில்லை’.
நமது வைதிக மதம் நம்பமுடியாத பல கதைகளையும், பிற்காலத்தில் சுவை கருதிப் புனையப்பட்ட சிறு சிறு கற்பனைக் கதைகளையும் அறவே நீக்க வேண்டும் என்கிற ஆசிரியரின் மெய்ஞானத் தேடல் பார்வை புரியவேண்டும் என்பதற்காக மேலே கண்ட இரண்டு நிகழ்வுகளை எழுதினேன்.
தற்காலத்தில் கூட ஹிந்துக்களால் ஏற்க முடியாத, ஏற்க விரும்பாத நிகழ்வுகளையும் கூட புத்தூர் ஸ்வாமி எளிதாக எடுத்துக் கொள்கிறார். தனது ‘ஸுதர்சனர் பதில் – பதினோராவது சதகம் 23ம் பக்கத்தில் ஶ்ரீராமரும் பலராமரும் மாமிசம் சாப்பிட்டது பற்றிய ஒரு கேள்விக்கு ‘ஶ்ரீராமனும் பலராமனும் க்ஷத்ரியர்களாகையாலே அவர்களுக்கு மது மாம்ஸங்கள் சாஸ்திரத்தில் விதிக்கப்பட்டிருக்கையால் அவர்கள் அதைக் கைக்கொண்டார்கள்’ என்று எழுதுகிறார். ( பலராமனை க்ஷத்ரியராகச் சொன்னது சிறு தவறு என்று நினைக்கிறேன்). ஸ்வாமியின் இந்தத் திறந்த எண்ணமும் ஏற்றுக்கொள்ளும் மனோபாவமும் தெரிவதற்காக இதை எழுதினேன்.
இனி, ஆழ்வார்கள் காலம் குறித்த ஆசிரியரின் அனுமானங்கள் அடிப்படையிலான கருத்துக்களைக் காணலாம். அனுமானம் என்பது ஆங்கிலத்தில் Inference என்று அறியப்படும். அனுமானம் என்பது மெய்யியல் மரபில் உண்மையை நிறுவுவதற்குக் கையாளப்படுகின்ற வழிமுறைகளில் ஒன்றாகும். இது, ஊகம், உத்தேசம், கருதலளவை, உய்த்துணர்வு எனப் பொருள் கருதிப் பலவாறு அழைக்கப்படுகிறது. பின்னர் ப்ரத்யக்ஷம் எனும்படியான ஸ்வாமியின் நேரடியான கருத்து யாது என்றும் காண்போம்.
முதலில் ஆசிரியரது அனுமானம் வழியாக ஆழ்வாரின் காலம் பற்றிய அவரது கருத்தை அறிவோம்.
ஸுதர்சனர் பதில் – முதல் சதகம். பக்கம் 48. கேள்வி 62.
திருவள்ளுவரின் குறள் பல இடங்களில் திருவாய்மொழியின் சில சொற்கள் அப்படியே எடுத்தாளப்படுகின்றன. திருவள்ளுவர் வைஷ்ணவர் என்று நிரூபணமாகிறது அல்லவா? என்பது கேள்வி.
ஆசிரியர் பதில்: ‘சம்பிரதாய க்ரந்தங்களில் நம்மாழ்வார் கலியுக ஆதியில் அவதரித்தவர் என்று உள்ளது. ஆராய்ச்சியாளர்கள் பொயு.8 அல்லது 9 வது நூற்றாண்டில் அவதரித்தவர் என்கிறார்கள்…’ என்று தொடரும் பதிலில் வள்ளுவத்தில் வைணவக் கருத்துகள் உள்ளதைச் சொல்லிச் செல்கிறார். நம்மாழ்வாரின் காலம் 8-9 என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்வதை எதிர்க்கவில்லை. Matter of fact எனபது போல் கடந்துசெல்கிறார்.
ஸுதர்சனர் பதில் – முதல் சதகம் பக்கம் 46. கேள்வி 67.
