இரா.முருகன் எழுதியுள்ள நாவல். தமிழில் மென்பொருள் (சாஃப்ட்வேர்) வல்லுனர்களைப் பற்றிய முதல் நாவல் என்று நூல் கூறுகிறது. 1995-2001 காலகட்டத்தில் நாவல் நிகழ்கிறது.
மாயவரம் ஐயங்கார் பையன் மென்பொருள் எழுதும் வேலையில் இருக்கிறான். லண்டன் செல்கிறான். மலையாள நாயர் பெண்ணை விரும்புகிறான். சென்னை திரும்புகிறான். நிறுவனம் மாறுகிறான். தாய்லாந்து செல்கிறான். அவ்வப்போது மென்பொருள் வேலை செய்கிறான். மாமிசம் சாப்பிடுகிறான். மது அருந்துகிறான். மாயவரத்தில் தன்னை மணக்க விரும்பும் ஐயங்கார் பெண்ணை நிராகரிக்கிறான். தாய்லாந்தில் வேலை செய்யும் போது அவனது குழுவில் உள்ள ஒருவனின் பாஸ்போர்ட் தொலைகிறது. பின்னர் விசா முடிகிறது. போலீஸ் பிடிக்கிறது. போலீஸ், கோர்ட் என்கிற நிகழ்வுகள். பின்னர் அமெரிக்கா செல்கிறான். தன்னுடன் தாய்லாந்தில் பணியாற்றிய கண்ணாத்தாள் என்னும் நகரத்தார் பெண்ணை மணக்கிறான். பின்னர் அவள் வேலைக்குப் போகிறாள். இவன் சமையல் வேலை செய்கிறான். ஏனெனில் மென்பொருள் வேலை போய்விடுகிறது. காலச்சூழல் : 2001 இரட்டைக் கோபுரத் தாக்குதல்.
தாய்லாந்தில் இருக்கும் போது தினமும் பெண்களின் உடல் வர்ணனைகள். ஐயங்கார் பையனுடன் படுத்துக்கொள்ள விரும்பும் தாய்லாந்துப் பெண். மது போதையில் இவர்களது தகாத உறவு. தாய்லாந்து களத்தில் பக்கத்துக்குப் பக்கம் பெண்கள் உடம்பைக் காட்டியபடியே இருக்கிறார்கள். பாத்திரங்கள் பேசிக்கொள்வதும் பெண்கள், உடலுறவு மட்டுமே. அனேகமாக இரவு விடுதிக்குச் சென்று ஆடைகள் அற்ற பெண்களைப் பார்ப்பது / பழகுவது பற்றியே பேசுகிறார்கள். செய்கிறார்கள்.
அவ்வப்போது சில மென்பொருள் செய்திகள். 1995-2000 வரை புழக்கத்தில் இருந்த விஷுவல் பேசிக், ரேஷனல் ரோஸ், ஏ.எஸ்.பி முதலிய மென்பொருள் நிரலிகள், தொழில் நுட்பங்கள் என்று ‘இது மென்பொருள் தொடர்பான கதை தான்’ என்று சொல்லிச் செல்கிறது. டேட்டாபேஸ் குறித்த பேச்சுகள் நிஜமானவை.

ஒரு புதிய துறை உருவாகி, இந்தியாவிற்குப் பல ஆயிரக்கணக்கான கோடி பணத்தை அள்ளித்தருகிறது. சோஷியலிச முட்டாள்தனத்தில் இருந்து வெடித்தெழுந்து இந்தியா சந்தைப் பொருளாதாரம் நோக்கிச் செல்கிறது. இந்த விஷயங்கள் ஒன்றும் பேசப்படவில்லை.
மென்பொருள் வல்லுனன் என்றாலே பெண் பித்தன், குடிகாரன், மாமிசம் சாப்பிடுவதை வெறுக்காத பிராமணன் என்றே இருக்க வேண்டும் என்று ஏதாவது நேர்த்திக் கடனா என்ன ? மார்புக்கச்சை, சில்க் உள்ளாடை என்று தாய்லாந்து முழுவதும் வருகிறது.
துறை சார்ந்து எத்தனையோ சொல்லியிருக்கலாம். ஆனால், நாவல் சொல்வது மேற்சொன்னவையே.
கோடிக்கணக்கான டாலர்களை அள்ளி வழங்கியுள்ள மென்பொருள் துறை பற்றித் தமிழில் வெளிவந்த முதல் நாவல் என்கீற பீடிகையுடன் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘மூன்று விரல்’ நிஜத்தில் செய்திருப்பது மென்பொருள் துறைக்குத் தங்களைத் தாரை வார்த்து, இரவு பகல் என்று உழைத்து, பல நோய்களை வாங்கிக்கொண்டு தங்களின் 50-60களில் உள்ள, தங்களின் இளமையைத் தொலைத்து வாழ்வைத் தேடிக்கொண்டிருக்கிற மென்பொறியாளர்களுக்குச் செய்துள்ள அநீதியே தவிர பிறிதொன்றுமில்லை.
இது என்ன மதிப்புரை ? இப்படி எழுத நீ யார் ? என்று கேட்கலாம். மேற்சொன்ன எந்தத் தப்பும் செய்யாமல் ஒழுங்கான ஐயங்காராக, கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர் என்று வேலை செய்து, தற்சமயம் (2025) சென்னையில் இதே மென்பொருள் துறையில் பணியாற்றும் அம்மாஞ்சி ஐயங்கார் என்பதால் எனக்கு இப்படி எழுதத் தகுதி உண்டு.
நூல்: மூன்று விரல். ஆசிரியர் : இரா.முருகன். வெளியீடு : கிழக்குப் பதிப்பகம்.
Leave a comment