‘மாமா இன்னிக்கி ஒரு நாள் அலாரம் தரேளா?’
தயங்கியபடி கேட்ட என்னை எரித்துவிடுவது போல் பார்த்தார் எலந்தப் பழ வீட்டுக்காரர்.
‘நாளைக்கு கார்த்தால 4 மணிக்கு எழுந்துக்கணும். பத்தாங்கிளாஸ் ஆரம்பிச்சுடுத்து’ மீண்டும் தயங்கியபடி சொன்னேன்.
ஒரு நிமிஷம் வெறித்துப் பார்த்தார்.
‘உங்கப்பன் ஒரு அலாரம் கூட வாங்கித்தர மாட்டாரா?’
என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் நின்றிருந்தேன்.
‘சரி. இன்னிக்கி வாங்கிண்டு போ’ என்றவர் கடிகாரத்தை எடுத்துவர உள்ளே சென்றார்.
‘வேண்டம் மாமா’ என்று சொல்லிவிட்டுத் திரும்பிவிட்டேன்.
‘ஏன்னா, அவனுக்கு ஒரு அலாரம் வாங்கித்தாங்கோ’
‘எம்பளது ரூபா ஆறதேடி. இந்த மாசம் கையில இல்லியே. சரி என்ன பண்ணலாம்னு பாக்கறேன்’ அப்பா சாயங்காலம் சொல்லிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது.
எங்கேயோ கடன் வாங்கி, பணம் புரட்டி அன்றிரவு வட்ட வடிவ அலாரம் அடிக்கும் கடிகாரம் வாங்கி வந்தார். இதற்காகவே உயிரைக் கொடுத்து படிப்பது என்று முடிவெடுத்து, என் மேஜையில் இப்படி எழுதினேன்:
‘ தெய்வத்தான் ஆதாதெனினும் ‘
1988 ஜூன் மாதம் , இந்திய அளவில் ஆங்கிலத்தில் முதலாவதாக வந்ததாக ‘ஹிந்து’ தெரிவித்தது. தூர்தர்ஷனில் பேட்டி, இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி என்று பரபரப்பானேன்.
‘என்ன சார் பையனுக்கு ராங்க்னு ஹிந்துல வந்திருக்கு போல்ருக்கே’ எலந்தப்பழம் அப்பாவைக் கேட்டது, ஒரு வாரம் கழித்து.
‘பெரியவா ஆசீர்வாதம்’ அப்பா சொன்னார்.
1930ம் ஆண்டு செய்த கடிகாரத்தை 2025ல் வாங்கி, ‘எம்பளது’ என்று பெயர் வைத்திருக்கிறேன்.

பார்ப்பதற்கு அப்பாதான் இல்லை.
—ஆமருவி
29-03-2025
Leave a comment