அத்வைத, விசிஷ்டாத்வைத சம்பிரதாயங்கள் அவற்றின் மதக்குறிகள் பற்றிய கேள்விக்கான பதில்:
‘… தமிழ் இலக்கியங்களைப் பார்த்தாலும், மிகப் பழைய சங்க நூல்களில் திருமால் ஒருவனே வேத முதல்வனான பரம்பொருளாகப் பாடப்பட்டிருக்கிறான் என்பதையும், சிவன், முருகன் முதலான மற்ற தெய்வங்கள் அப்படிப் போற்றப்படவில்லை, சக்தியுடைய ஜீவர்களாக மாத்திரமே பாடப்படுகிறார்கள் என்பதையும், 8வது நூற்றாண்டுக்குப் பிற்பட்ட நாயன்மார்கள் காலத்தில்தான் திருமாலுக்குத் தாழ்வைச் சொல்லும் தாமஸ புராணக் கதைகளையும்…’
இவ்விடத்தில் நாயன்மார்கள் 8ம் நூற்றாண்டுக்குப் பிறகானவர்கள் என்பதைச் சொல்கிறார். ஆழ்வார்களும் நாயன்மார்களுமே பக்தி இலக்கியக் காலத்தை உருவாக்கியவர்கள் என்பதை அறிவோம். ஆழ்வார்கள் தோன்றி, பின்னர் நாயன்மார்கள் வந்தனர் என்பதாக மேலும் சில கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறார் ஆசிரியர். ஆழ்வார்களும் நாயன்மார்களும் ஓரளவு ஒரே காலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கொண்டால் ( சான்றுகளின்படி), ஆழ்வார்கள் வேறு யுகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதை எப்படி ஏற்றுக் கொள்வது ? இந்தக் கேள்வியில் ஆசிரியர் தெளிவாகவே இருக்கிறார். ஆழ்வார்கள் பொ.யு. 5-8க்குள் என்ற பொருள் வரும்படியே பேசிச்செல்கிறார் ஆசிரியர்.
ஸுதர்சனர் பதில் – நான்காவது சதகம் – 20-03-1981.
தில்லை திருச்சித்திரக்கூடம் விஷயமாக ‘விசிட்டர்’ இளங்கோவனைக் குறித்து ஸுதர்சனர் கேள்விகள் என்னும் பகுதியில் உள்ள சில வரிகள்:
‘திருமங்கையாழ்வாரும் குலசேகராழ்வாரும் தில்லை திருச்சித்திரக்கூடம் கோவிந்தராஜப் பெருமாளைப் பாடியிருக்கிறார் என்றும் நீரே எழுதியிருக்கிறீர், நீர் ஆதாரமாக எடுக்கும் மு.ராகவையங்கார் அவர்களே இவ்வாழ்வார்களை 7,8 நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்களாக நிர்ணயித்திருக்கிறார். இக்காலத்தில் சிறந்த ஆராய்ச்சியாளர்களாக விளங்கும் மு.அருணாசலம் இவ்வாழ்வார்களை 8வது நூற்றாண்டில் வாழ்ந்தவர்களாக 10-06-1980 ஹிந்துவில் பக்கம் 6ல் ‘History of Tamil Literature’ என்னும் தலைப்பில் வெளிவந்துள்ள விமர்சனத்தில் தெளிவாக எழுதியுள்ளார்.’
திருமங்கையாழ்வாரும் குலசேகராழ்வாரும் 7-8 நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்கள் என்னும் ஆராய்ச்சியைப் புத்தூர் ஸ்வாமி (ஆசிரியர்) எதிர்க்கவில்லை. மாறாக சுட்டுகிறார். எனவே, அவர் இவ்விரு ஆழ்வார்களும் 7-8 நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்கள் என்பதை ஏற்கிறார் என்றே கொள்ள வேண்டும். அன்னாளைய ஆய்வாளர் மு.அருணாசலத்தின் ஆய்வையும் ஏற்றுக்கொண்டு சுட்டுகிறார்.
ஸுதர்சனர் பதில் – ஐந்தாவது சதகம் – 24-04-1982 பக்கம் 92.
கேள்வி : முதலாழ்வார்களும் திருமழிசைப்பிரானும் ஒரே காலத்தில் வாழ்ந்தது போல் வேறு ஆழ்வார்கள் ஒரே காலத்தில் வாழ்ந்தனரா ? சென்னை-4 ல் இருந்து ராமராஜன் என்பவர் கேட்டுள்ளார்.
