The side that is not spoken about, generally.

23-03-2025 ஞாயிறு மாலை ஶ்ரீமான்.துஷ்யந்த் ஶ்ரீதர் அவர்களின் ‘திருப்புகழில் ராமாயணம்’ உபன்யாசத்தில் பங்கு கொண்டேன்.

பொதுவாகவே உபன்யாசங்கள், இலக்கியப் பேருரைகள் எனில் வலிந்து செல்வதுண்டு. சிறு வயதில் இருந்து இந்தப் பழக்கம். நெய்வேலி சத்-சங்கம் மணித்வீபத்தில் கீரன், வாரியார், ஜெயராம சர்மா என்று பலரது சொற்பொழிவுகளில் கழிந்த என் இளம் பிராயத்தை மீட்டெடுக்கும் விதமாகவே எந்த உபன்யாசத்தையும் விடுவதில்லை.

ஆனால், தற்காலத்தில் சிலரது உபன்யாசங்களால் மனம் வெதும்பி மீண்டும் பழைய உபன்யாசங்களையே கேட்பது என்று வைத்துக்கொண்டிருந்தேன். மறுபடியும் சேங்காலிபுரம், கீரன், வாரியார், வேளுக்குடி வரதாச்சார்யர் என்று கீறல் விழுந்த ரிக்கார்டுகளை மட்டும் கேட்பது என்று வைத்துக்கொண்டிருந்தேன். ஒலியின் தரம் குறைவாக இருந்தாலும், கருத்தில் குறைவு இருக்காது என்பதால்.

அப்போது புதிய புனலாக வந்து இறங்கினார் ஶ்ரீமான். துஷ்யந்த் ஶ்ரீதர்.

சம்பிரதாயச் சொற்கள் குறைவாகவும், அப்படியே இருந்தாலும் அதற்கு விளக்கம் கொடுத்தும், மீதமுள்ள சொல்லாடல்கள் எல்லாருக்கும் புரியும்படியும் பேசியபடி, உபன்யாச உலகில் புதிய பாய்ச்சலாக வலம் வந்ததைக் கவனித்தேன். Gen-Z, Gen-Alpha என்று 2000ற்குப் பிறகு பிறந்தவர்களின் எண்ணிக்கை இவரது உபன்யாசங்களில் தெரியத் துவங்கியது. ஏனெனில், இவர் அவர்களது பார்வையில் படும் சொல்லாடல்களைக் கொண்டு பேசுவதிலும் வல்லவராக இருக்கிறார். இந்தக் குழுவினரின் கண்களில் முக்கியத்துவம் என்று எவை படுகின்றனவோ, அவை தனது உபன்யாசங்களில் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறார்.

திருப்புகழில் ராமாயணம்

பொதுவாக, இம்மாதிரியான தலைப்பில் பேசுவது சம்பிரதாய உபன்யாசகர்களால் இயலாத ஒன்று. அதீதமான சம்பிரதாயப் பற்றைக் காண்பிக்கிறேன் என்று இம்மாதிரியான கலவைகளை சம்பிரதாய, ஆசாரவாத உபன்யாசகர்கள் தவிர்த்துவிடுவர். ஆகவே, இம்மாதிரியான தலைப்புகள் இலக்கிய மேடைகளுக்குச் சென்றுவிடும். அவ்விடத்தில் பக்தி என்பது இல்லாமல் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி என்பதால் இலக்கியச்சுவை, உவமை நயம், சமய நல்லிணக்கம் என்று வழக்கமான செக்யூலர் ஜல்லியடித்தல் நிகழ்ந்து, ரவா உப்புமாவிற்கு மோர்க்குழம்பு எவ்வளவு சுவை சேர்ர்க்குமோ அவ்வகையிலான சேர்த்தியில் கொண்டு நிறுத்திவிடும். ஆக, சம்பிரதாய பக்திச் சொற்பொழிவுகளில் இம்மாதிரியான தலைப்புகள் அரிது. இலக்கியச் சொற்பொழிவுகளில் இதை அவியல் ஆக்கி, ஊசச் செய்துவிடுவார்கள்.

