‘Woman scorned’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். இது அதைப்பற்றிய பார்வை.
செல்வம், கல்வி, நுண்ணறிவு வாய்க்கப்பெற்ற பிராம்மணப் பெண், தனக்கு யாரும் இல்லை என்கிற பய உணர்வு வாழ்வில் ஏற்பட்டால் என்ன நடக்கும் ?
இருந்த செல்வம் தொலைந்தது. பெற்ற தாயே அறிவிற்சிறந்த மகளைத் திரைத்துறையில் நுழைக்கிறார். அது மட்டுமே வாழ்க்கை என்னும் எண்ணத்தை மகளின் மீது திணிக்கிறார். சுடர் மிகும் அறிவு பெற்ற, கல்வியைப் பெரிதும் விரும்புகிற பதின்ம வயதுப் பெண் வேறு வழியின்றித் தாயின் அடிச்சுவட்டில் திரைத்துறையில் நாயகியாக நடிக்கத் துவங்குகிறார்.
தாய் இறக்க, பெண் அனாதையாகிறாள்.
கல்வியைத் தொடர இயலவில்லை என்னும் ஆற்றாமை, தன்னைக் காத்துக்கொள்ள வழி அறியாமல் அந்தப் பெண் தன்னை விட முப்பது வயது மூத்த நாயகனால் பயன்படுத்திக்கொள்ளப்படுகிறாள். நாயகனின் அருகாமையால் மற்ற ஆண்களிடமிருந்து பாதுகாப்பு கிட்டுகிறது. புரியாத வயதில் அந்த நாயகனைத் தன் ஆதர்ச பாதுகாவலனாக நினைக்கிறாள். அவனின் பயன்பாட்டுக்கு உடன்படுகிறாள்.

நாயகன் : எம்.ஜி.ஆர். அபலைப் பெண் : ஜெயலலிதா.
வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் பயமும், எதிர்காலம் குறித்த கவலையும் கொள்ளும் ஜெயலலிதா என்னும் இளம் நடிகையின் மனதில் ஆண்கள் குறித்த எதிர்மறை எண்ணமே உருவாகிறது. பல சோதனைகளுக்குப் பின் எம்.ஜி.ஆரின் வாரிசு என்று உணரப்பட்டு, அவரது கட்சிக்குத் தலைவியாகி தமிழ் நாட்டின் முதல்வராகி, ஊழலில் திளைத்து, ஆண்களை அடிமையாக நடத்தி, பாரத நாட்டு அரசியலைக் கேலிக் கூத்தாக்கி, கருணாநிதியை அழிக்க வேண்டும் என்னும் எண்ணம் உந்து சக்தியாக இயங்க அனுமதித்து, கூடா நட்பால் உயிர் இழக்கும் ஜெயலலிதாவின் கதை.
விபரம் தெரியத வயதில், அதிக அறிவாற்றலுடன் கூடிய பெரும் அழகியாக ஒரு பெண் எந்த விதக் குடும்பப்பாதுகாப்பும் இல்லாதிருந்தால், அதிலும் அந்தப் பெண் தன்னைப் பல வகையிலும் துன்புறுத்தியவர்களைப் பழி வாங்கும் எண்ணம் கொண்டிருந்து, அந்தப் பெண் நாட்டை ஆளும் நிலைக்கு வந்தால் என்னவெல்லாம் நடக்க சாத்தியங்கள் உண்டோ அத்தனையும் ஜெயலலிதாவின் வாழ்க்கையை வாசித்தால் தெரிந்துகொள்ளலாம்.
ஆசிரியர் நொடிக்கு ஒரு தடவை ‘ரோசாப்பூ நிறம்’ என்று சொல்லி வெறுப்பேற்றாமல் இருந்திருக்கலாம்.
விருப்பம் இருப்பவர்கள் வாசியுங்கள்.
நூல்: ‘ஜெயலலிதா – மனமும் மாயையும்’. ஆசிரியர்: வாஸந்தி. காலச்சுவடு பதிப்பகம். விலை: ரூ. 195.
Leave a comment