இந்தக் கேள்வியைப் புத்தூர் ஸ்வாமி எதிர்க்கவில்லை. முதலாழ்வார்களும் திருமழிசைப் பிரானும் ஒரே காலத்தில் வாழ்ந்தார்கள் என்பதை ஆசிரியர் ஒப்புக்கொள்ளும் விதமாகவே பதில் எழுதுகிறார்.
பதில்: ‘நம்மாழ்வாரது சீடரான மதுரகவியாழ்வார் அவர் காலத்தில் வாழ்ந்தார் என்பது வெளிப்படை. தொண்டரடிப்பொடியாழ்வார் தம் பூக்கொய்யும் ஆயுதத்துக்கு ‘அருள்மாரி’ என்று திருமங்கையாழ்வாரின் பெயரை இட்டார் என்றும், திருமங்கையாழ்வார் ஶ்ரீரங்கத்தில் திருமதிள் கட்டும் போது தொண்டரடிப்பொடியாழ்வாருடைய திருநந்தவனத்தை ஒதுக்கி மதிள் கட்டினார் என்றும் வரலாற்றுச் செய்திகள் காணப்படுவதால், தொண்டரடிப்பொடியாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் ஒரே காலத்தில் இருந்தார்கள் என்பது விளங்குகிறது. ‘அன்பர்தாள் தூளி நற்பாணன் நற்கலியன்’ என்று உபதேசரத்தினமாலையில் (மணவாள மாமுநிகள் இயற்றியது) ஆழ்வார்களுடைய ஆதாரக்ரமத்தை அருளும்போது திருப்பாணாழ்வாரைத் தொண்டரடிப்பொடிகளுக்கும், திருமங்கைமன்னனுக்கும் இடையிலே எடுத்திருக்கையாலே அவரும் அவர்களோடு ஒரே காலத்தில் வாழ்ந்திருக்கவேண்டும்.’
இத்தனை ஆழ்வார்கள் ஒரே காலத்தில் இருந்துள்ளனர் என்பதைப் புத்தூர் ஸ்வாமி ஒப்புக்கொள்கிறார்.
இதற்கிடையில், 11-08-1983ல் ‘ஸுதர்சனர் பதில் – ஆறாவது சதகம்’ நூலில் பிறிதொரு கேள்வியில் ‘கரவந்தபுரம் மாறன் காரி என்பவரே மதுரகவியாழ்வார் என்னும் கேள்வி ஒன்றிற்கு ஸுதர்சனர் தன் பதிலில் ‘டாக்டர்.கிருஷ்ண்ஸ்வாமி ஐயங்காரும் நம்மாழ்வார் காலத்தை ஏழாம் நூற்றாண்டுக்குள்ளாகவே அடைக்க வேண்டும் என்று கூறுகிறாரேயொழிய எட்டாம் நூற்றாண்டுக்குக் கொண்டுபோகவில்லை. இவற்றையெல்லாம் நடுநிலை நின்று நோக்கினால் கரவந்தபுரம் மாறன்காரி மதுரகவியாழ்வாராக இருக்க முடியாது என்று விளங்கும் ‘ என்கிறார்.
ஆக, நம்மாழ்வார் மிஞ்சிப் போனால் 8ம் நூற்றாண்டாக இருக்க வாய்ப்புள்ளதைப் புத்தூர் ஸ்வாமி மறுக்கவில்லை. 7-8 என்பதை ஒப்புக்கொள்கிறார். அதனினும், குருபரம்பரையில் உள்ள கால அளவுகளை அப்படியே ஏற்க வேண்டும் என்கிற குருட்டுப் பார்வையை விலக்கிய ஆராய்ச்சி மனப்பான்மை தெளிவாகத் தெரிகிறது. நவீன ஆராய்ச்சியாளர்களுக்கு இருக்க வேண்டிய வெளிப்படைத் தன்மை + ஆராய்ச்சியைத் திறந்த மனதுடன் ஏற்கும் பக்குவம் பௌராணிக மரபில் வந்துள்ள ஆசிரியருக்கு இருப்பது ஆச்சர்யமான விஷயம். தற்கால ஆராய்ச்சியாளர்களுக்கே கூட இல்லாத பண்பு இது.
ஸுதர்சனர் பதில் – ஏழாவது சதகம் – 1983. பக்கம் 17.
