The side that is not spoken about, generally.

என்னென்ன கதைகள் சொன்னார்கள் ?

பிரபாகரன் வீரன், பயம் அறியாதவன், அறிவாளி, சாதுர்யம் மிக்கவன், உலகக் கள நிலவரம் அறிந்த போர் வியூக வகுப்பாளன்.. இன்ன பிற. ஆனால், இவை எதுவும் இல்லாத, யாரையும் நம்பாத, யதேச்சாதிகாரச் சிந்தனை கொண்டவராகவே பிரபாகரன் தோன்றுகிறார் உண்மையில்.

இந்த முடிவிற்கு வருவதற்கு நான் பல நூல்களை வாசித்திருந்தேன். கட்டுரையின் முடிவில், amaruvi.in தளத்தில் அனைத்து சுட்டிகளையும் காணலாம்.

The Tiger’s Pause என்னும் ஆங்கில நூல் ‘வாழும் கலை’ (AOl – Art of Living ) இயக்கத்தின் நிறுவனர் ஶ்ரீஶ்ரீ ரவிஷங்கர் அவர்கள் இலங்கை இறுதி யுத்தத்திற்கு முன்னர் செய்த சமரச முயற்சிகளை விவரிக்கிறது. இந்த நிகழ்வுகள் வெளியே வரவே விடாமல் நமது ஊடக வெளி தனது நபும்ஸகத்தன்மையைக் காட்டிக்கொண்டுள்ளது என்பது நீங்கள் அறிந்ததே. ஏனெனில், இம்மாதிரி முயற்சிகளில் ஹிந்து இயக்க குரு ஒருவர் ஈடுபட்டார், ஆனால் பிரபாகரன் தனது பயம் மற்றும் தெளிவற்ற மன நிலையினால் புறந்தள்ளினார் என்று வெளியே தெரிந்தால், ஹிந்து இயக்க குருவை வசை பாட முடியாது என்பது மட்டும் அல்லாமல், பிரபாகரனை வைத்துப் பிழைப்பு நடத்தும் ஊடகம் / அரசியல் வியாபாரிகளின் தந்திரம் வெளிப்பட்டுவிடும் என்பதும் தான் என்று நான் நினைக்கிறேன்.

நார்வே நாட்டின் தலையீட்டில் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் போர் நிறுத்தம் ஏற்படுகிறது. வழக்கம் போல் போர் நிறுத்த நேரத்தில் புலிகள் ஆயுதங்களைக் கடத்தித் தங்கள் நிலைகளை ஸ்திரப்படுத்திக் கொள்கிறார்கள். (1978ல் இருந்து இதே கதை தான்). இந்த நேரத்தில் ரணில் விக்ரமசிங்கேவைத் தேர்தலில் தோற்கடித்து, மஹிந்த ராஜபக்ஷவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பிரபாகரன் நினைக்கிறார். ஏனெனில் ராகபக்ஷ அமைதியை விரும்புபவர் அல்லர். எனவே, அவருடன் போரைத் தொடரலாம் என்பது பிரபாகரனின் எண்ணம். இதற்காகத் தமிழர்களை 2005 தேர்தலில் வாக்களிக்க விடாமல் செய்கிறார் பிரபாகரன். மஹிந்த வெற்றி பெறுகிறர். பின்னரும் அமைதி திரும்ப வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால், பிரபாகரன் போருக்கு முனைகிறார். இதற்காகப் போர் நிறுத்த உடன்படிக்கையை மீறுகிறார்.

இந்த நிலை ஏற்படுவதற்கு சற்று முன்னர் சுனாமி நிகழ்கிறது. அதற்கான நிவாரணப் பணிகள் செய்ய ஶ்ரீஶ்ரீயின் வாழும் கலை இயக்கம் முன்வருகிறது. இதன் விஷயமாகப் புலிகளிடம் பேசுகிறார்கள், அவர்களின் நம்பிக்கையைப் பெறுகிறார்கள். பின்னர் சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்குத் தியானம், யோகம் மூலம் மன அமைதி திரும்ப உழைக்கிறார்கள்.

இந்த நேரத்தில் ஶ்ரீஶ்ரீயைப் பிரபாகரனுடன் பேசி, அமைதி ஏற்படுத்த முடியுமா என்று பார்க்க வேண்டிக் கனடா நாட்டில் வசிக்கும் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் வேண்டுகிறார்கள். ஶ்ரீஶ்ரீ இசைகிறார். சில மாதங்கள் கழித்து ராஜபக்ஷவும் கேட்கிறர். இதற்காக ஶ்ரீஶ்ரீ புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள கிளினொச்சி பகுதிக்குச் செல்கிறார். இதற்கு முன்னரும் அமைதி தூதுவராகச் செல்ல அன்றைய மன்மோகன் அரசைக் கேட்கிறார் ஶ்ரீஶ்ரீ. அனுமதி மறுக்கப்படுகிறது ( தமிழகத்தில் தேர்தல் ).

