The side that is not spoken about, generally.

சனாதன தாசர் என்னும் கோவில் அர்ச்சகர், கடும் ஏழ்மையுடன் போராடும் தன் வாழ்க்கையினூடே, தன் நிலைக்கு ஏற்ப செய்துவரும் ஆத்ம விசாரத்தின் தொகுப்பாக அமைந்துள்ளது ‘யந்திர வாகனன்’ என்னும் சந்திரசேகர் ரத் எழுதியுள்ள ஒடிய மொழி நாவல்.

நாவலின் ஊடாக ஒடிய பிராம்மண மக்களின் பண்பாடு, பழக்க வழக்கங்கள் தெரியவருகின்றன. குறிப்பிட்ட விசேஷக் கிழமைகளில் ( வியாழக்கிழமை, திங்கட்கிழமை ) அந்தப் பிராம்மணர்கள் மீன் உண்பதில்லை. வங்காளப் பிராம்மணர்கள் மீன் உண்பதை நினைவுபடுத்துகிறது இந்த நிகழ்வு.

நாவலின் ஊடாக ஒடியப் பிரதேசத்தின் வறுமை காட்டப்படுகிறது. நாவலின் ஓட்டம் பிரிட்டிஷ் இந்தியாவில் துவங்கி, விடுதலை பெற்ற இந்தியத் தளம் வரை விரிகிறது. உலக யுத்தம், இந்தியச் சீன யுத்தம் குறித்த சொல்லாடல்கள் என்று நாவலின் காலம் காட்டப்படுகிறது.

யந்திர வாகனன்

நாவலின் முக்கிய கதாபாத்திரம் சனாதன தாசரின் மனச்சாட்சியே. அவர் அதனுடன் பேசுகிறார். அல்லது, அது அவரிடம் கேள்வி எழுப்புகிறது. அது கேட்காத கேள்விகளே இல்லை. ச்ராத்தம் அவசியமா? பிண்டம் வைப்பது ஏன்? ஆத்மா என்ன செய்கிறது? ஏழை மக்கள் உழைத்தே சாக வேண்டியது தானா ? உழைப்பே இறைவன் என்று சொல்லப்படுவது ஏழைகளை ஏழைகளாகவே வைப்பதற்காகவா ? பற்று இல்லாமல் வாழ முடியுமா ? பிள்ளைக் குட்டிகள் அதிகம் ஏற்படுவது நல்லதா இல்லையா ? மனித உறவுகளின் நிலையான தன்மை அற்ற நிலை. இறப்பினால் ஆத்மா குடும்பத்தையும், உறவினர்களையும் விட்டு அகன்றுவிடுகிறதா ?

ஏழ்மை குறித்த சுய பரிசோதனை தனி ரகம்.

மேற்சொன்ன ஆத்ம விசாரங்கள் தவிர, ஒடிய பிராம்மணக் குடும்பங்களின் நிலை, கல்வி கற்பதன் அவசியம், வயோதிகத்திலும் குழந்தைப் பேறு, குடும்ப உறுப்பினர்களுக்குள் ஏற்படும் சிறு பிணக்குகள், குடும்பச் சுமையைக் உறுப்பினர்கள் ஏற்பதும் ஏற்காததும் என்று யதார்த்த நிலைகளைக் காட்டிச் செல்கிறது நாவல்.

குடும்பத்தின் பொருளாதாரம் உயரவேண்டும் எனில் இடப்பெயர்வு அவசியமாகிறதே என்கிற ஆதங்கமும் மறைந்து நிற்கிறது என்பது இந்த நாவலின் வழியாக நான் பெற்றுக் கொண்ட அனுபவம். பிராம்மணர்கள் ( அனேகமாக அனைத்து சாதியினரும் ) இடம் பெயர்ந்துகொண்டே இருந்தால் தால் வாழமுடியும் என்கிற னிலை தற்காலம் வரை நிதர்சனமே.

இந்த உடல் இயந்திரம் போன்றது, அதை ஆத்மா இயக்குகிறது, ஆனகே நாம் அனைவரும் யந்திர வாகனர்களே என்கிற உண்மையைச் சனாதன தாசர் வாயிலாகச் சொல்லிச் செல்கிறது நாவல். புரி ஜெகன்னாதர் ஒடிய மக்களின் இதய நாயகன் என்பதை நாவல் சொல்லாமல் சொல்கிறது.

நாவல் கனமானது. மனதை உருக்கும் இடங்கள் உள்ளன. நாவலை வாசித்தவுடன் ஏதாவது கோவிலுக்குச் சென்று அமைதியாக அமர்ந்துவிட்டு வருவது மன நிலைக்கு நல்லது.

நூல்: யந்திர வாகனன். ஆசிரியர்: சந்திரசேகர் ரத். தமிழில் : பாலசுப்பிரமணியன். சாகித்திய அகாதெமி வெளியீடு.

Leave a comment