ஶ்ரீரங்கம் ஶ்ரீனிவாசன் என்பார் ‘ இந்துமதம், ஹிந்துமதம் என்று இன்று வழங்கப்படும் மதத்தின் ஆதிகாலநிலையையும் பரிணாம வளர்ச்சிகளையும் விளக்க வேண்டுகிறேன்’ என்றொரு கேள்வி கேட்கிறார்.
அதற்கு ஸுதரசனர் நீண்டதொரு பதிலை அளிக்கிறார். சங்ககாலத்தில் ( தொல்காப்பியம், பரிபாடல் முதலிய இயற்றப்பட்ட காலத்தில்) வைணவமே தமிழர் சமயமாக இருந்தது, திருமால் ஒருவனே பரம்பொருளாகக் கொள்ளப்பட்டான் என்பதை நிறுவுகிறார். ‘முக்கோற்பவர்கள்’ என்னும் யோகியர் ( மூன்று கோல்களை உடையவர்கள், த்ரிதண்டம் என்று வைணவ சந்யாசிகள் வைத்திருப்பது ) வைணவ மதத்தைப் பரப்பினார்கள் என்று சொல்லிவிட்டு, பௌத்தம், ஜைனம், நையாயிகம், வைசேஷிகம், சாங்க்யம், யோகம் முதலான அவைதிக மதங்கள் தோன்றி, வைதிக மதத்தின் மேல் பலவகையான ஆக்ஷேபங்களை எழுப்பின என்றும், பாதராயணர் என்னும் வேதவ்யாஸர் தனது ப்ரம்ஹசூத்ரத்தில் அவர்களுக்குப் பதில் உரைத்தார் என்கிறார்.
பின்னர் வேதவ்யாஸரின் சிஷ்யரான போதாயனர், ப்ரம்ஹசூத்ரத்திற்கு வியாக்யானம் எழுத, அவருக்குப் பின்னர் டங்கர், த்ரமிடர் முதலியோர் இதனைப் பிரச்சாரம் செய்தனர் என்கிறார். த்ரமிடர் தமிழகத்தில், சங்ககாலத்தில் இருந்தவர் என்பதையும் சொல்கிறார்.
மேலும் ‘சங்க நூல்களில் முக்கோற்பவர்களைப் பற்றிப் பேசப்பட்டிருப்பதும், விஸிஷ்டாத்வைத ஶ்ரீவைஷ்ணவ மதமே அனைவராலும் ஏற்கப்பட்டிருப்பதும் இதற்குச் சான்று. சங்ககாலத்திற்குப் பிறகு பாரத தேசம் முழுவதும் பௌத்தமும், ஜைனமும் தலையெடுக்கத் தொடங்கின. ஆழ்வார்கள் தமது திவ்யப் பிரபந்தங்களில் அவற்றைக் கண்டித்திருப்பதும், பின்பு தோன்றிய ஆதிசங்கரர் முதலான மதாச்சார்யர்களும், சைவ நாயன்மார்களும் அவற்றைக்( பௌத்த, ஜைன ) கண்டித்திருப்பதிலிருந்தும் இதை உணரலாம்.’
ஆக, சங்ககாலத்தில் திருமால் வழிபாடு இருந்தது. பின்னர் பௌத்த, சமண மதங்கள் தோன்றின. பின்னர் வந்த ஆழ்வார்கள் இவற்றைக் கண்டித்து, பிரபந்தங்கள் இயற்றினர். எனவே, ஆவார்கள் வேறு யுகத்தில் இந்தவர்கள் அல்லர். சங்ககாலத்திற்குப் பிற்பட்டவர்கள். அவர்களுக்குப் பின்னர் ஆதிசங்கரர் தோன்றினார் ( 8ம் நூற்றாண்டு). புத்தூர் ஸ்வாமி சொல்வது : ஆழ்வார்கள் அதிகப்படியாக 8ம் நூற்றாண்டுக்குள் இருந்திருக்கிறார்கள் என்பதே.
ஸுதர்சனர் பதில் – ஒன்பதாவது சதகம். 1987. பக்கம் 47.