நல்லவேளையாக சம்பிரதாயச் சொற்பொழிவாளரான துஷ்யந்த் ஶ்ரீதர், இந்தத் தலைப்பைக் கையில் எடுத்தார்.

திருப்புகழின் தோற்றம், அருணகிரிநாதர் இதை இயற்றும்போது அவர் கையாண்டுள்ள உத்திகள், பாடல்களில் வரும் ராமாயணக் காட்சிகள் என்று சொல்லி முடித்திருக்கலாம். அதுவே சுவையாக இருந்திருக்கும். ஆனால், துஷ்யந்த் ஶ்ரீதர் இவற்றைத் தவிரவும் ஸ்வாமி வேதாந்த தேசிகனின் ராமனைப் பற்றிய பார்வை, ஆழ்வார்களில் ராமனை அனுபவித்த ஆழ்வார்களின் பாசுரங்கள், அவற்றில் உள்ள பார்வைகள், அப்பார்வைகள் திருப்புகழில் ராமாயணப் பகுதிகளில் அப்படியே கையாளப்படும் விதம், தியாகராஜரின் கீர்த்தனைகளில் உள்ள இராம அனுபவத்தைத் திருப்புகழில் ராமாயணக் காட்சிப் பகுதிகள் ஒத்திருக்கும் தன்மை, முக்கியமாகக் கம்பனின் பார்வையும் திருப்புகழில் ராமாயணக் காட்சிகளில் கம்பனின் பார்வை இடம் பெறுவதும் என்று ‘Comparative Analysis’ என்கிற முறையில் காட்டிச் சென்றார்.

துஷ்யந்த ஶ்ரீதர் வெங்கடேச சுப்ரபாதத்தையும் விட்டுவைக்கவில்லை என்பதும் குறிப்பிடப்பட வேண்டியது அவசியம்.

அன்றைய தினம் இடம்பெற்ற சில சுவையான நிகழ்வுகளை, செய்திகளைக் காண்போம்.

முருகனுக்குக் ‘காங்கேயன்’ என்கிற பெயர் எதனால் வந்தது ? ‘ஸ்கந்தம்’ எனில் யாது ? குழந்தைப் பிறப்பில் ஏற்படும் நிகழ்வுகள், அவற்றின் விஞ்ஞானப் பார்வை, அவற்றுக்கான சம்ஸ்க்ருதச் சொற்கள், ஸ்வாமி தேசிகனின் குமாரசம்பவம் பாடல் தொகுதி, அதற்கும் முருகனுக்கும் உள்ள தொடர்பு என்று தகவல் மழையுடன் துவங்கியது சொற்பொழிவு. இத்துடன், சுக்ரீவனுக்கு ‘மஹா ராஜன்’ என்கிற பெயர், ‘பெருமாள்’ எனும் சொல் ஶ்ரீ ராமரையே குறிக்கிறது எனும் செய்தி, ஜடாயுவைப் ‘பெரிய உடையார்’ என்று குறிப்பிடுவது என்று பல வியப்பூட்டும் செய்திகள் வந்து குவிந்திருந்தன.

‘எந்தை வருக ரகு நாயக வருக’ எனும் திருப்புகழ்ப் பதிகத்தில் பத்துமுறை ‘வருக’ வருகிறதாம். அது திருமாலின் பத்து அவதாரங்களுக்கானதாம். ‘யஞ்ய சம்ரக்ஷணம்’ செய்ய வேண்டி விஸ்வாமித்ரன் அழைத்துச் சென்றது போல, ‘வேள்விக் காவல்’ செய்ய வந்து சேர்க என்று அருணகிரிநாதர் வேண்டுகிறார். வெங்கடேஸ்வர சுப்ரபாதத்தில் வரும் சில சொற்கள் மற்றும் நிகழ்வுகள் திருப்புகழில் இடம்பெறும் சுவை அருமையான பார்வை.

