ஆதீனக் கல்லூரியில் தமிழ் வாசிக்கும் போது தனது 14வது வயதில் தந்தையை இழந்தவன் புலவர் தேர்வில் மாநிலத்தில் முதலாவதாக வரவும் ஊர்ப் பள்ளியில் தமிழாசிரியர் பணி கிடைத்தது. குடும்பம் ஏழ்மையில் இருந்து எழத் துவங்கியது.
கம்பராமாயணம், பிரபந்தங்கள் என்று சரளமாக வரத்துவங்கிய அவனுக்கு சம்ஸ்க்ருதம் தெரியவில்லை என்பதால் வால்மீகி ராமாயணம், ஶ்ரீமத் பாகவதம் வாசிக்க இயலவில்லை. நாள்தோறும் பள்ளி வேலை முடிந்தவுடன் சம்ஸ்க்ருத பண்டிட் ஒருவரிடம் கற்றுக்கொள்ளத் துவங்க, விரைவில் சம்ஸ்க்ருத இலக்கியங்கள், காளிதாசன் என்று விரிந்தன. கூடவே மணிப்ரவாளமும்.
கம்ப ராமாயணத்தில் கரை கண்டது போல வால்மீகி ராமாயணத்திலும் பாண்டித்யம் பெற்று, இரண்டையும் கலந்து உபன்யாசங்கள் செய்யத் துவங்கி, நாராயணீயத்தில் நின்றார் தனது 30 வயதுகளில்.
இதற்கிடையில் எம்.ஏ,. பி.எட். முடித்தாயிற்று. 15 நூல்கள் தமிழில் எழுதியாயிற்று. ராமாயண உபன்யாசத்தில் தியாகராஜர் எப்படி வராமல் இருப்பார் என்பதால் முயன்று பல தியாகராஜ கீர்த்தனைகளைப் பாடும் அளவிற்குத் தெலுங்கு கற்றுக் கொண்டார். வயது 47.
55-வது வயதில் ‘அஷ்டப்பிரபந்தத்தில் பிரபந்தத்தில் ஆழ்வார்களின் தாக்கம்’ என்கிற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்ற பின், துளசி ராமாயணம் வாசிக்க முடியாமல் தவித்ததைக் கண்டு ஹிந்தி ஆசிரியர் வார இறுதிகளில் ஹிந்தி கற்றுக்கொடுத்தார். சம்ஸ்க்ருதம் தெரிந்ததால் ஹிந்தி எளிதாயிற்று. 57 வயதில் ஹிந்தியும் கைவரப்பெற்றவர் துளசி, வால்மீகி, கம்பன் என்று கலந்து ‘த்ரிவேணி ராமாயணம்’ என்கிற உபன்யாசங்கள் செய்யத் துவங்கினார். கபீர்தாசர், மீரா பஜன்கள் என்று ஆராய்ச்சி வேறு.
‘கன்னடத்துல தாஸர் கீர்த்தனைகள் இருக்கே. புரிய மாட்டேங்கறது’ என்று கன்னடம் தெரியாததை நினைத்து வருத்தம் அடைந்தவர் உபன்யாசத்திற்காகச் சில கீர்த்தனைகளைத் தெரிந்துகொண்டிருந்தார். இவ்வளவிற்கும் பிறகு தனது 66வது வயதில் 108 திவ்யதேசங்கள் பற்றிய பெரிய ஆராய்ச்சி நூலைத் தமிழில் எழுதினார். இது அவர் கடைசியாக எழுதிய நூல். எண்ணிக்கை 18.
மொழிகள் கற்க ஏழ்மையால் தடை விதிக்க முடியாது என்பதைத் தன் வாழ்வில் வாழ்ந்து காட்டிய தேரழுந்தூர் புலவர் இராமபத்திராச்சாரியார், தனது 70-வது வயதில் இறைவனடி சேர்ந்தார். (என் பெரியப்பா).
ஒரு மொழி ஞானம் பிறிதொரு மொழியைக் கெடுப்பதில்லை. மாறாக வளப்படுத்துகிறது. தேவை மொழிகள் மீதான காதல். பாரதியைப் போல்.
-ஆமருவி
Leave a reply to Usha Seshadri Cancel reply