கலிஃபோர்னியாவில் இருந்து ராமர், கிருஷ்ணர், ஆதிசங்கரர் முதலியோரின் காலம் குறித்த ஆராய்ச்சி வந்தது. அதைப்பற்றிய ஒரு கேள்விக்கு ஸுதர்சனர் , ‘ஆதிசங்கரர் பொ.யு.8வது நூற்றாண்டில் இருந்தார் என்று பெரும்பான்மையான ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.. ஆதிசங்கரர் ஸ்தாபித்ததாகக் கூறப்படும் நான்கு மடங்களும் இக் கால நிர்ணயத்தை ஒப்புக்கொள்கின்றன..’ என்கிறார். ஆக, ஆதிசங்கரர் காலம் 8ம் நூற்றாண்டு என்று ஆய்வாளர்கள் சொல்வதை ஸ்வாமி ஏற்கிறார். ஆராய்ச்சி மனப்பான்மை வெளிப்படுகிறது என்பதற்காகவும், முன்னர் சொன்ன ஆதிசங்கரர் காலம் அதற்கு முந்தைய ஆழ்வார்கள் காலம் பற்றிய தெளிவிற்காக இதைச் சொல்கிறேன்.
ஸுதர்சனர் பதில் – பத்தாம் சதகம். 25-01-1990. பக்கம் 122.
‘.. ஆதிசங்கரர் பிறந்தது எட்டாவது நூற்றாண்டில் என்று ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் இசைகிறார்கள். .. சிருங்கேரி, துவாரகா, பூரி, ஜ்யோதிர்மடம் என்னும் நாலு மடத்தினரும் இவ்வுண்மையை இசைகின்றனர்… தமிழ் நாட்டில் எட்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட சங்க நூல்கள், திருக்குறள், சிலப்பதிகாரம் முதலான நூல்களில் பல மதக் கொள்கைகள் எடுக்கப்படுகின்றன. அவற்றில் அத்வைதமதம் காணப்படவில்லையாகையால் ஆதிசங்கரர் தோன்றியது அந்நூல்களுக்குப் பிறகே என்பதை உறுதியாகச் சொல்லலாம்… ஆதிசங்கரருக்கு முன் இருந்த ஆழ்வார்களும், முன்னும் பின்னும் இருந்த நாயன்மார்களும்..’
நமது நோக்கம் ஆதிசங்கரர் காலைத்தை நிர்ணயம் செய்வது அன்று. ஆனால் அதன் மூலம் ஆழ்வார்களின் காலம் பற்றிப் புத்தூர் ஸ்வாமியின் திருவுள்ளம் யாது என்பதை அறிவதற்காக ஆதிசங்கரர் பற்றி அன்னார் எழுதியதைக் காட்ட வேண்டி இருக்கிறது. ஆதிசங்கரருக்கு முன்னர் ஆழ்வார்களும், முன்னரும் பின்னரும் நாயன்மார்களும் வாழ்ந்தார்கள் என்கிறார் ஆசிரியர்.
ஸுதர்சனர் பதில் – பதினொன்றாவது சதகம். பக்கம் 59
‘சங்ககாலத்தில் சைவ வைணவ ஒற்றுமைக்கு வித்திட்டிருக்கிறார்கள்’ என்பது பற்றிய கேள்விக்குப் பதில் அளிக்கையில் புத்துர் ஸ்வாமி சொல்வது :’ … ஆனால், சங்ககாலத்திற்குப் பிற்பட்ட ஆழ்வார்கள் நாயன்மார்கள் பாடல்களுக்கும், இந்தச் சங்ககாலச் சான்றோர்களின் பாடல்களுக்கும் சில முக்கியமான வேற்றுமைகள் சங்க நூல்களைக் கூர்ந்து ஆராய்வோருக்குப் பளிச்செனப் புலப்படுகிறது..’
சங்ககாலம் என்பது தொல்காப்பியம் எழுதப்பட்ட காலம் என்பதும் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதும் நாம் அறிந்ததே (ஸ்வாமியும் ஒப்புக்கொள்கிறார். படங்களில் உள்ள சான்றை நோக்குக). ஆக, ஆழ்வார்கள் காலம் என்பது பொ.யு.5-6ல் இருந்து பொ.யு. 8-9 வரையில் இருந்திருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துகிறது.
ஸுதர்சனர் பதில். பனிரண்டாவது சதகம் 1996.