‘உந்தி இறைவன்’ என்பதற்கான விளக்கம், பிரும்மா அவ்விடத்தில் வரவேண்டிய அவசியம், ஜாம்பவானே பிரும்மாவின் அம்சமாக வந்த செய்தி முதலியனவும் சுட்டப்பட்டன.

ஶ்ரீவைஷ்ணவத்தின் பெரும் ஆசார்யரான ஆளவந்தார் ஶ்ரீரங்கம் பெருமாளைச் சேவித்த விதம், மேற்குப் பக்கம் வேகமாகவும், கிழக்குப் பக்கம் மெதுவாகவும் நடந்து சேவித்ததன் காரணம், இதற்கும் மஹாபாரதத்தில் துரியோதனன் திசை – அர்ஜுனன் திசை என்கிற பார்வைக்குமான தொடர்பு பற்றிய விளக்கம் சுவையானது.

தாடகை வதம், அது தொடர்பான ‘கொல் கிருபைக் கால்’ சொல்லாடல், அதனை ஆங்கிலத்தில் எப்படிச் சொல்கிறார்கள், ‘பொன் தாள்’ என்பதற்கான காரணம், அகலிகை சாப விமோசனம் என்று பரந்து விரிந்த சொற்பொழிவு அது.

ஆங்காங்கே கம்பனும் வந்து சென்றான். ‘மா மாதும் இளையோனும்’ என்னும் பதப் பிரயோகத்தின் மூலம் மஹாலக்ஷ்மி குறிக்கப்படுவது , சூர்ப்பனைக்கான சிறப்புச் சொற்கள் ( மூளி, மூர்க்ககுலத்தினி ), 1949ல் பெங்களூரு நாகரத்தினம்மா முயற்சியால் நிகழ்ந்த தியாக ராஜர் உற்சவங்கள், பஞ்ச ரத்தினக் கீர்த்தனையில் ராமன், ராமனுக்கும் தமிழகத்துக்குமான தொடர்புகள் என்று விரிந்து, விருந்து படைத்ததாக இருந்தது சொற்பொழிவு.

‘கன கன ருசிரா’ கீர்த்தனத்தை ஆராய்ந்த விதம் மனதிற்கு இனிமையாக இருந்தது என்பதை ஆணித்தரமானச் சொல்வேன். இந்த கீர்த்தனத்தைக் கொண்டு ‘Law of Diminishing Utility’ என்னும் பொருளியல் பார்வையைக் கொண்டு சேர்த்த விதம் நிச்சயமாக இளைஞர்களை ராமாயணத்தின் பால் கவர்ந்து இழுக்கக் கூடியதே. அத்துடன் தியாகராஜரின் கீர்த்தனைகளின் பக்கமும் ஈர்ப்பு ஏற்படும் என்பதும் உண்மையே.

‘கமலாலய சீதை’ என்று அருணகிரிநாதர் சீதையை மஹாலக்ஷ்மியே என்று குறிப்பிட்டது பற்றிய பேச்சு தேசிக சம்பிரதாயத்தை ஒட்டிய வைஷ்ணவப் பார்வையாக உணர்ந்தேன்.

வால்மீகி ராமாயணத்தில் சுந்தரகாண்டம் பகுதியில் நாடகீய மற்றும் கவித்துவப் பார்வைகள் பல உண்டு. அத்தனையும் 3000 பாடல்களில் வால்மீகி தெரிவிக்கிறார். ஆனால், வேதாந்த தேசிகன், ராகவேந்திரர் முதலானோர் ஒரே ஒரு ஸ்லோகத்தில் சுந்தரகாண்டத்தைக் கையாண்டது ஏன் என்னும் கேள்வி, அதற்கான மனதை உருக்கும் பதில் இதுவரை நான் எங்கும் கேட்டிராதது.

