குரோதி ஆண்டு, மார்கழி 13,14 ( திசெம்பர் 28-29, 2024 ) கம்பர் பிறந்த தேரழுந்தூரில் கம்பர் விழாவை நடத்தினோம். தேரழுந்தூர் கம்பர் கழகம் மிகுந்த பொருளியல் நெருக்கடியில் இருந்தாலும், நண்பர்கள், உறவினர்கள், கம்பர் ஆர்வலர்கள் என்று பலரது ஒத்துழைப்பாலும் நன்றாக நடந்தேறியது.
முதல் நாள் நிகழ்வின்போது ஆமருவியப்பன் கோவிலில் உள்ள கம்பர் சன்னிதியில் வழிபாடு செய்து, கம்பராமாயண காண்டங்களைக் கையில் ஏந்திக்கொண்டு ஊர்வலமாக வந்தோம். பின்னர் கம்பர் கோட்டத்தில் நிகழ்ச்சி துவங்கியது.
நாகப்பட்டினம் சின்மயா பள்ளியின் சுவாமி ராமகிருஷ்ணானந்தா அவர்களின் அருளாசி மற்றும் துவக்க உரையுடன் நிகழ்ச்சி துவங்கியது. முன்னர் கோவில்பட்டி கம்பன் கழகத்தின் பயிற்சி பெற்ற மாணவர்கள் கம்பராமாயண பாராயணம் செய்தனர். பின்னர் ஓய்வு பெற்ற ஆசிரியர் அரங்கராசன் ( 80களில் தேரழுந்தூர் கம்பர் கழகத்தில் இடையறாது பணி செய்தவர்) ‘கம்பன் காட்டும் ஒருமைப்பாடு’ என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
மதிய உணவிற்குப் பின் மதுரைப் பேராசிரியர் ஜகன்நாத் அவர்கள் ‘நற்குணக்கடல்’ என்னும் தலைப்பில் இராமனின் குணங்களைக் குறித்து உரையாற்றினார். நீண்ட, ஆழமான உரை.
மாலையில் புதுக்கோட்டை சம்ஸ்கார் பாரதியின் திருமதி. அனுராதா ஶ்ரீனிவாசன் அவர்களின் சீரிய வழிகாட்டுதலில் மருத்துவர் மதுமிதா குழுவினர் ‘கம்பன் நாட்டிய அரங்கம்’ என்கிற நிகழ்வில் கம்பராமாயணப் பாடல்களுக்கும், அருணாசலக் கவிராயர் பாடல்களுக்கும் பரதம் ஆடினர்.
பின்னர் ‘கம்பரின் கவிதைப் பூங்கா’ என்கிற நூல் வெளியீடு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து குத்தாலம் கம்பர் கழகம் நடத்திய பட்டிமன்றம் ( கம்ப ராமாயணம் பெரிதும் புகழ் பெறக் காரணம் : கருத்து வளமா ? கற்பனைத் திறனா ) நடைபெற்றது. நடுவராக குத்தாலம் ஜெ.நடராஜன் அமர்ந்து நல்லதொரு தீர்ப்பை வழங்கினார்.
29-12-2024 ஞாயிறு காலை கம்பன் கவி இசைச் செல்வன் இராமபத்திரன் அரங்கத்தில் இசைக்கவி ரமணன் தலைமையில் “கம்பனை ஏன் நான் பாடுகிறேன்?” என்னும் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. பின்னர் ‘கம்பன் இசை அரங்கம்’ என்கிற நிகழ்வில் புதுக்கோட்டை சம்ஸ்கார் பாரதியின் முனைவர் திருமதி.பா.சௌம்யாவின் (ஶ்ரீ லலித மீனாட்சி சங்கீத வித்யாசாலை) தலைமையில் அருமையான வாய்ப்பாட்டிசை நிகழ்ச்சி நடந்தது. கம்பன், பாரதி, அருணாசலக் கவிராயர் என்று பலரது பாடல்கள் இடம்பெற்றன.
அன்று மாலை ‘சீர் ஆரும் திறல் அனுமன்’ என்னும் தலைப்பில் எழுத்தாளர் ஜா.ராஜகோபாலனும், ‘கம்பன் காட்டும் தலைவன்’ என்னும் தலைப்பில் கம்பம் கவிஞர் பாரதனும் சிறப்புரை ஆற்றினர்.
பின்னர் நடைபெற்ற பாராட்டுவிழாவிற்குப் பிறகு சிங்கப்பூர் சௌ.வைஷ்ணவி லெட்சுமி ‘கம்பன் காட்டும் இயற்கை’ என்னும் தலைப்பில் பேசினார். அதன் பின்னர் புதுக்கோட்டை கம்பன் கழகச் செயலர் ரா.சம்பத்குமாரின் தலைமையில் ‘காப்பிய திருப்புமுனையாகப் பெரிதும் அமைந்த கதாபாத்திரம் எது?’ என்கிற தலைப்பில் ( கைகேயி, அனுமன், சூர்ப்பனகை, வீடணன்) சுழலும் சொல் அரங்கம் நடைபெற்றது. இரவு 9:15 வரை நடைபெற்ற இந்த நிகழ்வில் பெரும் திரளான மக்கள் அமர்ந்து பங்கெடுத்தது மனதிற்கு மகிழ்ச்சியை அளித்தது.
இந்த நிகழ்ச்சியில் பேச்சாளர்கள் சிலரால் பங்கெடுக்க முடியவில்லை.மற்றொருவர் வந்திருந்தும், நேர நெருக்கடி என்று சொல்லி, பேசாமல் சென்றார். கம்பன் பிறந்த தேரழுந்தூரில், கம்பன் சன்னிதியில் யார் பேச வேண்டும் என்பதைக் கம்பனே முடிவு செய்கிறான் என்பதை உணர்ந்துகொண்டோம்.
நிகழ்ச்சி நிரலில் கம்பராமாயண பாராயணம், இசை அரங்கம், நடன அரங்கம் முதலியவற்றுக்கான செலவை மத்திய அரசின் ‘தென்னகப் பண்பாட்டு மையம்’ ஏற்பதாக இருந்தது. ஆனால், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவு காரணமாக அரசு துக்கம் அனுஷ்டிப்பதால் செலவை ஏற்க இயலாது என்று தெரிவித்தது. கடைசி நேரத்தில் இந்தச் செலவுகளுக்கு நண்பர்கள் கைகொடுத்தனர்.
நிகழ்ச்சிக்கான அரங்கு, உணவு முதலிய ஏற்பாடுகளைத் தேரழுந்தூர் கம்பர் கழகச் செயலாளர் மு.ஜானகிராமன் திறம்படச் செய்திருந்தார். ஊர் மக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
பங்குபெற்ற அனைவருக்கும், உதவிய நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி.
புகைப்படங்கள் / காணொலி முதலியன தயாரானவுடன் வெளியிடுகிறேன்.

Leave a comment