ஆற்காடு இளவரசர் முகமது அப்தல் அலி என்பார் திருவரங்கக் கோவில் இடம் ஆற்காடு நவாபுகள் கொடுத்ததே என்று 16-11-1995 அன்று குமுதம் இதழில் பேட்டியளித்தார். இதை மறுத்து, புத்தூர் ஸ்வாமியின் பதிலில் சொல்வது :
‘அகநானூறு 137ம் பாடலில் திருவரங்கத்தில் பங்குனித் திருவிழா நடப்பதைப் பற்றிய குறிப்பு உள்ளது. இதிலிருந்து திருவரங்கம் பெரியகோவில் 2000 ஆண்டுகளுக்கு முன்பே நிர்மாணிக்கப்பட்டது என்பது விளங்குகிறது..
இது குறித்து ‘திருவரங்கன் உலா எழுதிய ஶ்ரீவேணுகோபாலனைக் கேட்டபோது :
‘சங்கத்தின் அகநானூறு இதைப் ( ஶ்ரீரங்கம் கோவிலை) பாடுகிறது. சிலப்பதிகாரம் அரங்கத்தைக் குறிக்கிறது. ஆழ்வார்கள் ஒருவர் (மதுரகவி) நீங்கலாக அனைவரும் திருவரங்கத்தைப் பாடியிருக்கிறார்கள். இந்த ஆழ்வார்களின் காலம் முதலாம் நூற்றாண்டில் இருந்து ஏழாம் நூற்றாண்டு வரை…’
இதன் மூலம் ஆழ்வார்களின் காலத்தை, சங்ககாலத்திற்குப் பின்னான 8ம் நூற்றாண்டுக்குள் என்று புத்தூர் ஸ்வாமி ஒப்புக்கொள்கிறார் என்பது நிதர்ஸனமாகத் தெரிகிறது.
அந்த இதழிலேயே, புத்தூர் ஸ்வாமி அவர்கள் 24-08-1994ல் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் ‘ஆசார்யர்களின் சமுதாயச் சிந்தனைகள்’ என்னும் தலைப்பில் ஆற்றிய உரையும் இடம்பெற்றுள்ளது. அதில் சில பின்வருமாறு :
‘இரண்டாயிரம் வருடங்களுக்கு முற்பட்ட பரிபாடல் முதலான சங்ககாலத் தமிழர் கண்ட வைதிக மதமாக விளங்கும் வைணவம் பிற்காலத்தில் ஆழ்வார்களால் வளர்க்கப்பெற்று, அவர்கள் காலத்துக்குப் பின் 9-ம் நுற்றாண்டில் வாழ்ந்த ஶ்ரீமந் நாதமுனிகள் ஈறாக..
… ஆழ்வார்கள் காலத்தில் சிறுதெய்வங்களை வணங்கிவந்தவர்கள் தங்கள் தெய்வமே பரம்பொருள் என்று வாதிடும் நிலை விளைந்துவிட்டது. சங்க காலத்தில் நிலவிய சமயத் தெளிவு ( வைணவம் ) நீங்கி, சமயக் குழப்பம் மிகுதியாகிவிட்டது… இந்நிலைக்கு முக்கிய காரணம் நரபலியையும் , உயிர்ப்பலியையும் கேட்கும் சிறுதெய்வ வழிபாடே என்றுணர்ந்த ஆழ்வார்கள் ‘ஓ ஓ உலகினதியல்வே படைத்திடந்துண்டு உமிழ்ந்து அளந்து தேர்ந்து உலகளிக்கும் முதற்பெருங்கடவுள் நிற்ப.. கொல்வன முதலா அல்லன முயலும்’ முதலிய பாசுரங்கள் மூலம் தீய ஒழுக்கங்களுக்குக் காரணமான சிறுதெய்வ வழிபாட்டை விலக்கும்படியும், பெரும் தெய்வமான திருமாலையே வழிபடும்படி மக்களுக்கு உபதேசித்துப் போந்தனர்..’
ஆக, சங்ககாலத்தில் முழுமுதற்கடவுளான திருமால் வழிபாடு இருந்தது, பின்னர் காபாலிகம் முதலான வழிபாடுகள் தோன்றின, பின்னர் வந்த ஆழ்வார்கள் மீண்டும் திருமால் வழிபாட்டைப் புகுத்தினர் என்பது தெளிவு. எனவே, சங்ககாலத்திற்குப் பின்னானவர்கள் ஆழ்வார்கள் என்பதைப் புத்தூர் ஸ்வாமியின் பதில்கள் மூலம் அறிகிறோம்.