புலிகளுடன் பல விதங்களிலும் பேசி பிரபாகரனுடன் உரையாடுவதற்குக் கிலினொச்சி சென்ற ஶ்ரீஶ்ரீயைப் பிரபாகரன் கடத்த முனைகிறார். பிணைக்கைதியாக வைத்துக் கொண்டு, இலங்கை அரசைப் பணிய வைக்க முயலலாம் என்று அவரது அறிவுரைக் குழுவான சிறுமதியாளர் குழாம் சொல்ல, அதனைப் பிரபாகரன் கேட்கிறார். ஶ்ரீஶ்ரீயைக் கடத்தும் எண்ணத்தை ஏனோ கைவிடுகிறார். ஆனால், அவரைச் சந்திக்க வரவில்லை.

பிரபாகரனுக்குத் தவறான மதியுரை சொன்ன புலிகளின் ஒற்றுப் பிரிவுத் தலைவர் ( பொட்டு அம்மான் ?), அவருக்கு நல்லறிவுரை சொல்லச் சென்று அவரது உதவியாளர்களிடம் உதை வாங்கித் திரும்பிய இலங்கைப் பாராளுமன்றத்தின் தமிழ் உறுப்பினர் ஒருவர் என்று பலரைப் பற்றியும் நூல் பேசுகிறது.

ஶ்ரீஶ்ரீயுடன் பேசாதது பிரபாகரன் செய்த இறுதித் தவறு. புலிகளுடன் சேர்ந்து பிரபாகரனும் அழியவேண்டியதாகிறது என்று காட்டுகிறது இந்த நூல். அத்துடன், ஆயிரக்கணக்கான சிறுவர்கள், பெண்கள் என்று பலரைப் பணையமாக வைத்துத் தனது இறுதி யுத்தத்தை நடத்திய பிரபாகரன் பற்றிய செய்தியும் மீண்டும் உறுதிப்படுத்தப்படுகிறது, இந்த நூலின் வழியே.

‘செஞ்சோலை’ என்னும் சிறுவர் முகாம் பற்றிய குறிப்பு முக்கியமானது. அதிலும், இந்த முகாம் பற்றி முன்னர் வந்த செய்திகள் பொய்யானவை என்கிற பொருள்படும்படி எழுதப்பட்டுள்ளது. ‘செஞ்சோலை’ என்பது ஊனமுற்றவர்கள், சிறுவர்கள் காப்பகம் என்று புலிகள் சொல்லிவந்த விஷயங்கள் பொய்யானவை என்றும், அது சிறுவர்களைப் புலிகள் இயக்கத்தில் சேர்க்க வைக்க வேண்டி நடத்தப்பட்ட இயக்கம் என்று The Tiger’s Pause மூலம் தெரிகிறது.

வாழும் கலை இயக்கம் முதலில் சுனாமி நிவாரணம் விஷயமாக இலங்கைக்குச் சென்ற போது, திவ்யா என்னும் பெண் அவர்களுடன் சிநேகமாகிறாள். இறுதியில் அவள் புலிகளின் ஒற்றுப் பிரிவைச் சேர்ந்தவள் என்பது தெரியவும் போது உலகம் தலைகீழானது போல தெரிகிறது.

மே-17, 2009 அன்று நடேசன் என்கிற புலித் தலைவன் ஶ்ரீஶ்ரீயைத் தொடர்புகொண்டு பேசுகிறார். எப்படியாவது போரை நிறுத்தச் சொல்கிறார். மே-18 அன்று பிரபாகரனுடன் சேர்ந்து அவரும் இறக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு தமிழ்ச்செல்வன் என்கிற புலிகளின் ஊடகப் பிரிவுத் தலைவர் ஶ்ரீஶ்ரீக்குச் செய்தி அனுப்புகிறார். தான் சொல்லியும் பிரபாகரன் அமைதிக்குத் திரும்ப விரும்பவில்லை என்றும், எப்படியாவது அவருடன் பேசிச் சம்மதிக்க வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறார். இறுதியில், பிரபாகரனின் பிடிவாதத்தல் தமிழ்ச்செல்வனும் கொல்லப்படுகிறார்.

இந்த நூலில் பிரபாகரனின் உலக ஞானத்தின் அளவு மிகக் குறைவே என்பது தெரிகிறது. அவர் யாரையும் எதற்கும் நம்பவில்லை என்பதும், தனது ஒற்றுப் படைத்தலைமையை மட்டுமே நம்பியதையும் அறிகிறோம்.

பிரபாகரன் அமைதிக்கு ஒப்புக்கொண்டிருந்தால் இலங்கையின் பிரதமராக ஆக்குகிறேன் என்று மஹிந்த ராகபக்ஷ ஶ்ரீஶ்ரீயிடம் சொன்னது மட்டும் மனதில் முள் போல் தைக்கிறது. ஒரு மனிதனின் பிடிவாதத்தால் எவ்வாறு லட்சக்கணக்கான தமிழர்கள் மாண்டனர் என்பதை இந்த நூல் காட்டுகிறது.

தமிழக ஊடக வெளியில் ஒரு துளியேனும் நேர்மை இருப்பின் இந்த நூலை மதிப்புரை செய்ய சவால் விடுக்கிறேன். யாரும் செய்ய முன்வரமாட்டார்கள் என்பதை நான் அறிவேன்.

நூல் : The Tiger’s Pause. ஆசிரியர் : ஸ்வாமி விருபாக்ஷ. பென்குயின் வெளியீடு.

-ஆமருவி 05-03-2025

Leave a comment