தமிழ்ப்பல்லாண்டு பாடிய தேசிகனின் ‘பரமபத சோபானம்’, அருணகிரி நாதர் காட்டும் சேது பந்தனம், ‘மாமாயன்’என்னும் சொல்லாடல், சங்கத் தமிழ்ப் பாடல்களில் ‘மாயோன்’ சொல்லாடல் என்று பன்முகப் பார்வையைச் சுவையாக அளிப்பதாக இருந்தது துஷ்யந்த் ஶ்ரீதரின் ‘திருப்புகழில் ராமாயணம்’ பேருரை.

நிகழ் அரசியல், கலாச்சார நையாண்டிச் சுட்டல்கள் போகிற போக்கில் வந்து விழுந்தது பேருரைக்கு அவ்வப்போது நெம்புகோல் கொடுத்துத் தூக்கியது போல் நான் உணர்ந்தேன்.

நிகழ்ச்சி முடிந்தபின், பிராமணர் அல்லாத கீழ் மத்திய தர நடுத்தர வயதுப் பெண்மணி ‘நீங்க சொல்ற பாதுகா சஹஸ்ரம் உபன்யாசம் யூடியூப்ல கேட்டுக்கிட்டு வரேன். ரொம்ப பயனுள்ளதா இருக்கு’ என்று நெகிழ்ச்சியுடன் சொன்னது துஷ்யந்த் ஶ்ரீதரின் வாக்கு வன்மைக்கு ஓர் எடுத்துக்காட்டு.

துஷ்யந்த் ஶ்ரீதர் தனது பேருரைகளில் ஆங்கிலம் கலக்கிறார் என்று ஆசாரவாதிகள் ஆதங்கப்படுவது போல் பேசுகிறார்கள். துஷ்யந்த் ஶ்ரீதர், பிற உபன்யாசகர்களை ஒப்பிடுகையில் இளையவர், ஆங்கில வழிக் கல்வியே பயின்றவர். செய்தியைக் கொண்டு சேர்க்க வேண்டும். அதற்கு மொழி ஒரு கருவி. அதில் ஆங்கிலமும் அடக்கம் என்பது என் பார்வை. அவரது சொற்பொழிவில், சம்ஸ்க்ருதம், தெலுங்கு, கன்னடம், மராத்தி என்று பல மொழிகளும் இடம்பெற்றன என்பதும் உண்மை. அவர் உபன்யாசத்தை எந்தவிதத்திலும் குறைவுபடுத்தவில்லை.

தமிழகத்துக்கும் ஶ்ரீராமபிரானுக்கும் தொடர்பே இல்லை என்கிற தீரா-விட கருத்தியலுக்கே முக்கியத்துவம் கொடுக்கும் ஊடகங்களின் வெச்சம் மட்டுமே படும் தமிழ் பேசும் இளைஞர் மத்தியில், தமிழ் நாட்டிற்கும் ஶ்ரீராமருக்குமான தொடர்பை எந்தெந்த வழிகளில் கொண்டு சேர்க்க முடியுமோ செய்ய வேண்டும். குறிப்பாக தமிழிலக்கியங்களில் ராமன் குறித்து. அதை ஶ்ரீமான்.துஷ்யந்த் ஶ்ரீதர் திறம்படச் செய்துவருகிறார், ஆங்கிலத்தின் துணையுடனும்.

Disclaimer / உண்மை அறிக்கை: ஶ்ரீமான்.துஷ்யந்த ஶ்ரீதர் அவர்களுக்கு ஜூலை 2024 வரை அடியேனைத் தெரியாது. பின்னர் ராமாயண சர்ச்சை குறித்த என் கட்டுரை, ‘பேசு தமிழா பேசு’ காணொளியில் என் பேட்டி என்று நடந்த பிறகு அவருக்கு இந்த எழுத்தாளனைத் தெரியும்.

–ஆமருவி (27-03-2025)

2 responses

  1. Ganesh Ayem Perumal Avatar

    அருமையான விமர்சனம். எங்கே இந்த நிகழ்ச்சி நடந்தது என குறிப்பிட்டிருக்கலாம்.

    Like

Leave a comment