ஸுதசனர் பதில் பதின்மூன்றாம் சதகம். பக்கம் 27.
‘நாத வைணவம்’ என்னும் நூல் பற்றிய விமர்சனத்தில், விநாயகர் பற்றிய ஒரு பார்வையச் சொல்லும் போது புத்தூர் ஸ்வாமி சொல்வது :
‘… விநாயகர் ஏழாவது நூற்றாண்டுக்கு முற்பட்ட எந்தத் தமிழ் நூலிலும் காணப்படவில்லை; அதனாலேயே ஏழாம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர்களான அனைத்து ஆழ்வார்களின் அருளிச் செயல்களிலும் காணப்படவில்லை. இது கொண்டே ஆழ்வார்கள் எவரையும் ஏழாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவராகக் கூற முடியாது என்று முன்னமே நாம் நிர்ணயித்திருந்தோம்…’
இவ்விடத்தில் புத்தூர் ஸ்வாமி, ஆழ்வார்களின் காலத்தைப் பற்றிய தனது தீர்மானமான கருத்தைச் சொல்கிறார். ஆங்கிலத்தில் Boundary Conditions என்பர். இந்த இடத்தில் 7ம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர்களான ஆழ்வார்கள், 7ம் நூற்றாண்டுகளுக்குப் பிற்பட்டவராகக் கொள்ள முடியாது என்கிறார். ஆழ்வார்களின் காலத்தைத் தெளிவாக உரைக்கிறார்.
இதுவரை புத்தூர் ஸ்வாமியின் பதில்களின் மூலம், ஆழ்வார்கள் காலம் பற்றிய உள்ளக்கிடக்கையைக் கண்டோம்.
தற்போது ஸ்வாமியின் நேரடியான கருத்தைப் பார்ப்போம். (ப்ரத்யக்ஷம்)
சிலம்புச்செல்வர் ம.பொ.சி. தனது பேச்சுக்களின் மூலம் கம்பன் சைவனே என்று நிறுவ முயன்றார். ஆனால் அதை மறுத்து, புத்தூர் ஸ்வாமி ‘சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம்’ என்ற அருமையானதொரு நூலை இயற்றினார். அந்த நூலை ம.பொ.சி.யால் மறுக்க முடியவில்லை என்பது வரலாறு.
அந்நூலில் ஆழ்வார்கள் காலத்தையும், குறிப்பாக, முதலாழ்வார்கள் காலத்தையும் தீர்மானமாகச் சொல்கிறார். பகுதி : ‘சங்ககாலத்திற்குப் பின் சமயநிலை’
‘… சிலப்பதிகார காலத்தையொட்டி அவதரித்த முதலாழ்வார்களின் திருவந்தாதிகளிலும், திருமழிசையாழ்வாரின் இரு நூல்களிலும் சைவம், சமணம், பௌத்தம் என்னும் இம்மதங்கள் வேதத்துக்குப் புறம்பானவை என்று கண்டிக்கப்படுகின்றன.’
மேற்சுட்டிய பகுதியில் சிலப்பதிகாரக் காலமான 5ம் நூற்றாண்டில் முதலாழ்வர்கள் வாழ்ந்தனர் என்பதை ஸ்வாமி ஒப்புக்கொள்கிறார். மற்றைய ஆழ்வார்கள் 7ம் நூற்றாண்டு வரை வாழ்ந்தனர் என்று ஸ்வாமி சொன்னதை முன்னரே கண்டிருந்தோம். அத்துடன், ஸுதர்சனர் பதில் – ஐந்தாவது சதகம் – 24-04-1982 பக்கம் 92ல் வெளியான கேள்வியில் திருமழிசையாழ்வாரும் முதலாழ்வார்களும் ஒரே காலத்தவர்கள் என்பதை ஸ்வாமி ஒப்புக்கொண்டிருந்ததைக் கண்டோம்.
இது தவிரவும், ‘வேதம் தமிழ் செய்த ஆழ்வார்களும் தமிழ் வேத பாஷ்யகாரரும்’ என்னும் நூலில் புத்தூர் ஸ்வாமி சொல்வது ( பக்கம் 3 ): ..’ கி.பி.ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து அவதரித்தவர்களாகக் கருதப்படும் ஆழ்வார்கள் காலத்திலேயே சைவமதம் பிரகாசமடையத் தொடங்கிவிட்டபடியால், சங்ககாலச் சான்றோர்கள் வழிவந்த ஆழ்வார்கள் அதை மறுத்துத் தம் திவ்வியப்பிரபந்தங்களில் திருமாலையே பரம்பொருளாகவும், ஸர்வாந்தர்யாமியாகவும் கூறும் விசிஷ்டாத்வைத ஶ்ரீவைஷ்ணவ மதமே வைதிக மதம் என்று நிலை நாட்டினர்.’
இவ்விடத்தில் ஸ்வாமி மீண்டும் சொல்வது : ஆழ்வார்கள் சங்ககாலத்திற்குப் பிற்பட்டவர்கள், ஐந்தாம் நூற்றாண்டில் இருந்து தோன்றியவர்கள் என்பதே.
கடபயாதி சங்க்யை மூலம் குருபரம்பரையில் பூதத்தாழ்வார் காலம் துவாபர யுகம் என்று குருபரம்பரையில் உள்ளதைச் சுட்டிய புத்தூர் ஸ்வாமி, குருபரம்பரை நூல்களில் உள்ளதற்கு எதிராக இருந்தாலும், பல இடங்களில் ஆராய்ச்சி மூலம் வெளியாகியுள்ள ஆழ்வார்களின் காலத்தை ஆதரித்து எழுதியிருப்பது, இறுதியாக முதலாழ்வார்கள் காலமே கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு என்று தனது நூலிலேயே சொல்லியிருப்பதன் வழியாக, நவீன ஆராய்ச்சியின் விளைவான ஆழ்வார்களின் காலக் கணக்கையே புத்தூர் ஸ்வாமி ஏற்றுகொண்டார் என்பது தெளிவு. இந்தக் காலக் கணக்கு, 1929 வெளிவந்த மு.ராகவையங்காரின் ‘ஆழ்வார்கள் கால நிலை’ நூலில் உள்ள காலக்கணக்கை ஒட்டியே உள்ளது என்பதை, விருப்பு வெறுப்புகள் இல்லாமல் நூல்களை வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் ஏற்றுக்கொள்வர்.
புத்தூர் ஸ்வாமியின் சதாப்தி ஆண்டு கொண்டாடப்படும் ( 2024) தருணத்தில் அந்த ஆசிரியப் பெருந்தகையின் உள்ளக்கிடக்கையை, அவரது வழியான ஆராய்ச்சிகள் மூலமாகவே அறிய முற்பட்டுள்ளேன். காலஞ்சென்ற பெருந்தகையின் அக்னிச்சுடர் போன்ற அறிவிற்கு அவர் வழியிலேயே அடியேனின் பாத காணிக்கை இக்கட்டுரை.
பிழை அடியேனுடையது; பெருமை புத்தூர் ஸ்வாமியினுடையது.
சுபம்.
தரவுகள்
- மணல்வாரி அம்மை பற்றி

2. தேரழுந்தூர் தல வரலாறு திரிக்கப்பட்டது பற்றி

3. திருக்குறள் நம்மழ்வார் பாசுரம் பற்றி..

4. முதலாழ்வார்களும் திருமழிசையாழ்வாரும்..

5. ‘விசிட்டர்’ இளங்கோவன் பதில் – ராகவையங்கார் குறிப்பு

6. முக்கோற்பவர்கள் – ஆழ்வார்கள் – ஆதிசங்கரர்

7. ஆதிசங்கரர் -ஆழ்வார்கள்

8.ஆழ்வார்கள் காலம் Boundary Condition

9. சங்ககாலம் யாது ?

10. ஆழ்வர்கள் காலம் பற்றி திருவரங்கன் உலா ஆசிரியர்

11. காபாலிகம் எதிர்த்த ஆழ்வார்கள் – அவர்கள் காலம்

12. இறுதி முடிவு

13. ப்ரயக்ஷம்

Leave a comment